மோடியின் சிலந்தி வலையில் சிக்கும் சிறு வணிகம் – சிறு தொழில் !

Posted by S Peer Mohamed (peer) on 12/28/2016 1:32:39 AM

கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று தனது மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ”ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள்; பணக்காரர்கள் தூக்கமாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் மோடி. ஆனால் பலசரக்குகள், காய்கறிகள், பழங்கள் விற்கும் சிறுவணிகர்களும், சிறு- குறுந்தொழில் முனைவோரும், சிறு விவசாயிகளும், லாரி உரிமையாளர்களும் தொழிலும் விவசாயமும் வியாபாரமும் செய்ய முடியாமல் தத்தளிப்பதோடு, கூலி விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள் – என நாட்டின் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்கள்தான் வேலையில்லாமல் பட்டினியால் தூக்கமின்றிப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எட்டாயிரம் கோடி ரூபாய் பெறுமான மஞ்சள் விற்பனையாகாமல் தேங்கி நிற்கும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்ட மஞ்சள் சந்தை.

 

மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியின் காரி பாவோலி எனுமிடத்திலுள்ள ஆசியாவின் மிகப் பெரிய வெல்ல மண்டி முடங்கிக் கிடக்கிறது. சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சென்னை – கோயம்பேடு சந்தையில் மக்கள் வரத்து 80 சதவீதம் குறைந்து, வெறிச்சோடிக் கிடக்கிறது. தினந்தோறும் 4 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்த இக்காய்கறிச் சந்தையில் தற்போது ரூ.1 கோடி அளவுக்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை. இங்குள்ள ஆயிரக்கணக்கிலான சிறு வியாபாரிகள், அவர்களைச் சார்ந்துள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகி நிற்கின்றனர். மோடியின் திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 21 லட்சம் சிறு வணிகர்களின் வாழ்க்கை மூன்றாண்டுகளுக்குப் பின்னோக்கிப் போய்விட்டது என்கிறார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவரான விக்கிரம ராஜா.

சில ஆயிரங்களைக் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்து அதில் கிடைக்கும் அற்ப வருவாயில் வாழ்க்கையை ஓட்டிவரும் தள்ளுவண்டி வியாபாரிகள், பழங்களும் காய்கறிகளும் அழுகிப் போகும் அபாயத்தில் இருப்பதால், எந்த காய்கறியானாலும் கிலோ 5 ரூபாய் என்று கூவியழைத்தாலும் வாங்குவதற்கு யாரிடமும் பணமில்லை. “சிகரெட் வித்தா பத்து காசு, கலர் வித்தா இருபத்தஞ்சு காசு, பால் வித்தா ஐம்பது காசுன்னு ஓடிக்கிட்டிருந்த என் பொழப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டார் மோடி” என்று பெட்டிக்கடைக்காரர்கள் புலம்புகிறார்கள். சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான கட்டுமானத் திட்டங்களில் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், பெயிண்டர், தச்சுவேலை செய்பவர்கள் – என ஏறத்தாழ 5 லட்சம் கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பரிதவிக்கிறார்கள். சென்னை – புதுப்பேட்டையில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் 500 ரூபாய்க்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் சம்பளம் கூட தரமுடியாததால் பல மெக்கானிக்குகள் வேலையிழந்துள்ளனர்.

2020-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் வகையில் திருப்பூரின் பின்னலாடை – ஆயத்த ஆடைத்தொழிலை விரிவாக்கப் போவதாக பிரதமர் தனது ”விஷன் 2020” திட்டத்தின் மூலம் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால் அவரது பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், டாலர் நகரம் என்றழைக்கப்பட்ட திருப்பூர் இன்று செல்லாக்காசு நகரமாகிவிட்டது.

வாடிக்கையாளரை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போன சென்னை நகர நடைபாதை வியாபாரி.

 

திருப்பூரிலுள்ள ஏறத்தாழ 2,000க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்கூடங்கள் அனைத்தும் ஏறத்தாழ லே-ஆப் விடப்பட்ட நிலையில் உள்ளன. சட்டைகள் உற்பத்தி செய்யும் தென்னிந்திய சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பு (SISMA) தொழிலாளர்களுக்கு ரொக்கமாக கூலி கொடுக்க முடியாத நிலையில், வாரத்துக்கு 15 ஷிப்டுகளுக்குப் பதிலாக 6 ஷிப்ட் மட்டுமே வேலை கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் மழை-வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அரசின் புறக்கணிப்பால் அதிலிருந்து மீளமுடியாமல் தத்தளித்து, பின்னர் மெதுவாக உயிர் பெற்ற ஆயிரக்கணக்கான சிறு – குறுந்தொழில் நிறுவனங்கள் மீண்டும் இப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதுமுள்ள அனைத்து சிறு, குறுந்தொழில்கள் ஏறத்தாழ 40 முதல் 60 சதவீத அளவுக்கு நட்டமடைந்துள்ளன என்கிறார் கோவை கொடிசியா அமைப்பின் முன்னாள் தலைவரான இளங்கோ. அன்றாடம் பல நூறு கோடி ரூபாய் வரை புரளக்கூடிய ஈரோடு ஜவுளித் தொழிலும், மஞ்சள் சந்தையும் முடங்கிப் போய் விவசாயிகளும் வியாபாரிகளும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

தூத்துக்குடி, ராமேஸ்வரம் மாவட்டங்களில் நாள்தோறும் ரூ.10 கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துவந்த மீன்பிடி தொழில் முடங்கிப் போயுள்ளது. மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்க வியாபாரிகள் வருவதில்லை. மீன் பிடி தொழிலுக்கு பயன்படும் டீசல், ஐஸ் கட்டிகள் வாங்குவதற்கும் மீனவர்களிடம் பணமும் இல்லை. இதனால் இம்மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல், பல்லாயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வால்பாறை, ஆனைமலை மற்றும் கேரளத்தின் வயநாடு, மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 10,15 கி.மீ. தொலைவிலுள்ள வங்கிக்கு வந்து பணத்தை மாற்ற போக்குவரத்து செலவாகும், மேலும் ஒரு நாள் கூலியையும் இழக்க நேரிடும் என்பதால், பெரும்பாலோர் தங்களிடமுள்ள நோட்டுகளை மாற்ற முடியவில்லை. இத்தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஒரு மாத காலமாக முறையாக சோறு தின்ன முடிவதில்லை. இம்மக்கள் ஓட்டுப் போட வேண்டுமென்று கழுதை, குதிரைகள் மீது ஓட்டு எந்திரத்தை தூக்கி வைத்து ஆறு, மலை, காடுகளைத் தாண்டி வந்து ஜனநாயகக் கடமையாற்றச் சொல்லும் ஆட்சியாளர்கள், அதே மாதிரி இம்மக்களைத் தேடி வந்து ரூ. 500, 1000 நோட்டுகளை மாற்ற ஏற்பாடு செய்ய முன்வரவில்லை.

வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் பெங்களூரு நகர வணிகத் தெரு.

 

கூட்டுறவு சங்கங்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க வரம்பும் கட்டுப்பாடும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளதால் கேரளத்தின் முந்திரி, ஏலக்காய், மிளகு, பாக்குத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை. தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களால் வங்கிகளிலிருந்து பணத்தை எடுக்கவோ, பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு கொடுக்கவோ முடியாததால், மாடுகளுக்குத் தீவனங்கள் வாங்கக் காசில்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

குஜராத்தின் ஜவுளித் தொழில் மையமான சூரத்தில் 165 ஜவுளிச் சந்தைகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் திடீர் அறிவிப்புக்குப் பிறகு, வாரத்துக்கு பாதி நாள்தான் இவர்களுக்கு வேலை கொடுக்கப்படுவதால், ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பட்டினி கிடக்கின்றனர். ஜவுளி உற்பத்தியோ வீழ்ந்து கிடக்கிறது. இதுவொருபுறமிருக்க, சூரத்தின் செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழில் முற்றாக முடங்கிவிட்டது.

தமிழகத்தில் திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. மோடியின் செல்லாக்காசு அறிவிப்பால், 2 கோடி கிலோ அளவுக்கு கறிக்கோழி தேக்கம் அடைந்து ரூ.200 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், தனது பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் சிறு தொழில்களையும் சிறு வணிகத்தையும் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தி, அவற்றைச் சார்ந்துள்ள கோடிக்கணக்கான உழைப்பாளர்களை வீதியில் வீசியெறிந்துள்ளார் மோடி. நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலையால் ஏற்கெனவே வேலையின்மை தீவிரமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த அதிரடி அறிவிப்பானது, ஏதாவது கைத்தொழில், சிறுவியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் நிரந்தரமாகவே மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

நம் நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிகமான அளவில் வேலை வாய்ப்பினை அளித்திடும் துறையாக இருப்பது சிறுதொழில்கள்தான். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் சிறு தொழில்கள் உள்ளன. நாட்டில் ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறையாக சில்லறை வணிகம் இருக்கிறது.

இருப்பினும், தனியார்மய – தாராளமயமாக்கத்துக்குப் பின்னர், அரசின் புறக்கணிப்பாலும், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பாலும் சிறு தொழில்கள் மவுனமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறுந்தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. நாடெங்குமுள்ள 5.8 கோடி சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ள போதிலும் 4 சதவீத நிறுவனங்களுக்குத்தான் வங்கிக் கடன் கிடைத்திருப்பதை அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தமது உற்பத்தியில் 20 முதல் 30 சதவீத வேலைகளை குறு மற்றும் சிறு நிறுவனங்களிடம் கொடுத்து வாங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டாலும், அதனை ஆட்சியாளர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அரசின் பொருளாதாரக் கொள்கையும் குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லை. பொருளாதார மந்தம், தேக்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் தொழிற்கொள்கை ஆகியவை காரணமாக ஜாப் ஆர்டர் கிடைக்காமல், ஏற்கெனவே குறு மற்றும் சிறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டு நிற்கின்றன.

இதுவும் போதாதென்று சிறுதொழில் பட்டியலில் இருந்து ஊறுகாய், மெழுகுவர்த்தி, ஊதுவத்தி, தீக்குச்சி, பூட்டு, ரொட்டி, நோட்டுப் புத்தகங்கள், ஸ்டீல் பீரோ, சேர், ஷட்டர், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட 20 பொருட்களை நீக்கி மைய அரசு உத்தரவிட்டுள்ளதால், இத்தொழில்களை இனி கார்ப்பரேட் நிறுவனங்களே நேரடியாக மூலதனமிட்டுத் தொடங்க முடியும். இதுவரை இத்தொழிலை நடத்திவந்த குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் இனி கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டிபோட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன.

முன்பேர வர்த்தகம், இணையதள வர்த்தகம், ஒப்பந்த விவசாய உற்பத்தி, பெரும் கிடங்குகளில் நவீன வசதிகளுடன் பதுக்கல் ஆகியவற்றின் மூலம் சந்தைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் உணவுப் பொருட்கள் தானியங்கள் உள்ளிட்டு பல்வேறு பண்டங்களின் மேல் நடக்கும் இந்தச் சூதாட்டச் சந்தையின் மதிப்பு 45 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாகும். இந்தச் சூதாட்டத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வியாபாரம் முடங்கிப் போனதால் வேலையேதுமின்றிப் போன டெல்லி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்.

 

இத்தகைய தொடர் தாக்குதல்களால் ஏற்கெனவே நிலைகுலைந்து போயுள்ள சிறு வணிகர்களையும் சிறுதொழில் புரிவோரையும் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிந்தேதான் மோடி கும்பல் இந்த அதிரடி தாக்குதலை நடத்துகிறது. கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும் தமது உடைமைகளை அடகுவைத்தும் கையைக் காலை ஊன்றி சிறுதொழில் புரிவோரும் சிறு வணிகர்களும் சுதேசி சவடால் அடித்த பா.ஜ.க.வை பெரிதும் நம்பி ஆதரித்தனர். அவர்களின் முதுகின் மேலேறி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. இப்போது அவர்களை எட்டி உதைத்துக் கொண்டிருக்கிறது. தமது வாழ்வாதாரம் முடங்கிவிட்டதை எண்ணி சிறுதொழில் முனைவோரும் சிறு வணிகர்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணெதிரே இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி கும்பல் இவர்களுக்கு வாயளவில்கூட ஆறுதல் கூற முன்வரவில்லை.

