‘புதிய இந்தியாவில்’ இளைஞர்களுக்கு என்ன உத்தியோகம்?
July 18, 2017
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் இந்திய வங்கிகளில் கட்டப்படாமல் இருக்கும் ‘கல்விக்கடன்’ பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்திய வங்கிகளில் 72,336 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 80% (சுமார் 62,000 கோடி) கல்விக்கடன் பொதுத்துறை வங்கிகள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 25.84 லட்சம் மாணவர்களுக்கு இந்த கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்தக் கல்விக்கடனில் 54% தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,கர்நாடகா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மிகக்குறிப்பாக கல்விக்கடனை அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் மாநிலங்களாக தமிழ்நாடும், கேரளமும் உள்ளன. 2014ம் ஆண்டு வரை மொத்த கல்விக்கடனில் 38 சதவீதத்தை இந்த இரு மாநில மாணவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.
மத்திய நிதி அமைச்சகம் அளித்திருக்கும் அறிக்கையின் அடிப்படையில் 2014, டிசம்பர் 31 வரை தமிழகத்தில் சுமார் 9,56,100 மாணவர்களுக்கு சுமார் 16,380 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் 4,03,355 மாணவர்களுக்கு 10,487.89 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டிருக்கும் கடனில், 90 நாட்களுக்கு மேலாக வட்டியோ மூலதனமோ செலுத்தப்படாமல் இருக்கும் வாராக்கடன் 2016 டிசம்பர் 31வரை சுமார் 6,336 கோடி ஆகும். இதன் அளவு மொத்த வங்கிக்கடனில் 8.76% ஆகும். இந்த தகவல்தான் ரிசர்வ் வங்கியின் அறிக்கை நமக்குத் தரும் புதிய செய்தி. இது கடந்த 2013, மார்ச் 31 வரை வராக்கடன் 2,615 கோடி ரூபாயாக இருந்ததாகவும், தற்போது அதன் விகிதம் சுமார் 142% அதிகரித்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த கடன்விவகாரம் தொடர்பாக பேசும்பொழுது, சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாராக்கடனாக உள்ள தொகையை வசூலிக்கும் உரிமையை விற்றது நினைவுக்கு வரலாம். 2016ம் ஆண்டுவரை தமிழகத்தில் மட்டும் வாராக்கடனாக உள்ள கல்விக்கடனின் அளவு 1875 கோடி ரூபாய் ஆகும். இந்த வாராக்கடன் தொகையில், தமிழகத்தில் மட்டும் 847 கோடி ரூபாய் கடனை எஸ்.பி.ஐ வங்கி வழங்கியுள்ளது. இந்தக் கடனில் 45%-ஐ (381 கோடி ரூபாய்) ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. அதில் முதல் தவணையாக 54 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டே எஸ்.பி.ஐ, ரிலையன்ஸுக்கு உரிமத்தை வழங்கியது. கடன் வசூலிக்கும் நடைமுறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கெடுபிடியால் லெனின் என்கிற இளைஞர் தற்கொலை செய்துகொண்டது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் வராக்கடன் குறித்த அறிக்கை, மாணவர்களுக்கான அழுத்தம் ஆகியவற்றிற்கு அடிப்படையான சிக்கலாக வங்கியாளர்கள் சொல்வது மூன்று முக்கியமான காரணங்கள்.
1.வேலையில்லாத் திண்டாட்டம்
2.வேலை கிடைத்தவர்களுக்கும் போதுமான ஊதியம் இல்லாமை
3.கல்வி மற்றும் கல்விசார் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமை.
இதில் மூன்றாவது காரணம் தமிழகத்தில் சலிக்க சலிக்க விவாதிக்கப்பட்ட விஷயம். தமிழகத்தில் தனியார் பெருமுதலாளிகள் வகைதொகை இல்லாமல்‘பெத்துப் போட்டிருக்கும்’ 500க்கும் மேற்பட்ட இஞ்சினியரிங் கல்லூரிகள் முக்கியமான உதாரணம். இந்த இஞ்சினியரிங் கல்லூரியை மையமாக வைத்து நாம் பேசுபவை எல்லாமே கட்டற்ற கல்வி வணிகம், இந்தியக் கல்விமுறை குறித்த விவாதத்திற்கே நம்மை இட்டுச் செல்லும். அவை நிரந்தரமான தீர்வுகளுக்கான கேள்விகள். ஆனால், அதைத்தாண்டி இந்த கல்விமுறையில் படித்துக் கொண்டிருக்கும் / படித்து முடித்துவிட்டுக் காத்திருக்கும் கோடிக்கணக்கான இந்திய இளைஞர் பட்டாளத்தை என்ன செய்யப் போகிறோம் என்பதையே நாம் சிந்திக்க வேண்டும். அதுதான், குறைந்தபட்சமாகவாவது நமக்கு உதவும். எனில், நாம் முதல் இரண்டு காரணங்களை மட்டும் விவாதிப்போம். உலகின் மிகப்பெரிய மனிதவளத்தை கொண்ட தேசத்தில் ஏன் இப்படி இருக்கிறது? பல லட்சம் கோடி ரூபாய்களை கடனாக பெற்றுத் தொழில் தொடங்கும் இந்திய நிறுவனங்கள் ஏன் அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை? பிரதமர் மோடி கொண்டு வந்த ’புரட்சிகரத் திட்டங்கள்’ என்ன செய்து கொண்டிருக்கின்றன?
“மேக் இன் இந்தியா” என்ன செய்தது?
மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் உற்பத்தியைப் பெருக்குவதை தன் நோக்கமாக வைத்து விளம்பரப்படுத்தப்பட்ட திட்டம். பிரதமர் மோடி தான் செல்லும் வெளிநாட்டு பயணங்களில் எல்லா இதுகுறித்து பேசுகிறார். மத்திய நிதி அமைச்சகம் 2015-16 ஆண்டில் 2.89 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதான் வரலாற்றிலேயே அதிகம் என்றும் பிரச்சாரம் செய்தது. இந்த சாதனையை ‘மேக் இன் இந்தியா’ தலையில் கிரீடம் சூட்டுகிறது மத்திய அரசு. ஆனால், ரிசர்வ் வங்கி துறைரீதியாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மொத்த முதலீட்டில் 8.44 சதவீதம் மட்டுமே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் உற்பத்தி துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மற்றவை எல்லாம் பிலிப்கார்டு, அமேசான் போன்ற ஆன்லைன் வணிகத்திலும், உபர், ஓலா போன்ற வாடகை டாக்ஸி நிறுவனங்களிலுமே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், வோடாஃபோன் நிறுவனம் இந்திய சந்தையைக் குறிவைத்து முதலீடு செய்த 46.3 ஆயிரம் கோடியும் அடக்கம்.
எந்த உற்பத்தியையும் இல்லாமல், இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களிடம் தாங்கள் தயாரித்தவற்றை விற்றுத்தள்ளும் இடமாகவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா இருக்கிறது. செல்போன் சேவை, பொருட்களை விற்கும் ஆன்லைன் வணிகம், டாக்ஸி வணிகமும்தான் வெளிநாட்டு முதலாளிகள் இந்தியாவில் மிகவும் விரும்பும் தொழிலாக உள்ளது என்பதற்கு சாட்சி இது. இவற்றையும் சேர்த்து உருவானதுதான் கடந்த மூன்று ஆண்டுகளில் உருவாகியிருக்கும் 6.41 லட்சம் வேலை வாய்ப்புகள். இதில் மிகப்பெரிய வருத்ததிற்குரிய நகைச்சுவை என்னவென்றால், இந்திய ராணுத்திற்காக செய்யப்படும் பிரம்மோஸ் மற்றும் தேஜாஸ் போன்ற பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் ஆயுத உற்பத்திகளையும் ‘மேக் இன் இந்தியா’ முதலீட்டில் நிதி அமைச்சகம் சேர்த்துக்கொள்வது தான்.
“ஸ்டாட்ர் அப் இந்தியா” எதையாவது தொடங்கி வைத்ததா?
ஸ்டார்ட் அப் இந்தியா என்ற பெயரில் மிகப்பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விநியோக துறையில் ஈடுபட்டுவந்த டினிஓவ்ல், பெப்பர்டேப், டசோ உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலகப்புகழ்பெற்ற ‘போர்ப்ஸ்’ பத்திரிக்கை ‘புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லாமல் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் இந்தியா விரைவில் தோற்றுவிடும் என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் கொண்டுவரப்பட்ட போது 10,000 கோடி நிதி அதற்காக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு பைசா கூட எந்த திட்டத்திற்கும் ஒதுக்கப்படவில்லை. மேலும், இந்த ஆண்டிற்கான நிதி பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதாக ட்ராக்சன் டெக்னாலஜி என்ற நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
புதிய நிறுவனங்களுக்கு மட்டுமே நிதி உதவி, 3 ஆண்டுகளுக்குள் வரிகட்டத் தொடங்க வேண்டும் போன்ற விதிகள் காரணமாக வாய் வீச்சைத் தவிர பெரிய தாக்கம் எதையும் செய்யவில்லை ஸ்டார்ட் அப் இந்தியா. ஸ்டார்ட் அப் இந்தியாவில் வரிச்சலுகைக்காக 1,368 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, அதில் 502 அங்கீகரிக்கப்பட்டு, அதில் கடைசியாக 8 நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத கல்விமுறையின் சுமையை ஸ்டார்ட் அப் இந்தியாவில் உணர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிவிட்டரில் ‘#HelpaskmeEmployees என்கிற ஹேஷ்டேக் பிரபலமானது. என்ன காரணம் தெரியுமா? ஸ்டார்ட்அப் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பேர் திடீரென்று வேலையிழந்தது தான். டிவிட்டரில் மட்டும் சுமார் 4,000 பேர் அப்படி டிவிட் செய்திருந்தார்கள் என்றால் இந்தியா முழுவதும் என்ன நிலை இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.
இந்திய இளைஞர்கள் என்ன தான் விரும்புகிறார்கள்?
பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து இருக்கும். ‘படித்தால் வேலை கிடைக்காது; படிக்காதவர்களுக்கு எளிதில் வேலை கிடைத்துவிடும்’ என்று. இதுவரை ஒரு சுவைக்காக சொல்லிக்கொண்டிருந்த இந்த விஷயத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அதை ஒத்துக்கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது படித்துப் பட்டம் பெற்ற 1,000 பேரில் 184 பேர் வேலையில்லாமல் இருக்கிறார். அதேநேரம், படிக்காதவர்களில் 1000 பேரில் 22 மட்டுமே வேலையில்லாமல் இருக்கிறார்கள். படித்தால் வேலை நிச்சயம் இல்லை; சரி தனித்திறன்களோடும், வேலை செய்யும் ஆற்றலோடும் இருக்கிறார்கள் என்றால் அதிலும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. இந்தியாவில் 130 கோடி ஜனக்கடலில் திறன்வாய்ந்த வேலைசெய்யும் ஆற்றலோடு இருக்கும் மக்களின் அளவு வெறும் 2.83% மட்டுமே என்று இந்திய திறன் மேம்பாட்டு திட்டக்குழு தெரிவிக்கிறது.
ஒருபக்கம் அழுத்தும் வேலையில்லாமையும், மறுபக்கம் கல்விக்கடன் போன்ற அழுத்தங்கள். இதிலிருந்து தப்பிப்பதற்காகவே பல ஆயிரம் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் மேல்படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மேல்படிப்பை முடித்துவிட்டு அரசு உதவித்தொகைக்காகவும், கொஞ்சமேனும் வாழ்வை நகர்த்துவதற்காகவும் தான் முதுகலை பட்டங்களை படிக்க பலர் முடிவு செய்கிறார்கள். 2015ம் ஆண்டு இந்திய தொழிலாளர் அறிக்கை, 1.6 கோடி மாணவர்கள் வேலையின்மை காரணமாகவே மேல் படிப்புகளுக்கும், முதுகலை பட்டங்களுக்கும் சென்றுள்ளதை உறுதி செய்துள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியத் துறைகளான உற்பத்தி, வர்த்தகம், கட்டுமானம், மருத்துவம் மற்றும் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, உணவகம் மற்றும் விடுதி ஆகியவற்றில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஜூலை 2014 - டிசம்பர் 2016 காலக்கட்டத்தில், 50% குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 6.41 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன. இது 2011-13 வரை 12.8 லட்சமாக இருந்தது. கல்விக்கடன் அதிகம் பெற்றுள்ள, அதிக படிப்பறிவு உள்ள மாநிலங்களான தமிழகத்தில் வேலையின்மை 3.8% ஆகவும், கேரளாவில் 10.8% ஆகவும் அதிகரித்திருக்கிறது. தொழில் செய்வதற்கு உதவி செய்யும் பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்தில் சிறு, குறு தொழில் உருவாக்கம் 3.23 லட்சமாக குறைந்துள்ளது. இது 2012-13-ஐ விட 24.48% குறைவாகும். இதேபோல், மகாத்மா காந்தி வேலைநாள் உருவாக்கத்திலும் மனித வேலைநாட்களின் அளவு 2015-ல் இருந்ததைவிட 2016-இல் 40% வரையில் குறைந்துள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின் மூலம் தெரியவந்துள்ளது. கல்வியில்லாத சமூகம் என்பது அறிவீனமானது. கற்றவர்களுக்கு வேலையில்லாத சமூகம் ஆபத்தானது. எனில் முறையான கல்வி இல்லை, கற்ற கல்வியில் மேம்பட்ட திறன் இல்லை, திறன் உள்ளவர்கள் தொழில்செய்ய சூழல் இல்லை, ஏதாவது தொழில் செய்துகொண்டிருப்பவர்களுக்கு நிதி ஆதாரம் இல்லை, நேற்றுவரை வேலையில் இருந்தவனுக்கு இன்றைக்கு வேலையில்லை, இன்றைக்கு வேலையில் இருப்பவனுக்கு நாளைக்கு வேலை நிச்சயம் இல்லை என்கிற அபத்தத்தின் உச்சகரமாய் இந்த சமூகம் வளர்ந்து வருவது எவ்வளவு அபாயகரமானது என்று யோசிக்கக்கூட முடியவில்லை. இன்று இந்தியாவில் ஒங்கியிருக்கும் சாதி, மத வேறுபாடுகள் தரும் சமூக பாதுகாப்புமின்மை இவற்றை இன்னும் தீவிரப்படுத்தி வருகின்றன. சமூக பாதுகாப்பும், பொருளாதார பதற்றமும் ஒரு மனிதனை குற்றம் புரிவதை நோக்கியே நகர்த்தும். இன்று எதற்கெடுத்தாலும் போராட்டம், ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் போராட்டம், என்ற நிலைக்கு பின்னால் இருப்பது அரசியல் காரணங்கள் மட்டுமல்ல. இவை எல்லாவற்றிற்கும் பின்னால் பொருளாதார சுதந்திரத்தை உணரமுடியாமல் அழுத்தப்பட்டிருக்கும் மக்களின் வேதனை இருக்கிறது. கல்வி அறிவில்லாமையோடு இருக்கும் சமூகத்தில் பாதுகாப்பின்மை உணர்வு ரவுடிகளையும், வன்முறைகளையும் உருவாக்கும். படித்து வேலையில்லாத சமூகத்தில் பாதுகாப்பின்மை என்பது வெறுமையையும், தீவிரவாதத்தையுமே வளர்த்தெடுக்கும். இதற்கு உலக உதாரணங்கள் பல இருக்கின்றன. நம் கண் முன்னால் நிற்கும் உதாரணம் காஷ்மீர். இதேநிலை நீடித்தால், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பிரசவமாகிக் கொண்டிருக்கும் புதிய இந்தியாவில் இளைஞர்களின் உத்தியோகம் தீவிரவாதமாகவே இருக்கும்.
|