சென்னை: ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏகப்பட்ட பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. எகிப்தில், சீனாவில், பால்டிக் நாடுகளில், சோவியத் யூனியனில் நடந்த மக்கள் போராட்டங்களைப் பற்றி செய்திகளில் மட்டுமே பார்த்த இந்திய மக்களுக்கு சொந்த நாட்டிலேயே ஒரு மாபெரும் மக்கள் போராட்டம் எழுச்சிகரமாக நடந்து வருவது மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டம் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்தியாக வழங்கியபடி தொடர்கிறது. இதுதாண்டா உண்மையான போராட்டம்.. இதுதான் உண்மையான மக்கள் சக்தி என்பதை எடுத்துக் காட்டி வரலாறு படைத்துள்ளது மெரீனாவிலும், பிற பகுதிகளிலும் திரண்டு நிற்கும் இளைஞர் சக்தி.
இந்தப் போராட்டத்தில் காணப்படும் மிகப் பெரிய விஷயம்.. மத மாச்சரியம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக தமிழர்களாக கூடி நின்று குரல் கொடுத்துக் கொண்டிருப்பதுதான். இதில் எச். ராஜா போன்றோர் மதத்தை திணித்து மாய்மாலம் காட்ட முனைகிறார்கள் என்றாலும் கூட நாங்க தமிழர்கள்.. எங்களுக்குள் வேறு எந்தப் பேதமும் இல்லை என்பதே போராட்டக்களம் காட்டும் உண்மையாக இருக்கிறது.
எச். ராஜா பேச்சைப் பாருங்க பாஜகவின் தேசிய செயலாளரான எச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் முஸ்லீம்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதை வைத்து இவர்கள் எல்லாம் இனிமேல் மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம் என்று சொல்வார்களா என்று கேட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அதுதொடர்பாக சூடான வாதப் பிரதிவாதங்களும் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஓடிக் கொண்டுள்ளன.
நாம் தமிழர்கள் ஆனால் ராஜா போன்றோருக்குத்தான் இது அரசியல் மதப் பார்வை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மக்களுக்கோ, இளைஞர்களுக்கோ அப்படி எந்த அவசியமும் இல்லை. அத்தனை பேரும் அத்தனை ஒற்றுமையாக, அண்ணன் தங்கையாக, அக்கா, தம்பியாக ஓடி ஓடி போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதே அவ்வளவு சந்தோஷமாக உள்ளது.
இதுதான் உண்மையான புதிய இந்தியா கொஞ்ச நாட்களுக்கு முன்பு சொல்லிக் கொண்டிருந்தார்களே புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று.. உண்மையில் இதுதான் புதிய இந்தியா.. அந்த புதிய இந்தியா மெரீனாவில் பிறந்துள்ளது, அலங்காநல்லூரில் பிறந்துள்ளது, கோவையில் பிறந்துள்ளது.. தமிழகத்தில் பிறந்துள்ளது. அதைத்தான் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது மக்களின் ஜல்லிக்கட்டுப் புரட்சி
5 நாட்களாக கடந்த 5 நாட்களாக இளைஞர்களும், பெண்களும் மெரீனாவில் வீரப் போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். வரலாறு காணாத போராட்டம் இது. இரவு பகல் பாராமல் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். கொட்டும் பனி, கொளுத்தும் வெயில் என எதைப் பற்றியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தாங்கள் எவ்வளவு பெரிய சக்தி என்பதைக் கூட அவர்கள் படு கேஷுவலாக எடுத்துக் கொண்டு அதை நடத்தி வரும் பாங்கு இருக்கிறதே.. வியக்க வைக்கிறார்கள் தம்பிகளும், தங்கைகளும்.
மதமாச்சரியம் இல்லாமல் இந்தப் போராட்டத்தில் மதத்திற்கு இடமில்லை. ஆண் பெண் பால் பாகுபாடு இல்லை. எல்லோரும் ஒன்றே. ஏன் மொழி மாச்சரியம் கூட இங்கு இல்லை. ஆந்திராவைச் சேர்ந்த சில்வியா என்ற கிறிஸ்தவர் இதற்கு நல்ல உதாரணம். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். கடந்த 5 நாட்களாக இங்கே அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் ஜல்லிக்கட்டுக்காக. இன்னொருவர் கபீல் அகமது. நரம்பு புடைக்க ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும் கபீல் கூறுகையில் ஜல்லிக்கட்டு இந்துக்களின் பண்டிகை அல்ல. பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்ல. அது கலாச்சாரம், பாரம்பரியம். அது எங்களுக்கு வேண்டும். அது எங்களுக்கு முக்கியம் என்று உரத்த குரலில் கூறுகிறார்.
முதலில் தமிழர் ராஜா என்பவர் சிங்கப்பூரிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். போராட்டக்களத்தில் உள்ளோருக்கு உணவு, தண்ணீர் விநியோகம் செய்ய ரூ. 1லட்சம் தானமாக கொடுத்துள்ளார். கூடவே அமர்ந்தும் போராடி வருகிறார். முதலில் நாங்கள் தமிழர்கள். பிறகுதான் மதங்கள் எல்லாம். எங்களுக்குள் எந்தப்ப ாகுபாடும் இல்லை. உணர்வுக்காக இங்கு அமர்ந்துள்ளோம் என்றார்.
வீட்டுக்காரரோடு வந்த இல்லத்தரசி கலைமகள் என்பவர் கூறுகையில், நான் டிவியில் போராட்டத்தைப் பார்த்தபோது இதை விட எதுவும் முக்கியம் இல்லை என்று உணர்ந்தேன். எனது வீட்டுக்காரரை லீவு போடச் சொல்லி விட்டு அவரையும் கூட்டிக் கொண்டு வந்து அமர்ந்து விட்டேன். நாள் கணக்கில் தங்களது வீடுகளுக்குப் போகாமல் போராடிக் கொண்டிருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு எனது நன்றிக் கடன் இது என்று கூறினார் பூரிப்புடன். ஒவ்வொரு அம்சத்திலும் மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் இந்த இளம் படையினர்.
போராட்டத்துக்கு இடையே தொழுகை இந்தப் புகைப்படத்தில் இருப்பதும் மெரீனா போராட்டக்களம்தான். இன உரிமைக்கான போராட்டத்திற்கு இடையே தனது மதக் கடமையையூம் நிறைவேற்றும் சகோதரர்கள் இவர்கள்.
|