Posted by S Peer Mohamed
(peer) on 8/3/2017 11:43:49 PM
|
|||
இந்திய இராணுவத்தின் வாயிலாகத் தான் இவ்வளவு காலமும் தேசப்பற்று குறித்து நமக்குப் பாடமெடுத்து வந்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல். குறிப்பாக பணமதிப்பு நீக்கம் நம் தலைகளில் இடியென இறக்கப்பட்ட போது. வேலையிழந்து, கால் கடுக்க ஏ.டி.எம். வாயிலில் காத்துக் கிடந்த போது, தேசபக்தியின் இலக்கணமாக “இராணுவ வீரர்கள் மணிக்கணக்கில் எல்லையில் நிற்கவில்லையா?, நீ சில மணி நேரங்கள் நிற்க முடியாதா? ” என இராணுவத்தினரை முன் வைத்து பாஜக கும்பல் மக்களுக்கு தேசவிரோத முத்திரை குத்தி இழிவுபடுத்தியதை நாம் மறந்திருக்க முடியாது. அதே இராணுவத்தின் முன்னாள் படைவீரர்கள் 114 பேர், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்தும், அரசியல் சாசனம் குறித்தும் பாஜக கும்பலுக்கு வகுப்பெடுத்துள்ளனர். ஆயுதப்படையின் முன்னாள் வீரர்கள் இந்தியாவில் இந்துமதத்தின் பெயரால் பெருகி வரும் வகுப்புவாத, சாதிய வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளைக் கண்டித்துத் திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கின்றனர். கவுண்ட்டர் கரண்ட்ஸ் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது. பெறுநர் : இந்தியப் பிரதமர், நாங்கள் இந்த நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இந்திய ஆயுதமேந்திய படைகளின் முன்னாள் படைவீரர்களின் ஒரு குழுவினர். எங்கள் குழு எந்த ஒரு அரசியல் கட்சியோடும் இணைந்திருக்கவில்லை. மாறாக, இந்தியாவின் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட பொறுப்புணர்வு கொண்டிருக்கிறது. இப்படியொரு கடிதத்தை எழுதுவதற்காக நாங்கள் வருத்தம் கொள்கிறோம். ஆனால் இந்தியாவில் சமீபத்தில் நடந்து வரும் நிகழ்வுகள், நமது நாட்டை பற்றிக் கொண்டிருக்கும் பிளவுவாதத்தின் மீதான எங்களது அச்சத்தைப் பதிவு செய்ய வற்புறுத்துகின்றன. தற்போதைய அச்சமிகு, வெறுப்புமிக்க மற்றும் சந்தேகமிகு சூழலுக்கு எதிராகப் போராட, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குடிமக்களை ஒன்று திரட்டியுள்ள “ எனது பெயரில் அல்ல” (#NotInMyName) என்ற பிரசார இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயுதப்படையினர், வேற்றுமையில் ஒற்றுமைக்கு சான்றாக இருக்கின்றனர். மதம், மொழி, சாதி, கலாச்சாரம் அல்லது வேறு எந்த அடையாளங்களில் உள்ள வேற்றுமைகளும் ஆயுதப்படையினரின் ஒருங்கிணைவுக்கு தடையாக இருந்ததில்லை. வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வீரர்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்து இந்நாட்டைக் காப்பாற்ற போரிட்டுள்ளனர், இன்று வரை போரிட்டு வருகின்றனர். எங்கள் சேவைக்காலம் முழுக்கவும், வெளிப்படைத் தன்மையும், நீதியும், நியாயமான செய்கைகளும் எங்களது நடவடிக்கைகளை வழிநடத்தின. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம். பல்நிறம் கொண்ட பஞ்சுமெத்தையைப் போன்றது எங்கள் பாரம்பரியம். அது தான் இந்தியா. நாங்கள் இந்த பல்வகைத் தன்மையை நெஞ்சார நேசிக்கிறோம். இந்து மதத்தின் காப்பாளர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டவர்களின் இரக்கமற்ற நடவடிக்கைகளினால், இச்சமூகத்தின் மீது தொடுக்கப்படும் பெரும் தாக்குதல்களின் நேரடி சாட்சிகள் நாங்கள். முசுலீம்களும், தலித்துகளும் குறிவைக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகங்கள், குடிமைச் சமூக குழுக்கள், பல்கலைக் கழகங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளிட்டோரை தேசவிரோதிகள் என்று முத்திரையிடுவதன் மூலமும், அவர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமும், பேச்சுரிமையின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இனியும் எங்களால் பார்வையைத் திருப்பிக் கொள்ள இயலாது. நமது அரசியல் சாசனம் ஆதரிக்கும் விரிந்த, மதச்சார்பற்ற விழுமியங்களை நாங்கள் ஆதரிக்காமலும், அதற்காக பேசாமலும் இருந்தால் இந்நாட்டிற்கு மிகப்பெரும் தீங்கிழைத்தவர்களாவோம். நமது பன்முகத்தன்மையே நமது மிகப்பெரிய பலம். மாற்றுக் கருத்துக்கள் தேசதுரோகம் அல்ல, அவையே ஜனநாயகத்தின் சாராம்சம். மத்தியிலும், மாநிலங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்களை, எங்களது அக்கறையைக் கருத்தில் எடுத்துக் கொண்டு, நமது அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தாலும் உணர்வாலும் வேண்டுகிறோம்! செய்தி ஆதாரம் : |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |