Posted by Haja Mohideen
(Hajas) on 1/23/2017 4:14:41 AM
|
|||
சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு 'தீ' வைத்தது யார்? - சி.சி.டி.வி.யில் மர்ம மனிதர்கள்சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைத்தவர்களின் உருவம், அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராடி வந்தனர். இந்தப் போராட்டம் மத்திய, மாநில அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. போராட்டத்தை கைவிடும்படி அரசும், காவல்துறையும் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் போராட்டக்குழுவினர் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து பின்வாங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தச் சென்றுவிட்டு, ஆனால் முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சென்னை வந்த அவர், போலீஸ் உயரதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 'அறவழியில் போராடுபவர்களை அமைதியான வழியில் வெளியேற்றுங்கள். ஏனெனில் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழாவை சென்னை மெரினாவில் நடத்த வேண்டும். மேலும் போராட்டம், அரசு நிர்வாகத்துக்கு பலவகையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது போடப்பட்டுள்ள அவசரச் சட்டம் குறித்தும் போராட்டக்குழுவினருக்கு தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள்' என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு மெரினாவுக்குச் சென்ற போலீஸ் உயரதிகாரிகள், போராட்டக்குழுவினருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சமரசமடையவில்லை. இதனால் மெரினாவுக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டன. இன்று காலை மெரினாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசுக்கும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, லத்திசார்ஜ் நடத்தி கூட்டத்தை கலைத்தனர் போலீஸார். மெரினா போராட்டத்தில் சில கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைப்புகளும் புகுந்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அவர்களால் எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என்று உளவுப்பிரிவு போலீஸார், உயரதிகாரிகளும், அரசுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களை அடையாளம் கண்டறிவதிலும் சிக்கல்கள் எழுந்த நிலையில், இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் முன்பு ஒரு கும்பல் திரண்டது. பெரும்பாலான போலீஸார் பாதுகாப்பு பணிக்குச் சென்று விட்டதால் போலீஸ் நிலையத்தில் இரண்டு பெண் போலீஸார் மட்டுமே இருந்தனர். அவர்கள் பணியில் இருந்தபோது, பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது ஒரு கும்பல் பெட்ரோலை ஊற்றியது. அடுத்து அங்கு தீ வைக்கப்பட்டது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கொளுந்து விட்டு எரியத் தொடங்கின. போலீஸ் நிலையத்துக்குள் சிக்கிய பெண் போலீஸார் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்' என்று அலறினர். அவ்வழியாக சென்ற மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் டீம், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு விரைந்தது. இதற்குள் வாகனங்களுக்கு தீ வைத்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீஸ் நிலையத்துக்குள் சிக்கிய இரண்டு பெண் போலீஸையும் அவர்கள் மீட்டனர். போலீஸார் துரிதமாகச் செயல்பட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாணவர்கள் இதுவரை அறவழியில் போராடி வருகின்றனர். இதனால் நிச்சயம் அவர்கள் இந்த வன்முறையில் ஈடுபடவில்லை. மாணவர்கள் என்ற போர்வையில் சிலர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யார் என்று விசாரித்து வருகிறோம். இதற்காக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆராய்ந்தோம். அப்போது ஒரு கும்பல் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் அருகே வருவதும், பிறகு எதையோ வாகனங்கள் மீது ஊற்றும் காட்சிகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் முகத்தை மூடியுள்ளனர். இந்தப் பதிவுகளை வைத்து அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு இப்பகுதியிலேயே இருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணைக்குப் பின் முழு விவரத்தையும் ஊர்ஜிதப்படுத்துவோம்!" என்றார். https://www.facebook.com/ukhmz/posts/10211378995407573 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |