Posted by Haja Mohideen
(Hajas) on 1/23/2017 4:20:01 AM
|
|||
போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! #SpotReport
இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர். விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது. உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இன்று அதற்கான சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. நீங்கள் கலைந்து செல்லலாம்” என்று சொல்லிவிட்டு அதுகுறித்த சில ஆவணங்களை இளைஞர்களிடம் கொடுத்தார். ஆனாலும் அங்கிருந்த இளைஞர்கள் கலைந்து செல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். இந்நிலையில் 6.30 மணியளவில் அங்கே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த மைக்செட் வேனில் ஏறி நின்ற பாலகிருஷ்ணன் மைக் பிடித்து பேச ஆரம்பித்தார், “நாங்கள் பொறுப்பான துறையில் இருந்து கொண்டு, உங்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் நம்ப வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் கூட்டத்தொடர் இல்லாதபோது அவசரச் சட்டம்தான் கொண்டு வரப்படும். அது பின்னர் சட்டமன்றத்தில் வைத்து நிரந்தரம் ஆக்கப்படும். இதுதான் நடைமுறை. மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை. நீங்களாகவே கலைந்து செல்லுங்கள்” என்றார்.
அதன்பிறகு இளைஞர்கள், “சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பைப் பார்த்த பிறகு கலைந்து செல்கிறோம்” என்றனர். போலீஸார் இதைக் கேட்பதாக இல்லை. “உடனே கலைந்து செல்லுங்கள்” என்று மீண்டும் எச்சரித்தனர். இளைஞர்கள், “கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. உடனடியாக கலைந்து செல்ல முடியாது. அவகாசம் தாருங்கள்” என்றனர். முதலில் 8 மணி நேரம் அவகாசம் கேட்டவர்கள், போலீஸாரின் விடாப்பிடி எச்சரிக்கைக்குப் பிறகு, “2 மணி நேரமாவது அவகாசம் தாருங்கள்... நாங்கள் கலைந்து சென்று விடுகிறோம்” என்றார்கள். ஆனால், “போலீஸார் அவகாசம் தர முடியாது” என்றனர். உடனே இளைஞர்களைச் சுற்றி வளைத்த போலீஸ் படை கூட்டத்துக்குள் புகுந்து இளைஞர்களை இழுத்து, வெளியே விட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இளைஞர்கள், “நாங்கள்தான் கலைந்து சென்றுவிடுகிறோம் என்கிறோமே... கொஞ்சம் அவகாசம் தானே கேட்கிறோம்... அதைத் தர உங்களைத் தடுப்பது எது...? 2 மணிநேரத்தில் நாங்களே கலைந்து சென்றுவிடுகிறோம்” என்றார்கள். போலீஸார் இதை கேட்கத் தயாராக இல்லை. இளைஞர்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதை அறிந்து வெளியே சென்ற இளைஞர்களும், கடற்கரையை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்களைத் தடுக்கும் போது, திருவல்லிகேணியில் போலீஸார் தடியடி நடத்தத் துவங்கினர். “நாங்கள் இரண்டு மணி நேரம்தான் அவகாசம் கேட்டோம். அந்த நேரத்துக்குள் நாங்களே கலைந்து சென்று இருப்போம்... அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்கள் மீது ஏன் இந்த வன்முறை” என்று கொந்தளித்தபடி கடலில் கைகோர்த்து நிற்கிறார்கள். அறவழியில் அமைதியாக போராட்டம் நடந்துக் கொண்டிருந்த இடம்.. இப்போது போர்க்களம் போல் உள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |