அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால், நமது அமீரகம் ஈமான் சார்பாக , நமதூர் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில், ஈமானிய கலாச்சார சங்கமம் & பாரம்பரிய விளையாட்டுகள் நிகழ்ச்சி , கடந்த 17-3-2017 வெள்ளி அன்று துபாயில் உள்ள ஜபீல் பூங்காவில் இனிதே நடைபெற்றது முன்னதாக Safety Engineer சகோதரர் ஷேக் பீர் அவர்களின் warm up பயிற்சி மற்றும் முதலுதவி விளக்கங்களுடன் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பமாக நமதூர் மண்வாசனையுடன் கூடிய மண் விளையாட்டுக்களான பம்பரம், பொவளை (கோலிக்காய்) மற்றும் குச்சிக்கம்பு போன்ற விளையாட்டுக்களை வந்திருந்த சகோதரர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
ஏர்வாடியிலுள்ள முஹல்லாக்களின் பெயரில் 4 அணிகள் – பைத்துஸ்ஸலாம்(BS), லெப்பை வளவு(LV), கட்டளைத் தெரு (MMM) மற்றும் மேல நடு கீழ முஹல்லா(MNK) – என பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு முறையே சகோதரர். ஷேக் உதுமான் காக்கா , சகோதரர். ஷம்சுதீன் ஷாஃபி காக்கா, இப்ராஹிம் கனி காக்கா மற்றும் DNATA ரஃபீக் காக்கா ஆகிய ஈமான் மூத்த உறுப்பினர்கள் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
குழுப் போட்டிகளில் முதலாவதாக, ஏழு கல் விளையாட்டு மிக சுவாரஸ்யமாக நடைபெற்றது. வயது வித்தியாசம் பாராது, அனைவரும் பந்தை மாற்றுவதும்.. கல்லை அடுக்குவதுமாக.. குழு உணர்வோடு கனகச்சிதமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வயது வாரியாக ( 40 வயதுக்கு மேல், 30 to 40 மற்றும் 30 க்கு கீழ்) ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வயதானவர்கள் கூட தன்னை மறந்து துடிப்புடன் ஓடியது சுகமான சுவாரஸ்யம். நம் சங்கமத்தை சங்கை செய்யும் விதமாக இறையருளால் மேகங்களும் வானில் சங்கமித்து மெல்லிய தென்றலுடன் மேலும் பரவசப்படுத்தியது. சுப்ஹானல்லாஹ்.
ஜு ம்மா தொழுகைக்குப் பின் மதிய உணவு வழங்கப்பட்டது. பந்தியிலும் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக தலை வாழை இலையில் நமதூர் நெய்சோறு கறியுடன் கத்தரிக்காய் பருப்பும் பறிமாறப்பட்டது. பலபேருக்கு அது கல்யாணப் பந்தியை நினைவூட்டியது. உண்ட மயக்கம் முடியும் முன்னே கயிறு இழுக்கும் போட்டி…. அங்கு கயிற்றுடன் கல்புகளும் பின்னிப் பிணைந்து சகோதர வாஞ்சையும் சலிப்பில்லா மகிழ்ச்சியும் சங்கமித்தது. முத்தாய்ப்பாக நடைபெற்ற கபடி போட்டி காண்போரை கவரும் வண்ணம் சுறுசுறுப்பாக இருந்தது. கபடி கபடி என பாடி வருபவர் மட்டுமின்றி கூடியிருப்போரும் மனக்கண்ணில் தங்கள் பதின்பருவ கபடிகளை அசைபோட்டுக் கொண்டிருந்தனர்.
இதனிடையே பாரம்பரியத்தை பறை சாற்றுவதில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல எனக் கூறும் விதமாக, பெண்களும் தங்கள் பங்குக்கு பல்லாங்குழி, பாண்டி, கோகோ என பலவிதமான பெண்களுக்கே உரித்தான புராதன விளையாட்டுக்களை களித்து மகிழ்ந்தனர். நமதூரின் பேச்சு வழக்கில் இருந்த புராதன சொற்களை எழுதிக் கொடுக்கும் போட்டியில் அனைவரும் ஆர்வமுடன் கலந்து, “நாராங்கி”, “லாந்தர்” தொடங்கி “வெள்ளக்கோழி”, “பொல்லாமுருவம்” வரை யுள்ள நம் மண்ணுக்கே உரித்தான வழக்கு சொற்களை வாரிக் கொட்டிவிட்டனர். மேலும் இளம் சிறுவர் சிறுமியருக்கான சிறப்பு போட்டிகளாக ஓட்டப் பந்தயம், மியுசிக்கல் பால் மற்றும் பலூன் உடைத்தல் போட்டிகள் குட்டீஸ்களின் வழக்கமான ஆரவாரத்துடன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் சங்கமத்தின் இறுதி அமர்வாக , சிந்தைக்கு விருந்தளிக்கும் விதமாக , நமதூரின் கலாச்சாரம், பண்பாடுகளின் வரலாற்று சுவடுகளிலிருந்து , வினாடி வினா கேட்கப்பட்டு, சரியான பதில் சொன்னவர்களுக்கு “யர்பாத்” ஆவணப்பட USB பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் சிறுவர் சிறுமியரின் கலாச்சார உடைக் காட்சி நடைபெற்றது. அதில் சிறுவர்கள் நமதூர் பாரம்பரிய சாரம், வேட்டி, தொப்பியுடனும், சிறுமிகள் பவாடை, சட்டை, தாவணி மற்றும் பட்டு சேலையுடனும் வந்தது – நம்ம ஊர் கண்மா பாஷையில் சொல்வதானால்.. “ஒரு மாரி லட்சணமா இருந்துச்சு” .
பாரம்பரியம் – வெறும் விளையாட்டிலும் உடையிலும் நின்றால் போதுமா?.. அதனை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லும் விதமாக, “ வேர்களைத் தேடும் விழுதுகள்” என்ற தலைப்பில் குழந்தைகள் தங்களின் குடும்ப வம்சா வழியை சொல்லும் போட்டி நடைபெற்றது. சில குழந்தைகள் 4 மற்றும் 5 தலைமுறைகளை சொல்லி அனைவரையும் அசத்தியது. அல்ஹம்துலில்லாஹ். அதனைத் தொடர்ந்து பரிசளிப்புகளுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
ஈமான் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் ஜைனுல், ஆலோசனைக் குழு உறுப்பினர் அல்தாஃப் மற்றும் தவ்ஃபீக் குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்கள். முதல் முயற்சி என்றாலும் சிறப்பாக இருந்தது என்றும் இன்னும் இது போல் சந்திப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சி மூலம் இளையோர் முதல் பெரியோர் வரை தங்களது இளமைக் காலத்துக்கு ஒரு ரிவைண்ட் பட்டன் அழுத்தி சென்று வந்ததைப் போன்ற ஒரு உணர்வைப் பெற்றார்கள் என்றால் அது மிகையல்ல. கணிணி விளையாட்டுகளிலும் கைப்பேசிகளிலும் சிக்கித் தவிக்கும் இந்த காலகட்டத்தில் , உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வூட்டும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை பல்லாண்டுகள் கழித்து ஆடி, ஓடி களித்த உவகையுடனும் மலரும் நினைவுகளுடனும் அனைவரும் துஆவுடன் விடைபெற்று சென்றார்கள். அல்லாஹ் நம் சகோதரத்துவத்தை இம்மாதிரி நிகழ்ச்சிகளின் மூலம் மேலும் மெருகேற்றி இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ள மக்களாக நம்மை ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்,
அன்புடன், ஈமான் - அமீரகம்
Photos:
https://www.facebook.com/groups/emandubai/permalink/1411203498943580/
https://www.facebook.com/groups/emandubai/permalink/1411206632276600/
https://www.facebook.com/groups/emandubai/permalink/1411207828943147/
https://www.facebook.com/groups/emandubai/permalink/1411187272278536/
https://www.facebook.com/groups/emandubai/permalink/1411189025611694/
https://www.facebook.com/groups/emandubai/permalink/1408607005869896/
https://www.facebook.com/groups/emandubai/permalink/1411184282278835/
|