Posted by S Peer Mohamed
(peer) on 4/17/2017 11:55:57 AM
|
|||
கடலாடி:கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓரிவயல் கிராமத்தில், கோடையிலும் வற்றாமல் நிறைந்து காணப்படும் குடிநீர் ஊரணியால் அக்கிராமத்திற்கு பெருமையும், பாராட்டும் கிடைத்து வருகிறது. ஓரிவயல் கிராமத்தின் நுழைவுப்பகுதியில் அமைந்துள்ளது 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருப்பன் கோயில் ஊரணி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊரணியை நன்கு துார்வாரி, அதில் கிடைத்த மண்ணைக்கொண்டு கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டது. ஊரணியை சுற்றிலும் கரைப்பகுதியில் வேலிக்கற்கள் ஊன்றியும், கால்நடைகள் செல்லாதவாறு கம்பிவலை வேலி அமைக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் நிழல்தரும் மரங்கள் செழிப்பாக வளர்ந்து பசுமையாக காட்சி தருகிறது. 2,100 பேர் வசிக்கும் இக்கிராமத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியதால் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை இல்லை. லாரிகளில் விலைக்கு வாங்கி நீரை பயன்படுத்தும் அவசியமும் இக்கிராம மக்களுக்கு ஏற்படவில்லை. குடிநீர் ஊரணி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செந்துார்பாண்டியன், 65, நவநீதகிருஷ்ணன், 48, ஆகியோர் கூறுகையில், ஓரிவயல் பாசனக்கண்மாயின் வெட்டுத்தாவு பள்ளங்களில், பருவமழை காலங்களில் தேங்கிய மழைநீரை, கிராம பொது நிதியில் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து கருப்பன் கோயில் ஊரணியில் பம்பு செட் மூலம் நிரப்பினோம். கடந்த ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குறைந்தளவு பெய்த மழைநீரை சேகரித்ததன் பலனாக, இன்றுவரை தண்ணீர் அதிகளவு உள்ளது. 15 அடி ஆழம் கொண்ட ஊரணியில், பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் ஊரணி நீரை குடங்களில் சேகரித்து செல்கின்றனர். இதற்காக ஊர் சார்பில் காவலாளி ஒருவரை நியமனம் செய்து பராமரித்து வருகிறோம். ஊரணி நீரை நன்கு காய்ச்சி பருகுகிறோம். 300க்கும் மேற்பட்ட மயில்கள், புறாக்கள், கொக்கு, செம்மூக்கு நாரை, நீர்காகம் உள்ளிட்ட பறவையினங்கள் தண்ணீரை தேடி இந்த ஊரணியில் தஞ்சம் புகுகின்றன. மழைநீரில் நிறைந்து காணப்படும் ஊரணியை பார்த்து, அரசு அலுவலர்கள், இதர கிராமத்தினர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர், என்றனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |