தண்ணீர் யுத்தம்!
பாரதி தம்பி - ஓவியம்: ஹாசிப்கான்
Posted Date : 06:00 (30/03/2017)
திருப்பூர் அருகே உள்ள கோட்டூர் என்னும் கிராமத்தில் காய்ந்து கருகும் தன்னுடைய தென்னைமரங்களைக் காப்பாற்ற வேறு வழி தெரியாமல், அருகில் ஓடும் சாக்கடைத் தண்ணீரை எடுத்துப் பாய்ச்சுகிறார் ஒரு விவசாயி. தென்னம்`பிள்ளை’கள் தாகத்தில் சாகும்போது, அவருக்கு வேறு வழி தெரியவில்லை. யுத்தக்களத்தில் மாட்டிக்கொண்டவனின் உயிர்த்தவிப்பு அது. எப்படியாவது பயிர்ப்பச்சையைக் காபந்து பண்ணிவிட முடியாதா என்ற பரிதவிப்பு.
வளம்மிக்க காவிரிப் படுகையில் விவசாயத்துக்கு நீர் இல்லாமல் விவசாயிகள் செத்து வீழ்ந்தது, ஒரு மாதத்துக்கு முந்தைய பிரேக்கிங் நியூஸ். இப்போது அங்கே குடிக்கவும் நீர் இல்லை. திருவாரூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான் கிராமம் ஓர் உதாரணம். செழிப்பான இந்த ஊரில், பிரமாண்டமான தண்ணீர்டேங்க்கை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஊருக்குள் சுற்றிவருகிறது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்.
திருநெல்வேலி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவையினங்களும், ஆயிரக்கணக்கான பறவைகளும் ஒவ்வொரு சீஸனிலும் வந்துபோகும். ஆனால், இப்போது மருந்துக்குக்கூட இங்கே பறவைகள் இல்லை. சரணாலயப் பறவைகளுக்காக, தங்களின் வாழ்க்கையை ஒலி எழுப்பாத வகையில் மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் கூந்தன்குளம் மக்கள், தங்கள் வாழ்நாளில் கண்டிராத இந்த வறட்சியை அச்சத்துடன் பார்க்கின்றனர்.
சேலம், ராசிபுரம், நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் விசைத்தறிகளில் பணிபுரியும் நெசவாளர்கள், கடும் வேலை இழப்பைச் சந்தித்துள்ளனர். காரணம், அவர்கள் பணிபுரியும் தறி உரிமையாளர்களுக்கு நெசவுக்கான கச்சாப்பொருள் பட்டுநூல் கிடைக்கவில்லை. காரணம், பட்டுப்புழு வளர்ப்புக்கான கச்சாப்பொருளான மல்பெரி இலை போதுமான அளவில் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம், பயிரிடப்பட்ட மல்பெரியில் விளைச்சல் இல்லை. இதற்குக் காரணம், தண்ணீர் இல்லை. விவசாயிக்கும் நெசவாளிக்கும் நேரடித்தொடர்பு இல்லைதான். ஆனால், இந்தச் சங்கிலித்தொடர் செயல்பாட்டில் யார் ஒருவரும் தப்பமுடியவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் மாட்டுச்சந்தை மிகவும் புகழ்பெற்றது. வாரந்தோறும் கூடும் இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் மாடுகள் வரும். கடந்த சில மாதங்களாக விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்திருக்கிறது. காரணம், வறட்சி. மனிதர்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் மாட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நாட்டு மாடு, A2 பால் என்ற பாரம்பர்யப் பெருமைக்காகத் தொழுவத்தில் கட்டிவைத்திருந்தால், யார் தீவனம் போடுவது?
`இன்று சரியாகும், நாளை சரியாகும்’ எனக் கடன் வாங்கி எத்தனை நாள்களுக்கு மாடுகளைக் காப்பாற்ற முடியும்? `காலத்தோடு விற்றாலாவது நல்ல விலைக்கு விற்கலாம். பட்டினிப்போட்டு எலும்பும் தோலுமாகக் கொண்டுபோனால் விலையும் கிடைக்காது’ என நினைத்து மாட்டுச்சந்தைக்கு அழைத்துப் போனால், இதேபோல் ஆயிரக்கணக்கான மாடுகள் வருகின்றன. எண்ணிக்கை அதிகரித்து விலை குறைந்துவிடுகிறது. 50 ஆயிரம் ரூபாய்க்குப் போகவேண்டிய மாடு 25 ஆயிரம் ரூபாய்க்கும், 20 ஆயிரம் ரூபாய்க்குப் போகவேண்டிய மாடு 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கிறது. தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மாட்டுச்சந்தையான பொள்ளாச்சிச் சந்தையிலும், மாநிலம் முழுவதிலும் இதே நிலைமைதான். அங்கு வரும் விவசாயிகளும் வியாபாரிகளும் புலம்பித் தீர்க்கின்றனர். இதையும் தாண்டி, விற்க மனம் வராமல் வைத்திருந்தால் என்ன நடக்கும்? இதற்கு உதாரணம் மசினக்குடி.
நீலகிரி மலைத்தொடரின் உச்சியில் இருக்கிறது மசினக்குடி. கால்நடை வளர்ப்பை முதன்மைத் தொழிலாகக்கொண்டுள்ள மசினக்குடி மக்களால், தங்கள் மாடுகளைக்கூட வளர்க்க முடியவில்லை. எங்கும் வறண்டு தகிக்கும் நிலையில் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமான மாடுகள் செத்து வீழ்ந்துவிட்டன. இப்படி இறந்த மாடுகளின் உடல்கள் ஊரைச் சுற்றியுள்ள பள்ளங்களிலும் புதர்களிலும் வீசப்பட்டுள்ளன. இப்போதும் இவை அப்படியே கிடக்கின்றன. ஊரைச் சுற்றி இறந்த மாடுகளின் சடலங்கள், அவற்றை கொத்தித் தின்னும் கழுகுகள், காகங்கள், ஊருக்குள் நீருக்காக அலைந்து திரியும் மீதமுள்ள கால்நடைகள் மற்றும் மக்கள்... என மசினக்குடியில் காணும் காட்சி, ஓர் ஊழிக்காலத்தை நினைவூட்டுகிறது.
மாநகராட்சிகளில் குடிநீர் விநியோக நிலவரம்...
ஆனால், இந்த ஊழிக்காலம் இப்போது தொடங்கியது அல்ல. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் நீலகிரி மலைப்பகுதியில் 11 காட்டு யானைகள் இறந்துபோயுள்ளன. கூடலூரில் மூன்று யானைகள், முதுமலை புலிகள் காப்பகத்தில் நான்கு யானைகள், சிங்காரா மற்றும் தென்குமராடா வனப்பகுதியில் நான்கு காட்டு யானைகள் என 11 யானைகளும் மரணம் அடையக் காரணம், அவை குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. யானைக்கு மட்டும் அல்ல, எல்லா காட்டு விலங்குகளும் இந்த வறட்சியைத் தாங்க முடியாமல் வனாந்திரத்தில் வறண்ட தொண்டையுடன் அலைந்து திரிகின்றன. இன்னொருபுறம் ஈரப்பதம் இல்லாமல் காய்ந்துகிடக்கும் காடு, இந்தக் கோடை வெப்பத்தின் வெம்மை தாங்காது எளிதில் தீப்பற்றிக்கொள்கிறது. இந்தக் காட்டுத் தீ காவு வாங்கும் வனவிலங்குகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
எந்தப் பக்கமும் திரும்ப முடியாத அளவுக்கு நிலைமை கழுத்தை நெரிக்கிறது. மக்களுக்குத் தண்ணீரைத் தேடி அலைவது மட்டுமே ஒரு நாளின் பெரும்பகுதி வேலையாக இருக்கிறது. நகர்ப்புறங்கள், இதிலிருந்து ஓரளவுக்கேனும் தப்பிக்கின்றன. நீர்வளம் உள்ள கிராமப் பகுதிகளிலிருந்து, ‘கூட்டுக் குடிநீர்த் திட்டம்’ என்ற பெயரில் நீரை உறிஞ்சிக்கொண்டுவந்து இவர்களுக்குத் தருவதால், இவர்கள் தப்பிக்கிறார்கள். ஆனால், தண்ணீர்ப் பஞ்சத்தின் தீவிரத்தை உணர வேண்டுமானால், இந்த வேதனையின் முழுமையைச் சுமக்கும் கிராமப்புறத் தமிழகத்துக்குச் செல்ல வேண்டும். அங்கே மக்கள் வதைக்கூடங்களைப்போல ஒரு குடம் நீருக்காகக் கையேந்தி அலைகின்றனர். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாடுகூடக் குடிக்க லாயக்கற்ற குட்டையில் தேங்கிக்கிடக்கும் கலங்கிய நீரை வடிகட்டி, குடங்களில் எடுத்துச் செல்கிறார்கள் பெண்கள்.
சில ஊர்களில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை எடுக்கச்செய்து எல்லோரும் சேர்ந்து தண்ணீர் எடுக்க அலைகிறார்கள்.
இன்னும் கோடையின் தீவிரம் தொடங்கவில்லை. குறைந்தது மூன்று முழு மாதங்களை நாம் எதிர்கொண்டாக வேண்டும். அதற்குள் இவ்வளவு பிரச்னை. உடனடியாக நிலைமை சீரடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. தென்மேற்கு; வடகிழக்குப் பருவமழைகளே இல்லாமல் போய்விட்ட நிலையில், கோடைமழையை எதிர்பார்ப்பது பேராசைதான். காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் உருவானால், வறண்ட தொண்டையில் உயிர்த்தண்ணீர் விழலாம். ஆனால், அது நம் கையில் இல்லை. பொது மக்களாகிய நாம் இத்தகைய கையறுநிலையில் இருக்கலாம். ஆனால், ஓர் அரசு என்ற வகையில் நிலைமையை முன் உணர்ந்து அல்லது அந்தக் கூறு இல்லை என்றால், பிரச்னை வந்த பிறகாவது திட்டமிட வேண்டும். இவர்களின் அதிகபட்சத் திட்டம் என்பது தீப்பற்றிய பிறகு தண்ணீர் ஊற்றுவதாகத்தான் இருக்கிறது.
சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் வீராணம் தண்ணீர் வருவது ஏற்கெனவே நிறுத்தப்பட்டுவிட்டது. செம்பரம்பாக்கம் தண்ணீர் இன்னும் 20 நாள்களுக்குக்கூடத் தாங்காது. இந்த நிலையில் அரசு கடைசியில் கண்வைத்திருப்பது, புறநகர்ப் பகுதிகளில் கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் நீரின் மீது. சென்னையைச் சுற்றி 30-க்கும் அதிகமான கல்குவாரிகள் உள்ளன. இந்தக் குவாரிப் பள்ளங்களில் தேங்கி நிற்கும் நீரை எடுத்து சுத்திகரித்து, குடிநீராகப் பயன்படுத்த நிபுணர் குழு ஒன்று ஆய்வுசெய்து முடித்துள்ளது. குவாரிப் பள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் நீரை எடுத்துப் பயன்படுத்தும் வரம்பு வரை சிந்திக்கிறார்கள் என்றால், நிலைமை மிக மோசம் எனப் பொருள். இதை முன்கூட்டியே பல்வேறு நிபுணர்களும் ஆய்வு அறிக்கைகளும் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நம் அரசு தண்ணீர்ச் சிக்கலை எதிர்கொள்ள, இரண்டு வகையான தீர்வுகளைக் கையாள்கிறது. ஒன்று... மேலும் மேலும் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துக்கொண்டே செல்வது. இப்போதுகூட `மதுரை நகரின் குடிநீர் பஞ்சத்தைப்போக்க, புதிதாக 500 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும்' என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தப் பூமி இன்னும் எத்தனை ஆழ்துளைக் கிணறுகளைத்தான் தாங்கும்? ஒரு கணம் பூமியின் உள்ளுக்குள் உங்கள் கண்களைக் கொண்டுசென்று கொஞ்சம் அண்ணாந்துபாருங்கள். அது ஒரு நகரத்தின் அடிப்பகுதி என்றால், எத்தனை லட்சம் ஆழ்துளைக் குழாய்கள் இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கும்? இவ்வளவு நீரை இடைவிடாமல் உறிஞ்சி எடுத்தால், பூமியின் உடல் நடுங்கித் துடிக்காதா? பூமிக்குக் கீழே தண்ணீர் செல்வதற்கான அனைத்து இயற்கை வழிமுறைகளையும் ஒழித்துக்கட்டிவிட்டோம். பிறகு, உள்ளே இருப்பதை மட்டும் வரைமுறை இல்லாமல் சுரண்டினால் எப்படி? நிலத்தடி நீர்வளத்தைப் பயன்படுத்துவது தொடர்பான திட்டவட்டமான ஒரு முடிவு அரசிடம் இல்லவே இல்லை.
தண்ணீர்ச்சிக்கலைத் தீர்க்க அரசு வைத்திருக்கும் இன்னொரு வழி, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள். நீர்வளம் உள்ள ஊரிலிருந்து உறிஞ்சி, இன்னோர் ஊருக்கு வழங்குவது. உள்ளூர் நீர்வளத்தை உயர்த்துவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், வெளியூர் தண்ணீரை மட்டுமே உறிஞ்சிக்கொண்டு வருவது ஒருபோதும் சிக்கலை நிரந்தரமாகத் தீர்க்காது. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் மேலும் ஒரு புதிய கிணறு அமைக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்தபோது, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சென்னம்பூண்டிப் பகுதி மக்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ‘எங்களுக்கே தண்ணீர் இல்லை. எங்க ஊர் தண்ணீயை எடுத்து அடுத்த ஊருக்குக் குடுப்பீங்களா?’ என்ற அவர்களின் குரலை, கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்கள் உள்ள எல்லா ஊர்களிலும் கேட்க முடிகிறது. வீராணம் பகுதியில் பல காலமாக இந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. `கிராமங்களின் அழுகுரலைக் கேட்பதற்கு எப்போதும், எதற்காகவும் தயாரில்லாத நகரங்களுக்கு, எங்கள் ஊரின் தண்ணீரை உறிஞ்சி எடுத்துச் செல்வதா?’ என்றும் இதைப் புரிந்துகொள்ளலாம். இத்தனை காலமும், ‘தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்கிறோம்’ என நினைத்துக்கொண்டவர்கள், இப்போது அப்படி நினைக்க முடியவில்லை. ஏனெனில், பேரிடர் காலங்களில் பெருந்தன்மை பேண முடியாது.
தமிழகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் தண்ணீர் வறட்சி, நம் ஊகத்துக்கு அப்பாற்பட்டது. அன்றாடம் நாம் பார்க்கும்; படிக்கும் செய்திகள் உண்மையின் சின்னஞ்சிறிய பக்கம் மட்டுமே. நாம் தயாராகவேண்டியது கோடைக்காலத்துக்கு அல்ல... ஒரு கொடிய காலத்துக்கு!
|