லண்டன் தீ விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்!
June 15, 2017
லண்டன் கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இஸ்லாமியர்களே தீ விபத்தில் சிக்க இருந்த பல மக்களை காப்பாற்றினர் என அந்த அடுக்குமாடி குடுயிருப்பில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரமலான் நோன்புக்காக அதிகாலையிலேயே (நள்ளிரவு 1-2 மணி) எழுந்து கடவுளை தொழுவதை வழக்கமாக கொண்ட அவர்கள், அன்றிரவு நடந்த தீ விபத்தை முதலில் பார்த்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை குறித்து எச்சரிக்கை மணி அடித்து வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.
பிற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் தீ எச்சரிக்கை ஒலி கேட்காமல் உறக்கத்தில் இருந்த சமயம் ரமலான் நோன்புக்கு விழித்த முஸ்லிம்கள் உடனடியாக விரைந்து பல நூறு உயிர்களை காப்பாற்றியுள்ளதாக அந்த அடுக்குமாடி குடிவாசி அண்ட்ரூ பார்ரஸோ தெரிவித்துள்ளார். 1974ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், சமீபத்தில் தான் சரி செய்யப்பட்டு மீண்டும் குடியமர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து இஸ்லாமியர் ஒருவர் கூறும்போது, ரமலான் மாதத்தில் நாள் முழுவதும் நோன்பு இருப்பதால் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை நோன்பு திறக்கப்படும். அதாவது 1 மணி முதல் 2 மணி வரை நோன்பு இருப்பவர்கள் உணவு உண்பார்கள். அப்பொழுது அவர்கள் விழித்திருந்து தொழுகை செய்வதும் வழக்கம். புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் உணவு உண்பதற்காக விழித்திருந்த இஸ்லாமியர்கள் கிரீன்ஃபெல் டவரில் தீ விபத்தை புகை மூட்டத்தின் மூலம் கண்டறித்து அங்கிருந்தவர்களை காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://ns7.tv/ta/tamil-news/world/15/6/2017/grenfell-tower-fire-muslims-awake-ramadan-among-heroes-who-helped-save
|