Posted by Haja Mohideen
(Hajas) on 5/2/2017 3:57:09 AM
|
|||
#நம்பி_ஆறு.. மேற்குத் தொடர்ச்சி மலையின் மகேந்திரகிரி, களக்காடு பகுதிகளில் உற்பத்தியாகிறது நம்பியாறு. வழியில் பரட்டையாறு, தாமரையாறு ஆகிய துணை ஆறுகளை அணைத்துக்கொண்டு அது திருநெல்வேலி மாவட்டத்தின் நம்பி மலையில் அருவியாக கொட்டுகிறது. கோடையிலும் லேசாக தண்ணீர் கசிகிறது. அங்கே இயற்கையாக அமைந்த ஒரு பள்ளம் இருக்கிறது. அதனை நிரப்பிய பின்பு வனம் வழியாக ஓடி ஊரை அடைகிறது நதி. அதுவரை மட்டுமே ஆற்றில் நல்ல தண்ணீரை பார்க்க முடியும். அங்கிருந்து திருங்குறுங்குடி, ஏர்வாடி, திருமலஞ்சி, ராஜாக்கல் மங்கலம், சித்தூர், ஆற்றங்கரை பள்ளிவாசல் வழியாக ஓடி உவரி அருகே கடலில் கலக்கிறது. நம்பியாறு அழியக் காரணமாயிருந்தது அது காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த மணல். ஒருகாலத்தில் நதி முழுக்க வாரிக் கிடந்தது மணல். கடும் கோடையிலும் கையில் பள்ளம் பறித்து குடிநீர் எடுத்துப்போனார்கள் பெண்கள். அவ்வளவு தண்ணீரை அது சேர்த்து வைத்திருந்தது. கோடையின் புழுக்கம் நிறைந்த இரவுகளில் மணல் மடியில் படுத்து உறங்கினார்கள் மக்கள். குளிர்ச்சியை வாரிக்கொடுத்தது அது. சித்தூரின் பங்குனி உத்தரமும் ஆற்றங்கரை பள்ளி வாசல் இஸ்லாமியர்களின் கந்தூரி வழிபாடும் ஆற்றின் மணல்வெளிகளில் களை கட்டின. ஆனால், அந்த மணலே ஆற்றுக்கு வினையாகிப்போனதுதான் வேதனை. இப்போது அல்ல, நம்பியாற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கத் தொடங்கிவிட்டோம். மணலை பொருளாக மட்டுமே நாம் பார்க்கிறோம். மணல் ஒரு கனிமம் மட்டுமல்ல. நதியின் பிள்ளை அது. தண்ணீர் தாங்கி அது. நீரை சுத்திகரிக்கும் இயற்கை வடிகட்டி அது. தண்ணீருக்கும் தாய் மடிக்கும் இடையே ஓடும் தொப்புள் கொடி அது. அந்த தொப்புள் கொடிதான் ஆற்றில் ஓடும் தண்ணீரை உறிஞ்சி நிலத்தடிக்கு அனுப்புகிறது (Aquifer). பசுமை மாறா சோலைக்காடுகளின் பஞ்சு போன்ற வேர் அமைப்பு எப்படி மழை நீரை சேகரித்து ஆறுகளை உருவாக்குகின்றனவோ அதே வேலையை நிலத்துக்கு கீழே செய்கிறது மணல். நிலத்துக்கு கீழே ஓடும் நீரோட்டங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று மணல். நம் வீட்டில் மோட்டார் போட்டவுடன் மேலே தொட்டிக்குள் தண்ணீர் விழுகிறதென்றால் காரணம் மணல். இன்று நிலத்தடி நீர் கணிசமாக வற்றிப் போனதற்கு பல்வேறு காரணங்களில் முக்கியமான காரணம் மணல் கொள்ளை. மணல் தேவைதான். நாம் காட்டுக்குள் வாழவில்லை. கட்டுமானங்கள் அவசியம்தான். ஆனால், கட்டுப்பாடுகள் வேண்டாமா? ஆற்றில் இப்படித்தான் மணல் அள்ள வேண்டும். இவ்வளவுதான் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. ஆற்றில் எல்லா இடங்களிலும் மணல் அள்ளிவிட முடியாது. ஆற்றில் உபரியாக மணல் இருக்கும் பகுதிகளில் மட்டுமே அள்ள வேண்டும் என்கிற சுற்றுச்சூழல் விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக, எந்திரங்கள், லாரிகள் ஆற்றுக்குள் இறங்கவே கூடாது. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? ஆற்றின் படுகை எங்கும் லாரிகளை பரப்பி னோம். ஆற்றின் வயிற்றைக் கிழித்து தொப்புள் கொடியை அறுத்தோம். களிமண் தரை வரை கிழித்து கருவிலிருக்கும் நதியின் பிள்ளைகளை கடத்தி கான்கிரீட் கொண்டு அடைத்தோம். கட்டுமான தளங்களின் கனத்த எந்திரங்களில் உருள்கிறது நதியின் உயிர். நம்பியாறும் இப்படிதான் படுகொலை செய்யப்பட்டது. ராதாபுரம், கோட்டை கருங்குளம், உறுமன் குளம், திருவெம்பலாபுரம், விளாத்திக்குளம் இங்கெல்லாம் பெரும் எந்திரங்களை கொண்டு மணல் அள்ளினார்கள். விடிய விடிய மணலை சுமந்துகொண்டு ஈரம் சொட்ட ஓடின லாரிகள். கேரளாவுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் லாரிகள் வரை சென்றன. உள்ளூர் விநியோகம் தனி. 44 ஆறுகள் ஓடும் கேரளாவில் மணல் இல்லையா? இருக்கிறது, அதைவிட அதிகமாக மக்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால், இங்கே நம்பியாறு கொல்லப்பட்டபோது உதவிக்கு வந்தார் யாருமில்லை. இன்னொரு பக்கம் தாது மணல் கொள்ளை. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்வேறு பாறை களில் உருண்டோடி வரும் நம்பியாறு அவற்றிலி ருந்து ஏராளமான கனிமங்களை தாது மணலாக கொண்டு வருகிறது. அவை எல்லாம் உவரி கடற் கரை நெடுக கொட்டி வைத்து கடலுக்குள் செல் கிறது ஆறு. ஆனால், இன்று பெரும் பள்ளங்களால் நிரம்பிக்கிடக்கிறது நம்பியாற்றின் கழிமுகம். கழிமுகத்தின் கரையோரம் எல்லாம் பள்ளம் தோண்டியதில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடல் நீரை உள்வாங்கியது ஆறு. ஆற்று நீர் கடலில் கலக்க முடியாமல் ஆக்கிரமித்து சாலை போட்டிருந் தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஆய்வுக்கு போன ககன் தீப் பேடி அவற்றைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பழைய நிலைமை தொடர்கிறது. திருக்குறுங்குடி, ஏர்வாடி, திருமலஞ்சி, ராஜாக்கல்மங்கலம் இங்கெல்லாம் ஆற்றை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. கண்ணீர் வருகிறது. நம்பி மலையில் தித்திக்கும் ஆறு திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் திருமலஞ்சியை சாக்கடையாகக் கடக்கிறது. ஆறெங்கும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அந்தப் புதர்களை அப்புறப்படுத்துவது எல்லாம் ஒரு வேலையே இல்லை. எந்திரங்களை விட்டால் அரை நாளில் அகற்றிவிடலாம். ஆனால், மணலை அள்ள காட்டிய முனைப்பை இதில் காட்ட மறுக்கிறார்கள். ஏர்வாடியின் ஒவ்வொரு தெருவும் நம்பியாற்றில் சென்றுதான் முடிகிறது. தெருவின் சாக்கடைகள் அனைத்தும் நம்பியாற்றில்தான் கலக்கின்றன. இன்று நம்பியாறு இல்லை. அது செத்துவிட்டது. நம்பியாற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை. சிறகொடிந்த நதியை திரும்பி பார்ப்போர் யாரும் இல்லை. நம்மை நம்பி ஓடி வந்த ஆற்றுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டோம். அதன் பிள்ளைகளான மணலை அள்ளி கட்டிடங்களை கட்டிக்கொண்டோம். உங்கள் படுக்கை அறைச் சுவரில் ஒரு நிமிடம் காதை வைத்து கேளுங்கள், அங்கே புதைக்கப்பட் ட நதியின் ஆன்மா ஒருவேளை உங்கள் மனதை தைக்கக்கூடும்.... (தமிழ் இந்து) https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/1714192195259451/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |