Posted by S Peer Mohamed
(peer) on 5/27/2017 3:40:03 PM
|
|||
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகள், எருமைகள், ஓட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகளை சந்தைகளில் விற்கக்கூடாது என மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை, சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிராக மட்டுமல்ல நாட்டில் வாழக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என இந்தியாவில் மாட்டிறைச்சியை உண்ணக்கூடிய ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பாணையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அமைச்சர்களும், பாஜக மாநில முதல்வர்களும், பாஜக தொண்டர்களும் ஈடுபட்டு வருவது கவலைக்குரியது. தொடர்ச்சியாக பாஜக ஆளும் மாநிலங்களில், பாலுக்காக மாட்டை வாங்கிச் சென்றவர்களைக் கூட கடுமையாகத் தாக்கி அவர்களைத் துடிக்கத் துடிக்க கொன்றுள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற சம்பவங்களை நாடு முழுக்க நடத்தவே மத்திய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஆணை இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 25, நாட்டின் குடிமக்கள் தனக்குப் பிடித்த மதத்தை ஏற்றுக்கொள்ளவும், அதனைப் பின்பற்றவும், அதனைப் பிரச்சாரம் செய்யவும் உரிமை வழங்கியுள்ளது. இந்த உரிமையைப் பறிக்கும் செயலாகவே மத்திய அரசின் இந்த ஆணை அமைந்துள்ளது. இந்துக்கள் கோயில்களில் திருவிழாக்களின் போது பிராணிகள் பலியிடுவதையும் ஈஸ்டரின் போது கிறிஸ்துவர்களும், பக்ரீத் பண்டிகையின் போது முஸ்லிம்களும் தமது மத நம்பிக்கையின் அடிப்படையில் கோழி, ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் தடை செய்யக் கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த வாராகி என்ற எழுத்தாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் (W.P. (civil) 909/2014). இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு விசாரித்து, மத ரீதியான பலியிடுகளை தடை செய்ய இயலாது என்று குறிப்பிட்டது. மதச் சம்பந்தமான பலியிடல்கள் காலங்காலமாக நடைபெற்று வருவதாகவும், அதனை நீதிமன்றங்கள் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது எனவும் இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. மிருகவதை தடைச் சட்டம் பிரிவு 28ன்படி மத நம்பிக்கையின் பெயரில் கொடுக்கப்படும் மிருக பலிகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதையும் இத்தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனால் மோடி அரசு இன்று வெளியிட்டுள்ள ஆணை கோயில் திருவிழாக்களிலும் கூட கால்நடைகள் பலியிடப்படுவதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடையானது நாட்டு மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிடுவது மட்டுமல்லாமல் நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும், மாட்டிறைச்சி தடை போன்ற ஆணைகளால் நாட்டின் மதச்சார்பின்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கிறது. எனவே மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழக அரசு இந்தத் தடை ஆணையை அமல்படுத்த முடியாது என அறிவித்து அதில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும், மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று மோடி அரசின் இந்தப் பாசிச ஆணையை எதிர்த்துக் களமாட வேண்டுமென்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |