மாடும் மனிதர்களும்
ஒருவரை வேலை வாங்கும்போது அவரோடு பேச்சுக்
கொடுத்துக் கொண்டே வேலை வாங்கினால் வேலை
பார்ப்பவருக்கு வேலை கஷ்டமாக இருக்காது. ஒரு வேளை
பேச்சு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கும்! வேலைக்கார
பெண்மணிகளுடன் எஜமானிகள் வீட்டு விஷயம் பேசும்
விபரீதம் இப்படித்தான் வந்திருக்கும்!
அது ஒரு வயல். காளை மாடு முன்னாலே போக,
ஏரின் நுகத்தடியை அதே தடிபோன்ற தன் கைகளால்
அழுத்தியபடி பின்னாலே ஒரு விவசாயி.. காளை
மாட்டுக்குக் கஷ்டம் தெரியக் கூடாதே என்று பேசிக்
கொண்டே உழுகிறார் விவசாயி!
"மாடு நீ! நீ முன்னால போற.. மனுஷன் நான்.. உன்
பின்னால வர்றேன்.. பாத்தியா.. இதுதான் தலை எழுத்து..
விவசாயம்கிற தொழில்லயே நீ முன்னால.. நான் பின்னால"
என்று ஜஸ்கட்டியை மாட்டின்மீது வைத்தார் விவசாயி.
கொம்பை, கொம்பை ஆட்டிக் கொண்டு விவசாயியை
அங்கீகரித்தது காளை மாடு. பாராட்டுக்கு எந்த
மாடுதான் மயங்காது! அடடா.. இந்த மனித ஜாதிதான்
எவ்வளவு மேலானது. நம்மை மனம் விட்டுப் பாராட்டுகிறது
என்று குளிர்ந்து பொய் தன் மேல்தோலை ஒரு முறை
சிலிர்த்துக் கொண்டது!
"பாராட்டுவதே ஒருவரை மேலும் மேலும் அடிமையாக்க"
என்பது மனித ஜாதியின் சாமார்த்தியம். அது
மாட்டுக்கு எங்கே புரியப் போகிறது? விவசாயி
தொடர்ந்தார்.
"நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி!
அதனால் வர்ற விளைச்சல் உனக்குப் பாதி, எனக்குப்
பாதி." காளை மாட்டுக்குத் தலை சுற்றியது. 'ஆஹா..
மனித ஜாதிக்கு எவ்வளவு நேர்மை! பாதிப்பாதி பங்கு தர
யாருக்கு மனசு வரும்' என்று மகிழ்ந்து போனது.
"பாதிப் பாதின்னா எப்படிப் பங்கு வைக்கலாம்..நீ
முன்னால போறதால முன்னால கிடைக்கிறது முன்னால
வளர்றது எல்லாம் உனக்கு. நான் பின்னால வர்றதாலே
பின்னால வர்றது எனக்கு.. சரிதானா?" என்றார்
விவசாயி.
முன்னால.. பின்னால என்ற அளவுகோலை விவசாயி
துல்லியமாகப் பிடித்தது குறித்து மாட்டுக்குச் சந்தோஷம்.
"முதல்ல வரப்போறது எல்லாம் எனக்கா?" என்று
கண்ணை மலங்க மலங்க விழித்தது மாடு. வஞ்சனையாக
நமட்டுச் சிரிப்பு சிரிந்திக் கொண்டான் மனிதன்.
விதையிட்டு, நாற்று நட்டு, சிலகாலத்தில் பச்சைப்
பசேல் என்று இலை விரித்தது வயல். மட்டுக்கு வாயெல்லாம்
எச்சல்! எஜமானனைப் பார்த்தது. " அவசரப்படாதே
இந்த இலை எல்லாம் உனக்கு! உனக்குத் தான். அப்புரமாதர்றேன்!
முதல்ல இலை வந்தது இது உனக்கு..இதுல
அப்புறமா ஒண்ணு வரும் அது எனக்கு" என்றார்
சாமர்த்தியமான மனிதர்.
இலைக்கு மத்தியில் குலை குலையாய் நெல் அரும்பு
கட்டி குதிரைப் பிடரி மாதிரி குவிந்து சாய்ந்தது. அறுவடை
செய்ததும் வைக்கோல் மாட்டுக்கு! நெல் முழுவதும்
மனிதனுக்கு! முதலில் வந்த வைக்கோல் முன்னால் போன
மாட்டுக்கு! பின்னால் வந்த நெல்லோ பின்னால் போன
மனுஷனுக்கு! மாடு என்ன கோர்ட்டுக்கா போக முடியும்?
பாகப் பிரிவினையில் அநீதி இருக்கிறது என்று
விவசாயியைப் பரிதாபமாகப் பார்த்தது!
"கவலைப்படாதே! நெல்லில் பங்கு தர்றேன்
அதிலியும் பாதி உனக்கு.. பாதி எனக்கு.. முன்னால வர்றது
உனக்கு. பின்னால வர்றது எனக்கு" என்று உத்தம
மானுட ஜாதி நீதி சொன்னது! நெல்லை உலர வைத்து
உடைத்துப் புடைத்ததும் முன்னால் வந்தது உமி.. தவிடு..
அதெல்லாம் மாட்டுக்கு! பின்னால் வந்த முத்துமுத்தான
அரிசி முழுவதும் நீதிமான் மனிதனுக்கு!
பங்கிட்டிலும் நியாயம் இல்லை என்று பரிதாபமாக
எஜமானரைப் பார்த்து மாடு. "கவலைப்படாத..
அரிசியைச் சோறாக்கி அதுல பங்கு தர்றேன்." என்றது
மனித ஜாதி. சோறாக்கி வடித்த போது முன்னால வந்த
கஞ்சி முழுவதும் மாட்டுக்கு..முத்து முத்தான அரிசிச்சோறு
மனிதனுக்கு! மாடு முரண்டு பிடித்தது. முன்னால..
பின்னால.. என்ற பங்களிப்பில் மனித ஜாதி தனக்கு அநீதி
இழைப்பதாக வருந்தியது. ஒரு முறையாவது முன்னால
மனிதனுக்கு.. பின்னால மாட்டுக்கு என்று நீதி வழங்கு
என்று மாடு போராடியது.
"அடுத்த முறை முன்னால எனக்கு..பின்னால
உனக்கு" என்று அறிவித்த மனித ஜாதி அதை அப்படியே
கடைப் பிடித்தது! பொங்கல் பண்டிகை வந்தது. முதல்நாள்
பொங்கல் மனிதனுக்கு..மறுநாள் பொங்கல் மாட்டுக்கு..
எப்படி நியாயம்?
அதனால்தான் இன்று பொங்கல் மனிதனுக்கு
நாளை மாட்டுக்கு "மாட்டு பொங்கல்"
-பீர் முஹம்மத்