சென்னை: பிரதமர் மோடியின் உத்தரவு ஒரே நாளில் பணக்காரர்களையும், ஏழைகளாக்கியுள்ளது. காய்கறிக்கும், பாலுக்கும் கூட சில்லரை இன்றி தவிக்கிறார்கள் மக்கள். பணத்தை மக்களுக்கு திருப்பி தர போதிய முன் ஏற்பாடு இல்லாததால் ஏடிஎம்கள் பலவும் திறக்கப்படாமல் உள்ளதால், இந்த அவலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது எனவும், புதிய நோட்டுக்களை வாங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தடாலடியாக அறிவித்தன் விளைவு இன்று மக்கள் தெருக்களில் பணத்துக்காக தர்மம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அறிவிப்பு வெளியாகி மக்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்து கொடுக்காமல் ஜப்பான் சென்றுவிட்டார் மோடி. ஒருவேளை விமானத்தில் இருந்து கீழே மக்கள் படும் அவஸ்தையை பார்த்து நமட்டு சிரிப்பும் சிரித்திருக்கலாம். யார் கண்டது?
'தேச நலனுக்காக இதைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா, ஜியோ சிம்முக்காக காத்திருந்தவர்கள், பணத்துக்காக காத்திருக்க மாட்டீர்களா?' என்ற திடீர் தேச பக்தர்கள் கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன. ஆனால், ஜியோ சிம் தேவையில்லை என்றால், கியூவில் பாதியில் கிளம்பிவிடும் சுதந்திரம் எல்லோருக்கும் இருந்தது. பணம் தேவையில்லை என பாதியில் கிளம்ப முடியுமா? அப்படி கிளம்பினால் பசிக்கும் குழந்தைக்கு பால் வாங்கத்தான் பணப் புழக்கம் உள்ளதா?
தேச நலன் என்பது தேச மக்களின் நலனை பேணுவதுதானே தவிர அவர்களை ரோட்டில் நிறுத்துவதில் கிடையாது. கருப்பு பணத்தை ஒழிப்பதிலும், வரி ஏய்ப்பாளர்களை பிடிப்பதிலும், வரிசையாக நாம் அமர்த்திய, சர்க்கார்கள் செய்த தவறுக்கு, சாமானியர்கள் தண்டனை பெறுவது எந்த நியாயம்?
காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும்போது, டெபிட் கார்டை ஸ்வைப் செய்யும் வசதிதான் உள்ளதா? வாட்டர் கேன் கூட பைசா கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலையில், எல்லாவற்றுக்கும் கார்டுகளை நம்பியே இனியும் காலத்தை ஓட்ட முடியாது. ஒருநாள் சமாளிக்கலாம், இரு நாள் சமாளிக்கலாம். அத்தியாவசிய பொருட்களுக்கு ஆப்பு நெருங்கும்போது, கார்டை வைத்து காற்றுதான் வீச முடியும்.
சில்லரை தட்டுப்பாடு போகப்போக அதிகரித்துக்கொண்டுள்ளது. கையிருப்பு தீர்ந்ததும், பொறுத்திருந்தவர்களும் இப்போது கியூவில் நாக்கு தள்ள நின்று கொண்டுள்ளனர். இனிமேல், இந்த கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம். மாற்று ஏற்பாடு செய்யாத நிலையில், அது கோபமாக வெடிக்கலாம். இன்று திறக்க வேண்டிய ஏடிஎம்கள் கூட இன்னும் பல இடங்களில் மூடி கிடக்கின்றன. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ளவர்களோ, வங்கி ஏசி அறையில் சில்லரைகளை எண்ணிக்கொடுக்கும் வேலையில் மூழ்கி கிடக்கிறார்கள்.
போஸ்ட் ஆபீசில் தருகிறோம் என்று போக்கு காட்டி ஏமாற்றிவிட்டதால் இப்போது ஒரே மார்க்கம் வங்கிதான். அவர்களும்தான் திடீரென இவ்வளவு பெரிய வேலையை எப்படி அசராமல் பார்க்க முடியும்? சில்லரை தட்டுப்பாட்டால் அத்தியாவசிய பொருட்களை கடனுக்கு வாங்கும் நிலை கோடீஸ்வரர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சென்னை வெள்ளத்தின்போது, சேர்த்து வைத்த பணத்தை ஒரே இரவில் இழந்து கையேந்திய மக்களின் மறு ஆண்டு ஜெராக்ஸ் சோகம் இது.
'நாட்டு நலன்.. ' என கோஷமிட்டவர்களும், நாலு நாளாக சில்லரை கிடைக்கவில்லை என்றதும் நைசாக பம்மி விட்டனர். இனிமேல், அந்த கோஷம் எடுபடாது. பசித்த வயிறுகள் பாலுக்காக அழுகின்றன. பணத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு பாரத நலன் பேசுவது பைத்தியக்காரத்தனமாகிவிடும். இனியும் விழித்துக்கொண்டு உடனே நோட்டு தட்டுப்பாட்டை நீக்காவிட்டால், அது மத்திய அரசு தனக்குத்தானே வைத்துக்கொண்ட வேட்டாகத்தான் மாறும்.
Source: tamil.oneindia.com
|