Posted by Haja Mohideen
(Hajas) on 1/7/2018 9:59:39 AM
|
|||
ஒரு "அரசு பேருந்து ஓட்டுனரின்" மகள் பேசுகிறேன்..07-01-2018 ஒரு "அரசு பேருந்து ஓட்டுனரின்" மகள் பேசுகிறேன்.. அதுவரையில் சென்னைக்குள் குடியிருந்த நாங்கள் வீட்டு வாடகை தர முடியாத சூழலில் சென்னைக்கு வெளியே, துரைப்பாக்கத்தில், பாம்புகள் பல்லிகள் சூழ் பகுதியில் குடிசை வீடொன்றுக்கு வாடைக்கு மாறினோம். மூன்றாம் வகுப்பு குழந்தையான நான் , ஒரு கையில் தங்கையும், மற்றொரு கையில் தம்பியும், ஜோல்னா பையுமாக, எட்டாத பல்லவன் பேருந்து படிக்கட்டில் கை வைத்து ஏறி அடையாறில் இருக்கும் அவ்வை இல்ல பள்ளிக்கூடத்துக்கு வருவோம். அரசு உதவி பெரும் பள்ளி தான் எனினும் அங்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்துக்கு போக்குவரத்து ஊழியரான அப்பா படும் பாட்டை பார்த்து, நானும் தங்கையும், விடுமுறை தினங்களிலெல்லாம் குழந்தை தொழிலாளர் ஆக்கப்பட்டோம். 14 -15 வயசில் போட்டிருக்கும் ஆடை முழுக்க screen printing paint வழிய சாலைகளில் நிமிர்ந்து நடக்க கூசி குனிந்து நடந்து வீடு வந்த சேரும் நேரங்களில் எங்களின் தகப்பனார் அரசு பேருந்தில், லட்சக்கணக்கானோரின் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் தருபவராக நெருக்கடி மிக்க சென்னையின் சாலைகளில் வாகனத்தை செலுத்தி கொண்டிருப்பார். விவரம் தெரிந்த நாள் முதல் அப்பா retired ஆகி வரும்வரை 4000 ரூபாய்க்கு கூடுதலான சம்பளத்தை வாங்கியதாக நினைவே இல்லை. உப்பு மிளகாய் புளி கிடைத்தால் அடுப்பு கூட இல்லாமல் குழம்பு வைப்பது எப்படியென்பதை அம்மாவும் இந்த வாழ்க்கையில் பழகியிருந்தாள். . அதிகாலை முதல் எல்லா வகை ஷிப்ட் களிலும் மாங்கு மாங்கென்று வேலை செய்தும் கடன்கள் தவிர வேறு ஒன்றும் தேறாதது போக்குவரத்து துறை என்று உணர்ந்த நேரத்தில், வேலை மீதுள்ள கோபத்தை வீட்டுக்குள் நுழைந்ததும் காட்டுவார் அப்பா. வீடு, வேலையென உழைத்து கொட்டிய அம்மாதான் அடிதாங்கியாகவும் ஆனார். ஒரு முறை திடீரென சபரிமலைக்கு மாலை போட்டு கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா உடன் 13 வயதான தம்பியும். ஒரு விடியற்காலை தம்பியை கூட்டிக்கொண்டு புறப்பட்டு போனவர் தெருக்களில் சாமிக்கு உண்டியல் மூலம் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள். எண்ணி பார்த்ததில் 3500 தேறியது. மறுநாள் காலை பூசை எல்லாம் முடித்து உண்டியலை உடைத்து எடுத்த பணத்தை எங்கள் மூவருக்கும் பள்ளி கல்வி கட்டணம் கட்ட சொல்லி பிரித்து கொடுத்தார் அப்பா.. "அப்ப கோவிலுக்கு" என்று கேட்ட அம்மாவிடம், எது முக்கியம் னு அய்யப்பனுக்கு தெரியும் என்றார் அப்பா என்ற அரசு சம்பளம் வாங்கி கொண்டிருந்த அரசு போக்குவரத்து ஊழியர்... 30 ஆண்டுகால சேவை முடித்து retired ஆனதில் இருந்து ஓரிரண்டு ஆண்டுகள் ஒழுங்காக 6000 பென்ஷன் வந்து கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென இரு கண் விழிகளில் ஒன்று மட்டும் அப்படியே அசையாமல் நிற்க, அப்பாவை அரசு மருத்துவமனையில் சேர்த்த பொழுது தான் தெரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரி வர தரப்படாத பென்ஷன் பற்றி. மீண்டுமொரு முறை, பிறரை சார்ந்திருக்கும் நிலைக்கு தன்னை தள்ளிடுமோ என்ற அச்சம், பென்ஷன் ஆபீசுக்கும், தொழிற்சங்க அலுவலகத்துக்கும் நடந்து நடந்து தொய்வடைந்ததை காட்டிலும் தங்களின் பணம் 7000 கோடியை அப்படியே அமுக்கி வாயில் போட்டு கொண்ட அரசாங்கம் இனி அதை திருப்பி தர கடுமையாக போராட வேண்டுயிருக்கும் என்ற உண்மை தெரிந்து கொண்டதும், தான் இறப்பதற்குள் அது சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையும் அவரை முடக்கி போட்ட விஷயத்தை பற்றியும். அம்மா தன்னுடைய 65 வயதில் மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டாள். என்ன சொன்னாலும் இது தங்களின் சுயமரியாதை என்கிறாள். எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ஓராயிரம் அரசு போக்குவரத்து தொழிலாளியின் குடும்பங்களில் இன்று இது தான் நிலை. இப்போது சொல்லுங்கள், காலமெல்லாம் உழைத்து சேர்த்து அரசிடம் கொடுத்த தங்கள் பணம் 7000 கோடியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்து திரும்ப கேட்க்கும் இந்த போராட்டம் நியாயமற்றதா? போக்குவரத்து தொழிலாளிகள் போராடி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கவா? இப்போது சொல்லுங்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் தேவையற்றதா?
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |