Posted by Haja Mohideen
(Hajas) on 6/20/2017 2:34:26 AM
|
|||
உலகம்_முழுவதும்_ஒரே_மாதிரி! இதுநாள்வரை உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஒரேமாதிரிதான் சித்தரிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி என்றும், தீவிரவாதி என்றும், குண்டுவைப்பவர்கள் என்றும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்கள். பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே மீடியாக்கள் சித்தரித்து வந்தன. விதவிதமான திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதியாக்கப்பட்டார்கள். இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டுச்சதி பயங்கரவாதிகளின் சூட்சமக்கயிறு தமிழகம்வரை நீண்டுள்ளது. துப்பாக்கி தொடங்கி விஸ்வரூபம் வரைக்கும் அவர்களின் தொடர்பு இருக்கின்றது. இஸ்லாமியர்கள் எந்நேரமும் ஸ்லீப்பர் செல்லாக இருப்பதுபோலவும், திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் செருப்பு வியாபாரம் செய்யும் முஸ்லிம் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் குழுவுடன் தொடர்பில் இருப்பது போலவும் எந்நேரமும் வெடிகுண்டு வைக்க கண்கானித்துக் கொண்டிருப்பதுபோலவும், சமயம் வரும் போது ISIS பயங்கரவாதிகளுக்கு துப்பு கொடுப்பது போலவும் ஒரு மாயையை இந்த அயோக்கியர்கள் உண்டாக்கி வைத்திருந்தார்கள்/வைத்திருக்கின்றார்கள். அதற்கு தோதாக இவர்களாகவே செட்டிங் செய்து இவர்களின் வசத்தில் இருக்கும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தியை பிளாஸ் செய்து கொண்டே இருப்பார்கள். உலகம் முழுவதும் இந்த சூழ்ச்சிவலை பின்னப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரனாகிய ரப்புல் ஆலமின் பலநேரங்களில் சூழ்ச்சிக்காரர்களின் முகத்தில் கரியைப் பூசி இஸ்லாமியர்களின் தியாகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி விடுகின்றான். சென்னையில் வெள்ளம் வந்தபோது வரிந்து கட்டிக் கொண்டு இஸ்லாமியர்கள் மீட்புப் பணிக்குச் சென்றார்கள், அவர்கள் எவ்விதமான லாப நோக்கமும் இன்றி களப்பணியாற்றினார்கள். தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரை மீட்டார்கள். தங்களின் பள்ளிவாசல்களைத் திறந்து விட்டு அந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து விட்டு சாலை ஓரங்களில் நின்று தொழுதார்கள். வந்த மக்களுக்கு வயிறார உணவுகளை வழங்கினார்கள். இந்த பாய்மார்களுக்கு என்ன தேவை? உங்களின் ஓட்டும் வேண்டாம் சீட்டும் வேண்டாம் உங்களின் அன்பு மட்டுமே போதும் என்று போஸ்டர் அடித்து ஒட்டும் அளவிற்கு இவர்களுக்கு என்ன பலன் கிடைத்து விட்டது என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். கடந்த புதன்கிழமை லண்டன் மாநகரில் வடக்கு கென்சிண்டனில் இருந்த 24 அடுக்குகளைக் கொண்ட கிரன்ஃபெல் டவர் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இரவு 1 மணிக்கு ரமலான் நோன்புக்காக விழித்திருந்த இஸ்லாமியர்கள் தீப்பிடித்ததைக் கண்டு பள்ளிவாசல்களில் இருந்து சப்தம் எழுப்பியவாறு அந்த கட்டடத்தை நோக்கி ஓடி ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி மக்களை எச்சரிக்கை செய்து அதிகபட்ச மக்களை வெளியே கொண்டு வந்துள்ளார்கள். அப்படி இருந்தும் பலி எண்ணிக்கை 58 ஆகி விட்டது. ஒருவேளை இஸ்லாமியர்கள் அங்கே நின்று வேடிக்கை பார்த்திருந்தால் பலி ஆயிரத்தை தாண்டியிருக்கும் என்கின்றது லண்டன் பத்திரிகை ஒன்று. தீ எரியும் கட்டடத்திற்குள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து உள்ளே வந்த முஸ்லிம்களை பாராட்டி மகிழ்கின்றனர் லண்டன்வாசிகள். சென்னை வெள்ளத்தில் பாய்மார்கள் எங்களின் தாய்மார்கள் என்று சொல்லி சிலாகித்த சென்னை மக்களைப் போல லண்டன் முஸ்லிம்களை மாற்றுமத லண்டன் சகோதரர்கள் சிலாகிக்கின்றனர். ரமலானுக்கு நன்றி என்று ரமலான் மாதத்தையும் பாராட்டுகின்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அத்தோடு லண்டன் முஸ்லிம்களின் சேவை நின்று விடவில்லை. அந்த கிரன்ஃபெல் பிளாட்டில் வசித்த மக்களை அழைத்து வந்து பள்ளிவாசல்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்கி சேவையாற்றி வருகின்றனர். இதைக் கண்டு நெகிழ்ந்து அங்குள்ள மக்கள் தங்களின் மொபைல் போன்களில் இதை படமெடுத்து முகநூலில் நேரலை செய்து வருகின்றனர். இத்துனைகாலமும் தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக எங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கபட்ட இஸ்லாமியர்கள், அவர்கள் இறைவனுக்காக பசியுடன் தாகத்துடன் நோன்பு வைத்துக் கொண்டு எங்களுக்காக உணவுகளை ஆயத்தம் செய்கின்றனர் என வீடியோக்களில் சொல்லி இஸ்லாமியர்களைச் சிலாகிக்கின்றார்கள் லண்டன் மக்கள். பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட சங்பரிவார பயங்கரவாதிகளின் பல்லாண்டு பிரச்சாரத்தை சென்னை வெள்ளம் ஒரேநாளில் கழுவி சுத்தம் செய்ததைப் போல லண்டன் மாநகரிலும் இந்த தீ விபத்து இஸ்லாமியர்கள் மீது பூசப்பட்ட தீவிரவாதக் கறைகளைத் துடைத்துச் சுத்தம் செய்து விட்டன. அல்ஹம்துலில்லாஹ்! சென்னை நிகழ்வையும் லண்டன் நிகழ்வையும் பார்க்கும் தமிழ்பேசும் மாற்றுமதச் சகோதரர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் குழுமங்களில் ஒருகேள்வியை வைக்கின்றார்கள். சென்னையில் உள்ள முஸ்லிம்கள் வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றினார்கள், பள்ளிவாசல்களில் தங்கவைத்தார்கள், உணவளித்தார்கள். லண்டனில் உள்ள இஸ்லாமியர்கள் இதேபோல அந்த மக்களை தீயிலிருந்து காப்பாற்றுகின்றார்கள், பள்ளிவாசலில் தங்கவைக்கின்றார்கள், உணவளிக்கிறார்கள்., லண்டனில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் சென்னையில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,அதெப்படி இருவரின் சிந்தனையும் ஒன்றுபோல இருக்கின்றது? என்பதே கேள்வி. அதற்கான விடை மிகவும் எளிமையானது. அனைத்து மக்களுக்குமான இறைவனின் போதனை அவ்வாறே உள்ளது. இறைவனின் போதனைகளை உலகுக்கு எடுத்துக்காட்ட வந்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும். இவை அனைத்தும் இறைத்தூதர் நடத்திக்காட்டிய நடைமுறைதான். பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்று சொன்ன முஹம்மது நபியின் மந்திரச் சொல்லின் அவதானங்கள் இந்த களப்பணிகள். அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அவன் அனுப்பிய தூதர் முஹம்மது அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் மட்டும்தான் உண்மையான இஸ்லாத்தினை மற்ற மக்களிடத்தில் பிரதிபலிக்கும் என்பதை உலகம் அறிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது. சூழ்ச்சிகள் பலியாக்கி மறைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் உண்மை சொரூபம் வெளிப்படத் தொடங்கி விட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே! | |||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |