பாஜகவின் ஜனநாயகப் படுகொலை
July 28, 2017
அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக 2014 இல் ஆட்சியில் அமர்ந்த பிறகு தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதிலும், ஆளுமையைத் திணிப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. அர்த்தமுள்ள விவாதங்கள் நடக்க அரசு தரப்பு அனுமதிப்பதில்லை. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் எதிர்க் கட்சிகள் தங்களின் வாதங்களை ஓரளவேணும் எடுத்து வைக்க முடிகிறது. மாநிலங்களவையும் எதிர்ப்பைச் சமாளிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மூலமாகவே நிதி மசோதா என்ற அடிப்படையில் சிலவற்றை நிறைவேற்றி வருகின்றனர். பெயரளவிற்கு எதிர்க் கட்சிகளிடம் ஆலோசிப்பது போன்ற மாயக் காட்சியை ஏற்படுத்தினாலும் தாங்கள் விரும்பியவற்றை விரும்பும் விதமாகவே அனைத்து சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றனர். மாநிலங்களவையில் நிறைவேற்ற இயலாத சட்டங்களை அவசர சட்டமாக கொண்டு வந்து ஜனநாயக மாண்புகளை சிதைத்தனர். மத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற முழு முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக ஜனநாயக மரபுகளையும், உணர்வுகளையும் புறக்கணித்து, எந்த வகையிலாவது ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட வேண்டுமேன துடிக்கிறார்கள். அருணாசல பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் கட்சி தாவலையும் குதிரை பேரத்தையும் ஊக்குவித்து மூன்றாண்டுகளில் 5 முதல்வர்கள் மாறுவதற்கு துணை போனது பாஜக. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைக் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்ததை உச்ச நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது. பின்னர் திரும்ப பதவியில் அமர்த்தப்பட்ட ஆட்சியை கட்சித் தாவலை ஊக்குவித்து பாஜக புறவாசல் வழியாக ஆட்சியை அமைத்தது, பாஜக ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த மரியாதையை உலகிற்கு உணர்த்தியது. வட மாநிலங்களின் தேர்தலின் போது எரிக்கவே இடமில்லாமல் எல்லாம் புதைக்கும் கல்லறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என மத ரீதியான பேச்சுக்களால் முனைவாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து பாஜக தொண்டர்கள் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்களைக் கொடுத்துக் கொண்டே தானிருந்தனர். மாநிலங்கலவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாநிலங்களில் அதிக அளவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்னிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு இருப்பதால் எப்பாடு பட்டேனும் வெற்றிக் கனியைப் பறித்திட பாஜக முயல்கிறது என்றால் மிகையாகாது. சமீபத்தில் நடந்து முடிந்த வட மாநில தேர்தல்களில் பாஜக கோவா, மணிப்பூரில் ஆட்சியமைத்தவிதம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட கட்சி ஆட்சியமைக்க அழைக்கப்படாமல் பெரும்பான்மையற்ற பாஜக மற்றும் சிலரோடு இணைந்து ஆட்சியமைத்தனர். ஜனநாயகக் கடமையாற்றிய மக்களின் தீர்ப்பை எள்ளி நகையாடியது போலிருந்தது இச் செய்கை. வட மாநிலங்களில் பாஜகவின் நடவடிக்கை இவ்வாறிருந்தது என்றால், தென் மாநிலமான தமிழ்நாட்டில் அவர்கள் ஆடிவரும் அரசியல் சதுரங்கம், சதுரங்கச் சாதுர்யன் சகுனியையே வெட்கித் தலை குனிய வைத்துவிடும். ஜெயலலிதா நோய் வாய்பட்டு மருத்துவமனையில் இருந்த போதே பாஜகவின் பார்வை தமிழகம் மீது திரும்பி விட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு ஆளும் அதிமுகவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்த பாஜக அதிமுகவில் பிளவு பட்ட அணிகளை தனித் தனியே ஊக்குவித்து அதிமுகவை சிதைத்து வருவது கண்கூடு. அதிமுக அணிகளில் உள்ளவர்கள் எவரும் உத்தமர்கள் இல்லையென்றாலும், ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமாவைத் தொடந்து தியானப் புரட்சி செய்த போது, அடுத்த ஆட்சி அமைவதற்கு எல்லாவிதமான முட்டுக் கட்டைகளையும் மறைமுகமாக ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். கிட்டத் தட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக பொறுப்பு ஆளுநர் அரசியல் புயல் வீசிய சென்னைக்கு வரவேயில்லை. தொடர்ந்து நடந்த கூவத்தூர் குதிரை பேரமும் தமிழக சட்டசபையில் நடைபெற்ற மாண்பைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் நாடறியும். குதிரை பேரத்தால் நிலை நிறுத்தப்பட்டதாக விமர்சிக்கப்படும் எடப்பாடி அரசினை தொலைவிலிருந்து இயக்கி பினாமி அரசு என்றப் பெயரைப் பெற்று தந்தது பாஜக. தமிழக நலன் குறித்த எந்த கோரிக்கையையும் ஏற்று நடவடிக்கை எடுக்காமல் இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடிக்கடி சந்திக்கும் பிரதமரின் ராஜ தந்திரம் நகைப்பிற்குறியதாக இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையின் உறுப்பினர்கள் முறையாக ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவினை குடியரசுத் தலைவருக்கு இது வரை அனுப்பாமல் மத்திய மாநில உறவில் மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறது மத்திய பாஜக அரசு. இதனால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக மாணவச் செல்வங்கள் தான். மருத்துவர் கனவோடு இருந்த மாணவர்கள் கனவில் மண் போடப்பட்டுள்ளது. இதே போல, வாழ்வாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதிக்கக் கோரி போராடும் பொது மக்களின் கோரிக்கைகள் மேல் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசையும் பொது மக்களையும் ஒரு சேர பந்தாடி வருகிறது பாஜக தலைமையிலான மத்திய அரசு. பண மதிப்பிழப்பாக இருந்தாலும் சரி, மாட்டிறைச்சி விவகாரமாக இருந்தாலும் சரி இந்தியா முழுவதும் பொது மக்களைப் பாதிக்கும் எந்த திட்டங்கள் குறித்தும் எதிர்க் கட்சிகளோடு ஆலோசனையோ, நாடாளுமன்றத்தில் விவாதமோ நடத்த பாஜக முன்வருவதில்லை. பாஜக, “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற கோஷத்திலிருந்து “எதிர்க் கட்சிகளே இல்லாத இந்தியா” என்ற நிலையை அடைய அனைத்து முயற்சிகளையும் நேரிடையாகவும், தனது துணை அமைப்புகளின் மூலமும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தான் பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் சில அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து “மகா கூட்டணி”யை உருவாக்கி மோடிக்கு சவால் விட்டு பீகார் மக்களின் நல்வாக்கைப் பெற்ற வெற்றியை ஒரே இரவில் தனதாக்கிக் கொண்டுள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்திற்கும் இடையே இருந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி நிதிஷ் குமாரை மகா கூட்டணியிலிருந்து விலகச் செய்து, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆக்கியுள்ளனர். நிதிஷ் குமார் லாலுவின் மகன் மற்றும் குடும்பத்தின் மீது வைத்தக் குற்றச்சாட்டுகளில் சாரமிருந்தாலும், லாலு பிரசாத், நிதிஷ் குமார் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை அணுகிய விதமும் விமர்சனத்துக்குட்பட்டதுதான் என்பதில் மறுப்பில்லை. ஆனால் இதனைப் பயன்படுத்தி மோடிக்கு எதிரான “மகா கூட்டணியை” உடைப்பதில் பாஜக காட்டிய முனைப்பும் விமர்சனத்துக்குறியதே. தமிழ் நாட்டில் பன்னீரின் ராஜினாமாவிற்குப் பின் அடுத்த அரசு அமைவதற்கு காலம் எடுத்துக் கொண்ட பாஜக நியமன ஆளுநர் நடவடிக்கையையும், நிதிஷ் ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே, பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினை ஆட்சியமைக்க அழைக்காமல், ஐக்கிய ஜனதா தள- பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் அணி வகுப்பைக் கொண்டு பெரும்பான்மையில்லாத ஐக்கிய ஜனதா தள சட்ட மன்றத் தலைவர் நிதிஷ் குமாரை மீண்டும் ஆட்சியமைக்க பீகார் ஆளுநர் அழைத்த அவசரம், பாஜக ஜனநாயக மரபுகளையும் சட்டத்தையும் தங்கள் நலனுக்காக எப்படி வளைக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். S.R. பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கிடப்பில் போட்டு பெரும்பான்மையை சட்ட மன்றத்தில் நிருபிப்பதற்கு முன்பே பெரும்பான்மையற்ற நிதிஷ் குமாரை ஆட்சியமைக்க பிகார் ஆளுநர் அழைத்தது ஜனநாயகப் படு கொலையன்றி வேறேன்ன. மொத்த இந்தியாவையும் காவிமயமாக்கி தங்கள் கொள்கையான “ ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கட்சி” என்ற அபாயகரமான நிலையை நோக்கி செல்லும் முயற்சியல்லவா. இது போன்ற ஜனநாயகப் படுகொலைகள் தொடர்ந்தால் மத சார்பற்ற இந்தியா என்ற நிலை மாறி, இந்துத்துவா சார்ந்த “அகண்ட பாரதம்” என ஆகி விடும் அபாயமுள்ளதை குடி மக்கள் உணர வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியையும் பாஜகவையும் எதிர்க்க ஜனநாயக மத நல்லிணக்க சக்திகள் சேர்ந்து விடாமலிருக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக எடுத்து வருகிறது. எதிர்க் கட்சிகளோ, மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணிகளோ அமையக் கூடாது என்பதில் குறியாக உள்ளது பாஜக. எதிர்ப்புச் சக்திகளே இல்லாத தேர்தல் களத்தைச் சந்திக்கவே பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. “அனைவருக்கும் வளர்ச்சி” என்ற கவர்ச்சிகரமான கோஷத்தை முன் வைத்து கோயபெல்ஸ் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாந்தால், அது பாசிசத்தைத் தான் வளர்த்தெடுக்கும், ஜனநாயகம் மரித்துப் போகும்.
http://ns7.tv/ta/பாஜகவின்-ஜனநாயகப்-படுகொலை
|