மாறாக, வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைககளில் கருப்புப்பணம் உருவாக வாய்ப்பில்லை என்றும், ரசீதுகளே இல்லாமல் ரொக்கப் பரிமாற்றத்தின் மூலம் நடக்கும் வியாபாரத்தால்தான் கருப்புப்பணம் உருவாகி வருவதாகவும் மோடி கும்பல் சிறுவணிகர்கள் மீது அநியாயமாகப் பழிபோடுகிறது. வரி செலுத்தாமல் ஏய்க்கும் நோக்கத்தோடுதான் வங்கி வழியான வர்த்தகத்துக்கு இவர்கள் மாற மறுக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறது. ஆனால், பெருமளவிலான கருப்புப்பணம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் வழியாகத்தான் திரள்கிறது. இந்த வர்த்தகத்தின் போலியான கம்ப்யூட்டர் பில்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் சென்று வருகின்றன.

சிறு தொழில் முனைவோர், சிறு வணிகர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து தனது வரி வருவாயை அதிகரித்துக் கொள்ளத்தான் மோடி கும்பல் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே 28 சதவீத அளவிற்கு மறைமுக வரிகளையும், அதற்கும் மேலாக செஸ் வரிகளையும் திணித்துச் சுரண்டுவது போதாதென்று, இந்த வர்க்கத்தினரை நேரடி வருமான வரி வலைக்குள்ளும் சிக்க வைப்பதுதான் மோடியின் திட்டம். சிறு வணிகர்களும் சிறுதொழில் புரிவோரும் இனி வங்கி மூலமாகத்தான் தமது வரவு – செலவுகளைச் செய்யவேண்டுமென அவர்கள் மீது கட்டாய வரிவிதிப்பைத் திணிப்பது, சில்லறை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ், வால்மார்ட், பிக் பஜார் போன்ற பெரும் வணிகத்தை கொழிக்க வைப்பது, வங்கிகளிலுள்ள மக்கள் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கி வராக்கடனாக அவற்றைத் தள்ளுபடி செய்வது என்ற நோக்கத்துடன்தான் மோடி கும்பல் இந்த அதிரடித் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே சிறுதொழில், சில்லறை வணிகம் மற்றும் விவசாயத்தை அறவே புறக்கணித்து நசிவடையச் செய்திருப்பது போதாதென்று, இப்போது இந்தத் துறையினரை மரணக் குழிக்குள் தள்ளிவிட்டுள்ள மோடி அரசுக்கு சிறுவணிகர்களும் சிறு தொழில் நடத்துவோரும் எதற்காக வரி கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பி போராடுவதைத் தவிர, இனி வேறு என்ன வழியிருக்கிறது?

– தனபால்

புதிய ஜனநாயகம்






Other News
1. 03-11-2025 கட்டளைத் தெருவை சேர்ந்த பறவை சேக் என்ற சேக்_செய்யது_சபீன் வாகன விபத்தில் வஃபாத் - S Peer Mohamed
2. 01-11-2025 தமிழகத்தில் SIR (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன? - S Peer Mohamed
3. 14-10-2025 Support Palestine - Around the world - 1 - S Peer Mohamed
4. 05-10-2025 எகிப்தில் பேச்சுவார்தை தொடங்குகிறது - ஹமாஸ் தலைவர்கள் வருகை. - S Peer Mohamed
5. 27-09-2025 ஐ.நா வில் அவமானப்பட்ட இஸ்ரேல் தலைவர் - S Peer Mohamed
6. 04-05-2025 இஸ்ரேல் காட்டுத் தீ - பச்சை பொய் கூறி சிக்கிய நெதன்யாகு. - S Peer Mohamed
7. 12-04-2025 553 Day: இஸ்ரேல் ராணுவத்திற்குள் புரட்சி - பதவி விலகும் விமானிகள் - S Peer Mohamed
8. 12-04-2025 அமெரிக்கா தாக்குதல் நிறுத்த கோரிக்கையை நிராகரித்த ஹவுத்திகள் - S Peer Mohamed
9. 21-01-2025 இஸ்ரேல் சொல்வதை இனிமேல் யாரும் நம்புவதற்கும் தயாரில்லை. - S Peer Mohamed
10. 21-01-2025 காஸாவின் போராட்டம் எப்படி வெற்றியாக இருக்க முடியும்? - S Peer Mohamed
11. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
12. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
13. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
14. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
15. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
16. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
17. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
18. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
19. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
20. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
21. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
22. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
23. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
24. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
25. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
26. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
27. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
28. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
29. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
30. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..