Posted by S Peer Mohamed
(peer) on 8/3/2017 11:48:32 PM
|
|||
ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்து வரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டுவதையே ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெள்ளை நிற அட்டை, பச்சை நிற அட்டை என ரேசன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் படிப்படியாக ஒழித்துக்கட்டப்பட்டது. மானிய விலையில் அடிப்படை உணவுப் பொருட்களைப் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்சிங் அரசு. இதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 29/- க்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் ரூ.23/-க்கு அதிகமாகவும் வருமானம் உள்ள அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்டக் கமிசன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொது விநியோக முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது அன்றைய மன்மோகன்சிங் அரசு. இதன்படி நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 30/-க்கு அதிகமாக வருமானம் உள்ள ‘பெரும் பணக்காரர்களுக்கு’ ரேசன் மானியத்தை இரத்து செய்தது மன்மோகன் சிங் அரசு. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் ரேஷன் கடைகளை இழுத்து மூடுவது தான் என்பதை இச்சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்தே ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல்ரீதியில் ஆளும்கட்சி தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்பதையும், ரேஷன் கடைகளை இழுத்து மூடினால், அடுத்த தேர்தலில் தமது கட்சிக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது என்பதையும் அன்றைய ஜெயலலிதா அரசு அறிந்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” தமிழகத்தின் பொது விநியோக முறைக்கு எதிராக உள்ளதென குறிப்பிட்டு அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மறுத்து வந்தது தமிழக அரசு. அதன் தொடர்ச்சியாக, மாதந்தோறும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வரும் அரிசி ஒதுக்கீட்டில் சுமார் 1.26 இலட்சம் டன் அரிசி, சந்தை விலையான ரூ.22.53-க்கு மட்டுமே இனி தரப்படும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தது மோடி அரசு. இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா அரிசி வழங்குவதற்கான மானிய நிதிச்சுமை அதிகரித்தது. தற்பொழுது தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே மூன்று இலட்சம் குடும்ப அட்டைகளுள் ஒரு கோடியே தொண்ணுத்தொரு இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. அதிலும் கூட பல்வேறு பொருட்கள் அறிவிக்கப்படாமலேயே இரத்து செய்யப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மலிவு விலையில் உளுந்தம் பருப்பு வழங்குவது முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முதல் வாரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளது. 10ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பெரும்பான்மையான பொருட்கள் கிடைக்காத நிலை தான் தற்போது உள்ளது. எனினும் பெயரளவிற்காவது இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழக அரசு ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில்” சேர்ந்து விட்டதால், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத வருமானம் ரூ.8,334 -க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உட்பட எந்த பொருட்களும் வழங்க முடியாது எனப் பெரும்பான்மை தமிழக மக்களின் தலையில் கல்லைத் தூக்கி போட்டுள்ளது எடப்பாடி அரசு. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் பெற முடியாது. தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள், பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும். அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இவ்வுத்தரவின் படி, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இனி ரேசன் பொருட்கள் கிடையாது. தமிழகத்தில் நன்செய், புன்செய் நிலம் என்ற அடிப்படையில் பயிரிடப்படுகிறது. புன்செய் நிலத்தில் மழை பெய்யும் போது செய்யப்டும்“மானாவரி” விதைப்பு தான் நடக்கும். இதற்காக வாங்கப்பட்ட கடன்களைக் கூட அடைக்க முடியாத அவலநிலையில் தான் விவசாயிகள் உள்ளனர். இதில் ஒரு விவசாயி எந்த அளவிற்கு நட்டமடைகிறார் என்று சமீபகாலமாக தற்கொலைக்குள்ளாகும் தமிழக விவசாயிகளே சாட்சி. இவர்களில் பெரும்பான்மையானோர் ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் தான். ஆக, வறட்சி உள்ள காலங்களில் இதுவரை விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த அரை வயிற்று ரேசன் அரிசிக் கஞ்சியையும் இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தடுத்து விடும். அதோடு, உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதும், இந்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் பெரும்பான்மை விவசாயிகள் பாதிக்கப்படுவர். நாட்டில் 70% பேர் நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாயை மட்டும் கூலியாகப் பெறும் நிலையில் இத்திட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பட்டினிச் சாவை நோக்கியே தள்ளும். மாநிலத்தின் வரி வருவாய் மூலம், இதுவரை விலையில்லா அரிசியை வழங்கி வந்த தமிழக அரசு, தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் தனது சொந்த வரி வருவாயையும் இழந்துள்ளது. இச்சூழலில் தான் ”தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், அனைவருக்குமான பொது விநியோக முறையும், விலையில்லா அரிசித் திட்டமும் தொடரும்” என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வாய்க்கூசாமல் பேசுகிறார். அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை எனக் கூறி இத்தகைய நடவடிக்கைகளை வளரும் நாடுகள் கைவிட வேண்டும் என உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன. அதனை அட்சரம் பிசகாமல் நடைமுறைப்படுத்தி வருகிறார் மோடி! மோடியின் ஏகாதிபத்திய – கார்ப்பரேட் விருந்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது அடிமைகளின் கூடாரமான எடப்பாடி அரசு!! இனியும் பொறுத்துக் கொள்ளப் போகிறோமா ? என்பதே நம் முன் உள்ள கேள்வி!!!
Source: http://www.vinavu.com/2017/08/03/ration-subsidy-cut-neo-liberal-regime/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |