Posted by Haja Mohideen
(Hajas) on 5/3/2017 6:51:38 AM
|
|||
சுடும் வெயிலை தடுக்கும் எளிய முறைகள். சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் கான்கிரீட் கொண்டுதான் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, வெப்பமாக இருந்தாலும், குளிர்ச்சியாக இருந்தாலும் அதை கிரகித்துக்கொண்டு வீடுகளுக்குள் பரவ விடும் தன்மை கான்கிரீட் கட்டுமானங்களின் இயல்பாகும். அவ்வாறு கிரகிக்கப்பட்ட வெப்பமானது இரவில் வீடுகளுக்குள் பரவும். மின் விசிறியை இயக்கும்போது அந்த வெப்பம்தான் வீடுகளுக்குள் பரவுகிறது. சுட்டெரிக்கும் வெப்ப நிலையை வருடத்தின் பல மாதங்கள் கொண்டிருக்கும் நமது பகுதிகளில் வெப்பத்தடுப்பு பற்றி வெயில் காலங்களில்தான் கவனத்தில் கொள்ளப்படுகிறது. எளிமையான வழிகளை கையாண்டு வீடுகளுக்குள் வெப்பத்தை வரவிடாமல் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய தகவல்கள் பற்றி இங்கே பார்க்கலாம். சுண்ணாம்பு பூசலாம் வெள்ளை சுண்ணாம்பை மேல்மாடியின் தரைப்பரப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட ‘கோட்டிங்’ அடிப்பதன் மூலம், சூரிய வெப்பம் மாடியில் ஈர்க்கப்படாமல், பிரதிபலிக்க செய்துவிட்டால், வெப்பம் வீடுகளுக்குள் பரவாது. வெள்ளை அடிக்கப்பட்ட மாடி தரையானது விரைவில் சூடாகாமல் இருப்பதையும் உணர முடியும். இவ்வகை சுண்ணாம்பு கலவை அடிப்பதில் குறைவான செலவு கொண்ட முறை, அதிக செலவு கொண்ட முறை ஆகிய இரு வழிகள் இருக்கின்றன. அதாவது, வழக்கமான சுண்ணாம்பு பவுடருடன் அதில் கலக்கக்கூடிய விஷேச கலவை ஆகியவற்றை கலந்து பல ‘கோட்டிங்’ அடிப்பதில் செலவு அதிகமாக ஆவதில்லை. தரமான கம்பெனிகள் தயாரித்து வழங்கும் சுண்ணாம்பை பயன்படுத்தும்போது அதற்கேற்ற செலவு ஆகும். இந்த முறையை ஒவ்வொரு வருடமும் செய்ய வேன்டும் என்பது அவசியம். ‘ஹீட் புரூப் பெயிண்ட்’ தற்போது சந்தையில், கூரை மீது படியும் வெப்பத்தை தடுக்கும் பிரத்தியேகமான ‘கூல் ரூப் பெயிண்ட்’ வகைகள் பல விதங்களில் உள்ளன. அவற்றை மேற் கூரைக்கும் வெப்ப தடுப்பாக பயன்படுத்தும் அதே தருணத்தில் பக்கச் சுவர்களுக்கும் அதே முறையை கையாண்டு வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும். இந்த பிரத்தியேக ‘கூல் ரூப்’ பெயிண்டானது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு தாக்குப்பிடிப்பதாக அறியப்பட்டுள்ளது. அதன் பிறகு வெப்பத்தடுப்பு தன்மை குறைவதால் மீண்டும் ஒரு ‘கோட்டிங்’ பூசப்பட வேண்டியது அவசியம். வெயில் தடுப்பு வலை கட்டுமான பணிகள் நடக்கும்போது மறைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக பச்சை நிற வலைகளை நாம் பார்த்திருப்போம். பசுமையான செடிகள் விற்கும் கடைகளிலும் நிழலுக்காக இவ்வகை பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். நமக்கு வேண்டிய அளவுகளில் இவை சந்தையில் கிடைக்கின்றன. வீட்டின், மேல் மாடியில் பந்தல் போன்று நான்கு பக்கமும், மூங்கில் அல்லது இரும்பு பைப் பொருத்தி அவற்றில் அந்த பச்சை வலைகளை கட்டி பயன்படுத்தலாம். அதனால் மாடி தரைப்பரப்பில் நேரடியாக வெயில் பட்டு தளத்தின் வெப்பநிலை அதிகமாவது தடுக்கப்படுகிறது. மேலும், சீலிங் வழியே வெப்ப அலைகள் வீட்டுக்குள் பரவுவது தடுக்கப்படும். முக்கியமாக, இவற்றை வெயில் காலம் முடிந்ததும், முறையாக எடுத்து பாதுகாப்பாக வைத்து, பயன்படுத்தினால் ஐந்து வருட காலத்துக்கு உழைப்பதாக அறியப்பட்டுள்ளது. தென்னை ஓலை பயன்பாடு தென்னை ஓலைகளை மாடியில் பரவலாக போட்டு, தற்காலிகமாக மாடியின் தரைப்பரப்பை மூடுவதன் மூலமாகவும், வீடுகளுக்குள் வெப்பம் பரவுவதை தடுக்க இயலும். ஏறக்குறைய 4 வருடங்கள் வரையிலும் உழைப்பதாக அறியப்பட்ட இவை மழைக்காலங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, தக்க ஏற்பாடுகளை செய்து கொள்ளவேண்டும். சணல் பைகள் உபயோகம் கோணி என்று சொல்லப்படும் சணல் சாக்கு பைகளை, நன்றாக நீரில் நனைத்து மேல் மாடியின் தரைத்தளத்தில் போடுவதன் மூலம் வெப்பம் வீடுகளுக்குள் பரவுவதை தவிர்க்க இயலும். இந்த முறையானது தற்காலிக ஏற்பாடாக இருப்பதோடு, சாக்கு பைகளை அவ்வப்போது தண்ணீர் ஊற்றி நனைத்துவிட வேண்டியதாக இருக்கும். மூன்றடுக்கு வெப்ப தடுப்பு மேலே சொல்லப்பட்ட வழிகளில் மூன்றடுக்கு வெப்பத்தடுப்பு முறையை அமைக்கலாம். அதாவது, மேல்தளத்தில் முதலில் சுண்ணாம்பு பூச்சு செய்ய வேண்டும். இரண்டாவது பச்சை நிற வலையை நான்கு புறமும் பைப் கொண்டு அமைத்துக்கொள்ளவேன்டும். மூன்றாவதாக, சாக்கு பைகளை பரப்பி ஈரமாக வைக்கலாம். இந்த முறையில் வீடுகளுக்குள் வெப்பம் பரவாமல் தடுக்கப்படும்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |