Posted by Haja Mohideen
(Hajas) on 3/23/2017 3:43:09 AM
|
|||
`யார் செத்தால் எனக்கு என்ன?’ ` சரி, மத்திய அரசு ஏன் இவ்வளவு மூர்க்கத்தோடு மக்களை வதைக்க வேண்டும் என்ற கேள்விக்கான அடிஆழத்தில் புதைந்துக் கிடக்கிறது அப்பட்டமான ஒரு கயமைத்தனம். உலக வர்த்தக நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு மே மாதம், ரேஷன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டதன் விளைவே, நாம் இன்று அனுபவிக்கும் துயரங்களுக்கான அடிப்படை. அதன் விளைவாகவே ரேஷன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் கையெழுத்து. இதோ ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அல்லாடுவது என்பது இத்தனை பெரிய கயமைத்தனத்தின் தொடர்ச்சிதான். மக்கள் விரோத மனப்பான்மையையும் தமிழக எதிர்ப்புக் கருத்தியலையும் கூர்தீட்டிக் கொண்டு பொது விநியோகத் திட்டத்தைக் கூறுபோடும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது பா.ஜ.க அரசு. ஆதார் அட்டை இல்லாமல் இங்கே அணுவும் அசையாது என்ற நிலையை உருவாக்கியதன் காரணம், மக்கள் பலன்பெறும் மானியங்கள் அனைத்தையும் வெட்டுவதற்குத் தான். சமையல் எரிவாயு விஷயத்தில் நாம் நன்றாகவே அனுபவப்பட்டோம். ஆதார் எண் கேட்டார்கள், வங்கிக்கணக்கு கேட்டார்கள், `அதில் மானியத்தொகையைப் போடுவோம்’ என்றார்கள். ஆனால், கீழ்நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பரவலாக உயர்த்தப்பட்ட விலையிலேயே சிலிண்டர்களை வாங்குகிறார்கள். அவர்கள் வங்கிக்கணக்குக்கு மானியத்தொகை வந்தபாடில்லை. இதே சதியைத்தான் மண்ணெண்ணெய்க்கும் செய்தார்கள். முதல் கட்டமாக ஒன்பது மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, மண்ணெண்ணெய் ரேஷனில் கிடைக்காது. வெளிச்சந்தையில் வாங்கினால், அதற்கான பணம் வங்கியில் செலுத்தப்படும். மின்சாரத்துக்கும் எரிவாயுக்கும் மண்ணெண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் இருளிலும் பசியிலும் தள்ளப்பட்டுள்ளன. மண்ணெண்ணெய்யில் எரிந்த அடுப்புகள் மீண்டும் விறகுக்குத் திரும்பியிருக்கின்றன. இதுதான் மேக் இன் இந்தியா வளர்ச்சியா? ரேஷன் கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி விரட்டோ விரட்டென விரட்ட, மக்கள் வரிசையில் காத்துக்கிடந்து அதைச் செய்கின்றனர். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் ரேஷன் பொருள்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், வெயிலில் பல மணி நேரம் உழன்று கொண்டிருப்போரில் பலருக்கும் தெரியாது, அவர்கள் பொருள்களுக்குப் பதிலாக நேரடிப் பணப்பட்டு வாடாவுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர் என்பது. மத்திய அரசின் இந்தச் சூழ்ச்சியை மே-17 இயக்கம் மாதிரியான அமைப்புகள் அம்பலப்படுத்தியபோதும், மக்களிடம் அது பரவலாகக் கொண்டுசேர்க்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் படிவங்கள் வாயிலாக, டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்ஃபர் எனப்படும் நேரடிப் பணப்பட்டுவாடாவுக்கு மக்கள் ஒப்புதல் அளிக்கின்றனர். அப்படி ஒப்புக்கொண்டவர்கள் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க முடியாது. மாறாக, ரேஷன் கடைகளில் வாங்கக்கூடிய பொருள் களுக்கான மானியத்தொகையை வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும்(!). நாம் வெளிச்சந்தையில் அசல் விலைக்குப் பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்தச்் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தத்தான் இத்தனை பாடுகளும். ரேஷன் பொருள்களுக்கு டெண்டர் விடவில்லை, ரேஷன் கடைகளில் பொருள்கள் இல்லை, ரேஷன் ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை, ரேஷன் கடைகளுக்கான மானியத்தொகையையும் தரவில்லை என எல்லா குளறுபடிகளுக்கும் ஒரே நோக்கம்தான். அது ரேஷன் கடைகளை இழுத்துமூடுவது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாசல் திறப்பது. கேஷ்லெஸ் டிரான்ஸாக்ஷன் எல்லாம் அதற்காகத்தான். மேல் வர்க்கம்/முன்னேறிய சாதியினர் பற்றி கவலை இல்லை. சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்டான நடுத்தரவர்க்கம்/இடைநிலைச் சாதியினர் எவ்வாறேனும் தட்டுத்தடுமாறி இதற்குப் பழகிவிடுவர். ஆனால், ஏழைகள்/ஒடுக்கப்பட்டோர், அதற்கும் கீழானவர்கள்? அவர்களுக்கு எல்லாம் இந்த நாட்டில் இடமே இல்லையா? ரேஷன் கடைகள் பெருமளவில் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களான தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரைப் பட்டினியில் சாகாமல் காத்துவந்திருக்கிறது. அந்தச் சமூக நீதியைத் துடைத்து அழிப்பதுதான் வளர்ச்சியா? ஏற்கெனவே அடித்தட்டு மக்களின் குரல் முற்றிலுமாக நசுக்கப்பட்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில்கூட அவர்கள் பட்டபாடுகள் வெளியுலகத்துக்குச் சொல்லப்படவில்லை. எந்த ஊடகமும் அடித்தட்டு மக்கள் வாழ்வில் அரசு உருவாக்கிய அந்தப் பேரிடர் குறித்துப் பேசவில்லை. அவ்வாறே ரேஷன் கடைகள் மூடப்படுதலும் நடந்துமுடியும். சமூகப் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையில் உழல்பவர்களின் பட்டினிச்சாவு குறித்தோ, சத்துக்குறைபாடு குறித்தோ எங்கேயும் பதிவுகள் வராது. இந்தப் பரபரப்பு, ஊடகங்கள் தமது கேமராக்களை எடுத்துக்கொண்டு மக்களிடம் போகாமல், ஸ்டூடியோவுக்குள் விவாதப் புரட்சி நடத்துவதோடு எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். ஏழைகள் நிறைந்த நாட்டை, பசியற்றதாக வைக்க ஓர் அரசு எதையும் செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் அதன் பிறகு உருவாக்கப்பட்ட கொள்கைகளும், இயற்றப்பட்ட சட்டங்களும் ஏழ்மையை ஒழிக்காமல், ஏழைகளை ஒழிக்கத் துடிக்கின்றன. ஓர் அரசு தன் சொந்தக் குடிமக்களுக்கு எதிராக இவ்வளவு மோசமாகச் செயல்படும் பேரவலம் உலகில் வேறு எங்கேனும் நடக்குமா? பிழைப்புத் தேடி வந்தவர்களும், அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோரும் அனுபவிக்கக்கூடிய நெருக்கடியை இந்திய அடித்தட்டு மக்கள் தம் சொந்த நாட்டில் எதிர்கொள்கிறார்கள். மக்களிடமிருந்து அவர்களின் நல்வாழ்க்கைக்கான எல்லாமே பறிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் குடிமக்களாக இருந்து அனுபவிக்க வேண்டிய எல்லா நலன்களுமே நசுக்கப்படுகின்றன. அப்படி எனில், தனிநபர்களின் வாழ்க்கையில் அரசுக்கு என்னதான் பங்கு? தனிநபர் எல்லா சுமைகளையும் தானே சுமந்துகொள்ள வேண்டும் எனில், இது ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ எவ்வாறு ஆக முடியும்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் `இந்திய மக்களாகிய நாங்கள்' (we the people of India) என்று அம்பேத்கர் எழுதியபோது, அதன் மீது விவாதம் எழுந்தது. `இந்தியக் குடிமக்களாகிய நாங்கள்' (we the citizen of India) என அதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்குப் பதில் உரைத்த அம்பேத்கர், `இந்தியா இன்னும் ஒரு தேசமாகவில்லை. அது தேசமாக வேண்டிய நாடு. அதனால் குடிமக்கள் என குறிப்பிட முடியாது’ என்றார். 70 ஆண்டுகால சுதந்திர இந்தியா, இன்னும் ஒரு தேசமாகவில்லை. தேசபக்தி என எவ்வளவு பிதற்றினாலும் தனது மக்களைக் குடிமக்களாக அங்கீகரித்து அவர்களைக் காப்பாற்றியாகவேண்டிய பொறுப்பை அது கையில் எடுக்கவில்லை. அடித்தட்டு மக்களை அழித்தொழிக்கும் இத்தகைய அட்டூழியங்கள் அனைத்தும் அதை ஆணித்தரமாக நிருபிக்கின்றன. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |