நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த தடைச்சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது. இந்தியாவின் பன்மைச் சூழலைச் சிதைக்கக்கூடியது, உணவு விசயத்தில் அரசின் தலையீடு என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலும் கூட. இந்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத் வலியுறுத்தியுள்ளார்.
மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஜனவரி மாதம் தொடுக்கப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ள சூழலில், மத்திய அரசே இப்படியொரு ஜனநாயக விரோத அறிக்கையை வெளியிட்டுள்ளது வேதனைக்குரியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய இந்த அறிவிக்கை நடைமுறைச் சாத்தியமற்றது. பல்வேறு ஐயங்களுக்கு இடமளிக்கக்கூடியது. இந்திய விவசாயத்தை பாழ்படுத்தக்கூடியது. இந்த அறிவிக்கை தலித்கள், சிறுபான்மை மக்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்கள், ஏழைகள் ஆகியோரின் உரிமையைப் பறிப்பதுடன், இந்தத் தடை நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்பதை உணர்ந்திருந்தும் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசை ஆளும் பாஜகவின் மதவாதத்தையே வெளிப்படுத்துகிறது. வகுப்புவாத தீய சக்திகளின் பிடியில் மத்திய அரசு இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபட்டுவருவதை கைவிட வேண்டும்.
மாடுகள், மாநில அரசின் சட்டமியற்றும் பட்டியலிலும், மிருகவதைத் தடுப்புச்சட்டம் மத்திய மாநிலங்களின் பொதுப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ள சூழலில் மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையீடு செய்வது சரியான முறையல்ல. மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்ட மாநிலங்களில் மாட்டை முன்னிறுத்தி மனிதர்களை அடித்துக் கொல்லும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில் இந்தத் தடையின் மூலம் இந்தியா முழுவதும் இத்தகைய கொடூரங்கள் அரங்கேற இச்சட்டம் வழிவகுக்கும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்வதுடன், ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மக்கள் விரோத சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த இயலாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விவசாய பூமியான தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை நசுக்கும் இச்செயலுக்கு தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. தமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து வகுப்புவாதம் காலூன்ற தமிழக அரசு துளியளவும் இடம் தரக்கூடாது.
நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் தீயசக்திகளின் வெறுப்புச் செயலுக்கு பொதுமக்கள் பலியாகிவிடாமல் மத, இன, அரசியல் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நின்று ஜனநாயக ரீதியில் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகச் சக்திகள் இதனை சிறுபான்மையினர், தலித்களின் பிரச்னையாகப் பார்க்காமல் இந்த மனித உரிமை மீறலைத் தடுத்து நிறுத்த முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து இந்தியாவின் பன்மைத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும். மாடுகள் விற்பனைக்கு தடைவிதித்ததை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது.
ஏ.ஷப்பீர் அஹமத் மாநிலத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழகம் -புதுச்சேரி
|