Posted by S Peer Mohamed
(peer) on 1/14/2017 12:50:20 AM
|
|||
ஏன் ஜல்லிக்கட்டு!!
வேட்டையாடிய சமூகத்திலிருந்து நாகரிக வளர்ச்சியின் அடுத்த நிலையாய் நாம் உருமாறியதுதான் விவசாய சமூகம். ஆறுகளின் கரை ஓரங்களில் கூடாரமிட்டு நிலங்களை உழுது பயிர் செய்யத் தொடங்கினோம். நம் தொழிலுக்கு உதவ வசதியாய் நாம் நம்முடன் சேர்த்துக் கொண்டவைதான் ஆடுகளும் மாடுகளும். இயற்கையில் குவிந்துகிடந்த வளங்களை நமக்கு உதவும் கருவிகளாக மாற்றிக்கொண்டோம்.
அக்கருவிகளை கடவுளாகவே வழிப்பட்டோம். அதில் ஒரு முக்கிய கருவி தான் ‘மாடு’. ஏரைப்பூட்ட உழுதது. இரண்டாம் தாயாய் பால் பொழிந்தது. சாணம் உரமானது. கோமியமும் புனிதமானது. விவசாயமே தன் முதுகெலும்பாய் கொண்டு விளங்கிய இந்தியாவில் மாடு கடவுளுக்கு இணையாய் வழிப்படப் பட்டது. கோமாதா என்று வழிப்பட்டோம். கொம்பிற்கு மஞ்சள் பூசி திலகமிட்டு மாட்டுப் பொங்கல் என்று விழா எடுத்துக் கொண்டாடினோம். இந்த மாடுகளின் ஆரோக்கியமான இனப் பெருக்கிற்கும் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு உண்டு என்று கேட்ட போது வியப்பாகவே இருந்தது. ஆராய முற்பட்டேன். என் கண்கள் விரிந்தன. ‘கற்றது கை மண் அளவு’ என்று ஔவை சொன்னது உண்மைதான். என் ஊர்…எனக்கு சோறு போடும் என் கிராமம், என் விவசாயி… அவர்கள் வாழ்வியல் எனக்கு தெரியவில்லை.
300 க்கும் மேலான மாடு வகைகள் கொண்டிருந்த நம் நாட்டில் இன்று வெறும் 30 க்கும் குறைவான மாடு வகைகளே பரிதாபமாய் உலாவிக்கொண்டிருக்கின்றன. நம்மை அதிரவைக்கும் இந்தப் புள்ளி விவரம். பார்க்கப்போனால் மிருக நல ஆர்வலர்கள் இதற்குத் தானே பதைபதைக்க வேண்டும்? வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் விவசாயி என்றும் ஏழையே. அவன் தன் பசுவின் இனம் பெருக்க காளைக்கு போவதெங்கே? ஜல்லிக்கட்டில் முதலில் வரும் காளையை அந்த ஊர் மக்கள் தங்கள் பசுக்களுடன் சேர்த்து இனம்பெருக்க வைப்பதே வழக்கம். பின் ஜல்லிக்கட்டு இல்லாத ஊர்களில்? பிறக்கும் கன்று பசுவாக (female cow – heifer) இருந்தால் அது தப்பிக்கும். காளையாக இருந்தால், அதை பேணிக் காக்க முடியாமல், பிறந்த ஒரு வாரத்திற்குள் அந்தக் கன்று சந்தைக்கு வந்துவிடும்… கறிக்கடையில் தொங்கும் இளம் மாமிசமாய்! ஜெர்சி மாடுகள் போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மாடுகள் தான் இன்று பெருகிக்கொண்டு வருகின்றன. விவசாயிகள் பெரும்பாலும் இம்மாடுகளுக்கு தீனிப்போட இயலாது. கட்டுப்படி ஆகாத நிலையில் பால் கறவை, பால் விநியோகம் அனைத்தும் நம் ‘corporate’ அண்ணன்கள் கைகளுக்கே! நம் நாட்டு மாடுகளுக்கு ‘grasslands’ எனப்படும் நம் புல் வெளியில் மேய்தலே போதும். அனால் இறக்குமதி மாடுகளுக்கு? ராஜஸ்தான் பாலைவனத்தின் மணல் பரப்பில் நடக்கும் நாட்டு மாடு ‘தார்பர்க்கர்’… இந்த மாட்டை ஒழித்துவிட்டு அங்கு ஜெர்மன் மாட்டை நடக்கவிட்டால் என்னாகும்! ஜல்லிக்கட்டு, ‘Eco system’ எனப்படும் சுற்றுச் சூழல் அமைப்பை பாதுகாக்க நம் முன்னோர்கள் அன்றே கொண்டிருந்த ஒரு ஏற்பாடு.
அன்று போர்க்காலங்கள் அல்லாது பிற நேரங்களில் தமிழன் அவன் வீரத்தைக் காட்ட இப்படிப்பட்ட கலங்களும் தேவையாய் இருந்தனப் போலும். முதல் புண், முதல் ரத்தம் என்று பயந்து போரில் புறமுதுகு காட்டி ஓடாமல் நின்று போரிட்டு ஜெயிக்க நம் தமிழனின் வீரத்திற்கு பட்டைத்தீட்டும் கலங்களாக ஜல்லிக்கட்டு கலங்கள் இருந்திருக்கக்கூடும். நகரமும் கிராமமும் இரண்டு தீவுகளாய் இருப்பதே பல அறியாமைகளுக்கு காரணம். கிராமங்கள் ‘ஏறு தழுவுதலுக்கு’ முன் நம் நகரங்கள் ‘கிராம ததழுவுதலை’ மேற்கொள்ளட்டுமே! பீட்டா போன்ற நிறுவனங்கள் செய்ய முயல்வதுதான் என்ன? மாடுகளின் கால்களுக்கு சூடுவைத்து லாடம் அடித்தல், ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் நடக்க வேண்டிய யானையை கோவில் யானை என்று சொல்லி காலில் சங்கிலி இட்டு கட்டி வைத்தல் இவையெல்லாம் மிருக வதையைத் தானே சாரும்? இன்று இந்தியா மாட்டு இறைச்சி (beef) ஏற்றுமதியில் முதலிடம்!!
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |