Posted by Haja Mohideen
(Hajas) on 1/20/2017 6:27:07 PM
|
|||
மெரீனா - மூன்றாவது நாள் 1) முந்தா நாள் 2000 பேர். நேத்திக்கு 2 லட்சம். இன்னைக்கு எஸ்டிமேட்லாம் போட முடியாது. கூட்டம் அள்ளுது. 2) சத்யா ஸ்டுடியோ பாலம் தாண்டும் போது, முன்னால் சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸில் சென்றவர்களைப் பார்த்து என் நண்பன் கத்தினான் "எங்க பீச்சுக்கா ?", மூஞ்செல்லாம் சிரிப்போடு "ஆமாப்பா..." என்றவரிடம் "வா..வா.. எல்லாரும் அங்கதான்" என்றபடி ஏறி சென்றோம் :) 3) DGP ஆபீஸ் சிக்னலில் நிக்கும் போது, போலீஸ்காரர் ஒருவர் வண்டியை மறிக்க, இரண்டு மூன்று கார்கள் சர்புர் என்று சென்றன. என் நண்பன் "யார்றா அது மோடியா?"ன்னு கேட்டது, போலீஸ்காரர் காதில் விழுந்தது. அவர் சிரித்துக் கொண்டே எங்களை நோக்கி வந்து "ஏய்..அது கமிஷனர்ப்பா" என்று சொல்லவும், என் நண்பன் "அதான...அவரு எங்கயாது டூர் போயிருப்பாப்ல" என்று பதில் சொல்ல, போலீஸ்காரர் இன்னும் சிரித்தார். 4) அவரிடம் கை கொடுத்து "ரொம்ப நன்றி சார் & ரொம்ப சாரி சார். எங்களால ரொம்ப கஷ்டப்படுறீங்க"னு சொன்னேன். அதுக்கு அவரு "தம்பி..இதுல என்னப்பா. எல்லாருக்கும் உங்கள மாதிரிதான். யூனிபார்ம்ல இருக்கோம் அவ்ளோதான். உள்ள எல்லாம் ஒண்ணுதாம்ப்பா" என்று தன் நெஞ்சில் கை வைத்து சொன்னார். என்னா மனுசன். சூப்பர் சார் நீங்க. 5) இந்தக் கூட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. கமிஷனர் ஆபிஸ் தொடங்கி, கண்ணகி சிலைதாண்டி போயிட்டே இருக்காய்ங்க. வெளியே இருந்து கூட்டத்துக்குள் போகவோ, உள்ள இருந்து வெளியே வரவோ குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகும். பேரணி, ஊர்வலம், மாநாடு எல்லாம் சேர்ந்த கலவையாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது தமிழர் கூட்டம். 6) முந்தாநாள் கூட்டத்தில் கத்தியவன் நேற்று கத்தவில்லை. நேற்று கத்தியவன் இன்று கத்தவில்லை. அழகாக ஓய்வு குடுத்து கண்ட்ரோல் ட்ரான்ஸிஷன் செய்கிறார்கள். 7) ஒரு குட்டிப்பெண் மைக் பிடித்து, "வேண்டும் வேண்டும்" என்று கீச்சுக்குரலில் ஆரம்பிக்க, "ஜல்லிக்கட்டு வேண்டும்" என்று மொத்த மெரீனாவும் அலறியது.அடங்க 5 நிமிடம் ஆனது. 6) அடுத்து ஒரு பாட்டியை பேச அழைக்கும் போது, மைக்கில் ஒருவன் சொன்னான். "இந்த வயசுல இவுங்க நமக்காக போராட வந்திருக்காங்க. இவுங்கள தாராளமா 'அம்மா'னு கூப்பிடலாம். தப்பில்ல"னு சொன்னவுடன், "ஹேய்ய்ய்ய்"னு கூட்டம் கத்தவும். "நான் அம்மான்னுதாம்ப்பா சொன்னேன். சின்னம்மானு சொல்லலையே"என்று சொல்ல, சவுண்ட் எகிறியது. 7) வோட்டர் ஐடியை தூக்கி எறியப்போவதாக ஒருவன் மைக்கில் பேசும் போது "நீ நோட்டை செல்லாததா ஆக்குன, அன்னைக்கு பிடிச்சது சனி. இந்தா வோட்டர் ஐடியே செல்லாமப் போகப்போவுது"ன்னான். ஆரவாரம் அடங்கவேயில்லை. 8) ஒரு அம்மா " நம்ம இப்ப எந்திச்சது எந்திச்சது தான். இனிமே நினைச்சாலும் இந்தளவுக்கு முடியாது. விடக்கூடாது, விடவே கூடாது" என்று சொல்லவும் காட்டுக்கத்தல் கத்தி திர்த்தார்கள். 9) மதுரக்காரப்பய ஒருத்தன் பேசுனான். அந்தத் தம்பிக்கு தனி போஸ்ட்டே போடலாம். வெளாசிட்டான். This section is for that unknown chellam :) 9a) மாட்டத்தடை பண்ற. ஏன் கூல்டிரிங்ஸை தடை பண்ணேன் ? செய்யமாட்ட. ஏன்னா அதப் பண்ணா உன் சோத்துக்கு ஆப்பு. ஆனா இதப்பண்ணா எங்க சோத்துக்குதான ஆப்பு. அதான் கூசாம செய்ற. 9b) மாட்டு வாலைப் புடிச்சு இழுக்குறோமா ??மாட்டப்பத்தி என்னா தெரியும் ஒனக்கு. வா வந்து வாலைத் தொட்ரு பாப்போம். 9c) ஏழை விவசாயிகிட்ட காசில்ல. அவன் கிட்ட மாட்டை வாங்கிருவ. இன்னும் 400 வருசத்துக்கு சொத்து சேத்து வச்ச பெரியாளெல்லாம் எங்கூர்ல இருக்கான். அவன்கிட்ட எப்டி வாங்குவ ? 9d) நான் கபடி விளையாண்டப்ப என் கைய உடைச்சிட்டானுக. அதுக்காக நான் என் மகனை கபடி விளையாடக் கூடாதுன்னு சொல்லிருவனா ? என் கைய உடைச்சவன் மகன்களா பாத்து, அவிங்க கைய உடைடாம்பேன். அதுதான் நாங்க. 9e) மாடு முட்டுமாம்.அதுனால வெளாடக்கூடாதாம். மாட்டால அதோட திமிலக் குத்த முடியாது. அதுனால தாண்டா திமிலப் புடிக்கிறோம். என்னத்தயாது பேசக்கூடாது பாத்துக்க. 9f) நான் மதுரைல இருந்து பைக்ல வந்தேன். ஆறு மணி நேரம் ஆச்சு. என் நண்பன் பாண்டியை, அங்கன பஸ் ஏற விட மாட்றாய்ங்க. அவன் சைக்கிள்ல சென்னை வர்றான். இப்ப என்னடா செய்வீங்க ? 9g) எனக்கு ஒரே ஆசதான். மெட்ராஸ்ல இருக்க என் நண்பங்க நீங்க எல்லாம் அலங்காநல்லூருக்கு வரணும். பூராச்செலவும் நான் பாத்துக்கிறேன். என்ன, எங்கப்பன் என்னை செருப்ப கழட்டி அடிப்பான். பரவால்ல அவரும் மதுரக்காரருதான புரிஞ்சிப்பாருன்னு சொல்றப்போ செம க்ளாப்ஸ். 9h) நாங்களும் எங்க மாடும் விளையாடுறோம். மாடு ஜெயிக்குது, நாங்க தோக்குறோம். தோக்குற நாங்களே கவலப்படல. உங்களுக்கு என்னடா ? ஏண்டா நீங்கள்லாம் ஒரு ஆளா ? 9i) இது நடந்து கொண்டிருக்கும் போது, பிடிக்காத மீடியா கிரேனின் மேல் யாரோ வாட்டர் பாக்கெட் எறிய, "யோவ் அவன எல்லாம் அடிச்சு பெரியாளாக்காதீங்கய்யா.. கூப்பிட்டு மண்டைலயே கொட்டிவிடு"ன்னு சொன்னதெல்லம் எப்பிக். 9j) "ஏப்பா ஏய், நமக்கு மீடியா சப்போர்ட் வேணும். அவுங்க மேல தண்ணியடிக்காதீங்கப்பா. சொன்னா கேளுங்கப்பா. இப்டியே தண்ணியடிக்காத தண்ணியடிக்காதன்னு கத்திட்டு இருந்தா, வந்திருக்கவிங்கள்லாம் வேற எதோ போராட்டம்னு நினைச்சிக்கப் போறாங்க. நம்ம வந்திருக்கது சல்லிக்கட்டுக்காக.யாவம் வச்சிக்க"னு சொன்னதும் கூட்டம் முழுக்க ஒரே சிப்பு வந்துருச்சு சிப்பு 9k) தண்ணி பாக்கெட் எறியப்பட்ட மீடியாக்காரனிடம் "அண்ணே..அப்பக்கூட நாங்க கல்லக்கொண்டி எறியாம தண்ணிப் பாக்கெட்ட எறியுறோம் பாத்தியா. ஏன் தெரியுமா ? தமிழன் தாகம்னு வந்துட்டா தண்ணி தர்றவம்னேன்" சொன்னதெல்லாம் தெறி மாஸ். 9l) "அரசாங்கத்தை குறை சொல்லாதீங்க. நம்மதான் ஓட்டுப்போட்டு ஒக்கார வச்சோம். நம்மதான் வாங்கணும். வாங்கித்தான் ஆவணும். ஆனா (2 நொடி பாஸ்) வாங்கி முடிச்சதும் திரும்ப குடுப்போம். அப்ப இருக்கு"ன்னு சொன்னாம்பார். பட்டாசு !! 10) கூட்டத்துல ஒருத்தன்கிட்ட தண்ணி கேட்டேன். "தண்ணி தர்றேன். ஆனா இவர கண்டுபுடிச்சு தருவீங்களா" என்று ஓபிஎஸ் போட்டோவை காட்டினான். "எனக்கு தண்ணியே வேணாம்டா" என்று சொல்லவும், "பரவால்ல இந்தாங்க. யாராலயும் இவர கண்டுபிடிக்க முடியாது. நீங்க என்ன செய்வீங்க பாவம்"னுட்டு தண்ணி குடுத்துட்டு போயிட்டான். 11) இது போராட்டமா, திருவிழாவான்னு தெரியல. போராட்டத்தையே கொண்டாட்டமா பாக்குற மனநிலை நமக்கு மட்டும்தான் இருக்கு. பசங்க செம தெளிவா இருக்காங்க. அசைக்க முடியாது. 12) என்ன மாதிரி ஆட்கள் பேஸ்புக்ல போஸ்ட் போடுறதால உங்களுக்கு தெரியுது. வீட்டுக்கே வராம நிறையப் பேர் இருக்காங்க. அவுங்களுக்கு நாம நிறைய கடமைப்பட்டிருக்கோம். நிறைய. ரொம்ப நிறைய. 13) இது சல்லிக்கட்டையும் தாண்டிய அரசியல் எழுச்சி. பீட்டாக்காரன் மட்டுமல்ல, பக்தாஸும் மெரீனா பக்கம் போக வேண்டாம். இளைஞர்கள் கலாய்ப்பதைப் பார்த்தால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம். எதிர்த்து பேசவும் முடியாது, வாயை உடைப்பார்கள். 14) மொத்தக் கூட்டமும், ஆளுக்கு ஒரு அடி நகர்ந்து நின்றால், ஒட்டு மொத்த சென்னையும் ஸ்தம்பித்து விடும். ஆனால அதை செய்யமாட்டார்கள். அவர்கள் நோக்கம் அதுவல்ல. நம் அடுத்த தலைமுறை அருமையாக தழைத்திருக்கிறது. 15) தமிழ்நாடு கெஜட் படி நம் மாநிலத்தில் இருக்கற மொத்த சாதிகள் கிட்டத்தட்ட 324. ஆனால் மெரீனாவில் இப்போது நீங்கள் பார்ப்பது ஒரு சாதி, ஒரே ஒரு சாதி. வென்றெடுத்தே தீருவோம் என்று நிமிர்ந்து நிற்கும் தன்மானத் தமிழ்ச்சாதி. 16) நம் பெற்றோர்கள் தலைமுறைக்கு "இந்தி எதிர்ப்பு போராட்டம்". நமக்கு "சல்லிக்கட்டு". இந்த வரலாறை உங்கள் பிள்ளைகளுக்கு கதையாய்ச் சொல்லத் தயாராகுங்கள். நாளைக்கும் போக முடியுமா என்று தெரியவில்லை. அதற்குள் வாடிவாசல் திறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கடைசியாக ஒன்றே ஒன்று, "எங்கள் மொழியை அழிக்க நினைக்கும், இந்தக் காட்டுப்பய கூட்டத்தத் தாண்டி, எங்க மாட்டை தொட்றா பார்ப்போம்." https://www.facebook.com/drmkhmusthafa/posts/1240849795983153 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |