Posted by S Peer Mohamed
(peer) on 6/2/2017 10:42:56 AM
|
|||
அ.மார்க்ஸ் -June 2, 2017
இது தொடர்பாகத்தான் கவிக்கோ அவர்கள் என்னிடம் கடைசியாகப் பேசியது. “நான் அப்துல்ரகுமான் பேசுகிறேன்..” என உடன் உமர் அவர்களைத் தொடர்புகொண்டு எனக்கு அவர் கருத்தில் உடன்பாடு இல்லை எனச் சொல்லி, இந்தமுறை நான் தேர்வுக்குழுக் கூட்டத்திற்கு வர இயலாது என்பதையும் சொல்லி, என் பரிந்துரையாக ஒரு நல்ல எழுத்தாளரின் பெயரையும் சொல்லி முடித்துக் கொண்டேன். இன்று காலை நண்பர் சுகுமாரனும் பேரா.ஹாஜாகனியும் இந்தத் துயரச் செய்தியைப் பகிர்ந்துகொண்டபோது மனம் பதறியது. இறுதியில் இப்படி ஒரு சர்ச்சையோடா எங்கள் உரையாடல் முடிய வேண்டும்… கவிக்கோ அவர்களின் மிகச் சிறந்த பண்பாக நான் கருதுவது அவர் தன் முஸ்லிம் அடையாளத்தை எந்நாளும் மறைத்துக் கொண்டதில்லை என்பதுதான். கவிஞர் இன்குலாப் போலவோ இல்லை கவிஞர் மேத்தா போலவோ, மனுஷ்யபுத்திரன் போலவோ அவர் புனைபெயரிலும் உலவியதில்லை. முஸ்லிம் சமூகம் இன்று உருவாகியுள்ள மதவாத அரசியலின் இலக்காக்கப்பட்டுள்ள சூழலில் அவர்களோடு அடையாளப்படுத்திக் கொள்வது என்பதில் கவிக்கோ அவர்களுக்கு இணையாக யாரையும் சொல்ல இயலாது. தமிழ் கூறும் நல்லுலகால் ‘கவிக்கோ’ எனப் போற்றப்படுவதற்கு அவர் தரித்திருந்த இந்த முஸ்லிம் அடையாளம் எந்நாளும் தடையாக இருந்ததில்லை. இதை நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். தமிழ் மக்கள் அவரைப் பெரிதும் நேசித்தனர். வானம்பாடி இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடியாக அவர் போற்றப்பட்டார். அவரது ‘பால்வீதி’, ‘ஆறாவது விரல்’ முதலியன ஏராளமான பதிப்புகள் கண்டன. ‘ஜூனியர்விகடன்’ இதழ் அவரது எழுத்துக்களாலேயே புகழ் பெற்றது. கஜல், ஹைகூ எனப் பலதுறைகளில் அவர் தன் தனித்துவத்தை நிறுவினார். கவிதைக்கு நிகரான அவரது உரைநடையும் மக்களின் மனதைக் கவர்ந்தது. அவரது உருதுமொழிப் பயிற்சி அவரது தமிழின் அழகைக் கூட்டியது. சுமார் 50 நூல்களின் ஆசிரியர். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களைப் பதிப்பித்துள்ளார். சாகித்ய அகாடமி, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது என ஏராளமான விருதுகளுக்குச் சொந்தக்காரர். முஸ்லிம் இயக்கங்களுடன் அவர் நெருக்கமாக இருந்தபோதும் அவர் தன்னை தி.மு,க உடனேயே அடையாளப்படுத்திக் கொண்டார். கலைஞர் கருணாநிதி அவர்களின் நெருக்கமான நண்பராகவும் இருந்தார். நாளை நடக்க உள்ள கலைஞரின் 60 ஆண்டு சட்டமன்ற நிறைவு விழாதான் முதன் முதலாக கவிக்கோ இல்லாமல் நடைபெற உள்ள கலைஞரின் விழாவாக இருக்கும் என எண்ணுகிறேன். எனது “பெரியார்?’ நூல் வந்தபோது ஒரு நாள் இரவு ஒரு குழந்தைபோல என்னிடம் அவர் தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட ஒரு செய்தியை மறக்க இயலாது. அந்த நூலை கலைஞர் வெகுவாகப் பாராட்டினார் எனவும் என்னை ஒருமுறை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். மிகப் பெரிய மனிதர்களின் அருகாமையைக் கூச்சமாகக் கருதும் நான் அதை மெலிதாகத் தவிர்த்தேன். டைசியாகக் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது வக்ஃப் வாரியத் தலைவர் பதவி கவிக்கோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான ஒரு மருத்துவப் பல்கலைக் கழகம் உருவாக்குவது என்கிற திசையில் அவர் தன் இறுதிக் காலத்தில் கடுமையாக உழைத்தார். எனினும் அந்த அவரது குறிக்கோள் அவரது வாழ்நாளில் நிறைவேறவில்லை. அது நிறைவேறும் காலத்தில் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு “கவிக்கோ அப்துல் ரஹ்மான் மருத்துவப் பல்கலைகழகம்” என முஸ்லிம் சமூகம் பெயரிட்டுச் சிறப்புறும் என நம்புகிறேன். கவிக்கோ அவர்கள் தனிப்பட்ட உரையாடலில் மிகுந்த நகைச்சுவையுடன் பேசக் கூடியவர். நண்பர் ஆளூர் ஷாநவாசின் திருமணத்திற்கு நான், கவிக்கோ, அமீர் அப்பாஸ் ஆகிய மூவரும் ஒரே பெட்டியில் நாகர்கோவில் சென்று, ஒரே அறையில் தங்கி திரும்பிவந்த அனுபவம் மறக்க இயலாத ஒன்று. ஒரு கவிஞருக்கே உரித்தான குறும்புகளும், ரஸங்களும் மிக்க அவரது உரையாடல்களும் அவர் பகிர்ந்து கொண்ட கதைகளும் அனுபவங்களும் மறக்க இயலாதவை. கண்ணீர் மல்க என் அஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்… |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |