Posted by S Peer Mohamed
(peer) on 1/18/2017 7:30:09 AM
|
|||
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கி வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்து விட வழி செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தொடங்கியுள்ள போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.
சென்னை/மதுரை: கொட்டும் பனியோ, கொளுத்தும் வெயிலோ எதுவும் எங்களை செய்யாது என்று கூறி தமிழர்களின் பாரம்பரியத்தைக் காக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக அவசரசட்டம் இயற்ற வேண்டும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக உத்தரவாதத்தை மாநில அரசு அளிக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. ஜல்லிக்கட்டுக்கு பெயர்பெற்ற அலங்காநல்லூரில் போராட்டம் 3வது நாளாக நடைபெற்று வருகிறது. பெண்களும், குழந்தைகளும், பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் அமர்ந்துள்ளனர். எங்க பிள்ளைகளுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு
வாடிவாசலை திறந்து காளைகளை அவிழ்த்து விட வேண்டும், அதுவரை எங்களின் போராட்டம் தொடரும் என்பது இவர்களின் உறுதி. இதே உறுதியான மனநிலையோடுதான் 48 மணி நேரத்திற்கும் மேலாக இரவும் பகலுமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெரீனாவில் குவியும் கூட்டம்
சென்னை மெரீனா கடற்கரையில் சிறு தீப்பொறியாக தொடங்கிய போராட்டம், இப்போது எரிமலையாக சீறத் தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் மாணவர்கள் செல்லவில்லை. அலுவலகத்திற்கும் செல்லாமல் இளைஞர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் மனிதச் சங்கிலி
மதுரை தமுக்கம் மைதானத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கல்லூரிகளுக்கு செல்லாமல் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர் இளைஞர்கள்.
கோவையில் கொந்தளிப்பு
கோவையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பட்டாளம் விடிய விடிய போராடினர். ஜல்லிக்கட்டு எங்களின் பாரம்பரியம். அதை அழிக்க நினைக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதே இவர்களின் வலியுறுத்தல்.
பாளையில் போராட்டம்
நெல்லை பாளையங்கோட்டை மைதானத்தில் கடும் கொந்தளிப்புடன் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது எங்களின் வாழ்வாதார பிரச்சினை. நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை விட்டுத்தரமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தகிக்கும் அனல்
ஜல்லிக்கட்டு நடைபெறுவது சில மாவட்டங்களில்தான் என்றாலும், அது எங்களின் பாரம்பரியம் எதற்காகவும் நாங்கள் அதை விட்டுத்தர மாட்டோம் என்று கூறி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் அலை அலையாய் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரின் அறிவிப்பு மாணவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்துமா?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pro-jallikattu-protests-flare-many-cities-tamil-nadu-272021.html |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |