இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை பெண்கள் பாதுகாப்பு மசோதா என்னும் பெயரில் முத்தலாக் செல்லாது என மத்திய அரசு மசோதா நிறைவேற்றியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட உலமாசபை தலைவர் யாகூப் அலி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்லமிய ஜமாத்தார்கள், உலமாக்கள் உட்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் தங்களுடைய கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்து பேசினர்.
தேனியில் தமிழ்நாடு ஜமத்அத்துல் உலமா சபையின் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முத்லாக் தடை சட்டத்தை கைவிடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டனக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட இமாம்கள், நிர்வாகிகள் மற்றும் முஸ்லீம் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நாகை சட்ட மன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கரூர் நகர அனைத்து இஸ்லாமிய ஜமாத்தார்கள் சார்பில் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முத்தலாக் தடை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பெண்களை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
புதுச்சேரியில் முத்தலாக் தடைக்கு எதிர்ப்பு தெரவித்து சுதேச மில் அருகே கண்டனம் ஆர்ப்பாட்டம் நடபெற்றது. இதில் தடைசெய்யப்பட்ட திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்ள் எழுப்பப்பட்டன.
Thanks: http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_77694.html
|