Posted by Haja Mohideen
(Hajas) on 1/14/2018 6:29:36 AM
|
|||
500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள்!
ஜூனியர் விகடன்Jan,14th 2018 ஆதாரத்தின் அடிமடியிலேயே கைவைத்த சம்பவம் இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டை விவரங்கள் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெறும் 500 ரூபாய் செலவில் ஆதார் ஆணைய (UIDAI) இணையதளத்தில் உள்ள லட்சக்கணக்கானவர்களின் ஆதார் தகவல்களைப் பார்வையிட்டு, ஆதார் அட்டைகளை பிரின்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிக்கும் ரச்னா கைரா. ‘தி ட்ரிப்யூன்’ நாளிதழில் பணிபுரியும் அவரிடம் பேசினோம். ‘‘மோசடிக் கும்பல் ஒன்று கடந்த ஆறு மாதங்களாக ஆதார் தகவல்களை விற்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே விசாரணையில் இறங்கி அந்தக் கும்பலின் மொபைல் எண்ணைப் பெற்றேன். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனில்குமாரின் எண் அது. ‘எனக்குச் சில ஆதார் அட்டைகளின் தகவல்கள் தேவைப்படுகின்றன’ என அந்த மொபைல் நம்பருக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினேன். சில நொடிகளில் ‘உங்கள் பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை அனுப்பவும். கூடவே, PayTM மூலம் ரூ.500 செலுத்தவும்’ எனத் தகவல் வந்தது. என் பெயர் அனாமிகா, இ-மெயில் முகவரி: aadharjalandhar@gmail.com என்று செய்தி அனுப்பிவிட்டு, ரூ.500 செலுத்தினேன். ஆதார் இணையதளத்தில் உள்ள தகவல்களைப் பார்ப்பதற்கான ஒரு ஐ.டி., சில நிமிடங்களில் எனக்கு இ-மெயிலில் வந்தது. சிறிது நேரம் கழித்து மற்றொரு இ-மெயில் மூலம் பாஸ்வேர்டு வந்தது. அதைப் பயன்படுத்தி ஆதார் இணையதளத்துக்குள் நுழைந்த நான் அதிர்ந்து போனேன். எந்த ஆதார் எண்ணைப் பதிவிட்டாலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரி, புகைப்படம், மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது. ‘எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. எனக்கு ஆதார் அட்டையை பிரின்ட் செய்யும் வசதியும் வேண்டும்’ என அனில்குமாரை மீண்டும் தொடர்புகொண்டு கேட்டேன். அவர் ராஜ் என்பவரின் PayTM கணக்குக்கு 300 ரூபாய் அனுப்பச் சொன்னார். பணம் செலுத்திய சில நிமிடங்களில் சுனில்குமார் என்பவர் என்னைத் தொடர்புகொண்டார். Teamviewer சாஃப்ட்வேர் பயன்படுத்தி, என் கம்ப்யூட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி, அதற்கான சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தார். நான் சில ஆதார் அட்டைகளை பிரின்ட் செய்தபின், அந்த நபர் மீண்டும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் அந்த சாஃப்ட்வேரை நீக்கினார். பேய்ப் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளைப்போல, சில நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்தன. உடனே, சண்டிகரில் உள்ள ஆதார் ஆணைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தேன். அதிர்ந்து போனவர்கள், பெங்களூருவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றிய என் கட்டுரை வெளியானதும், நாடாளுமன்றத்தில் பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. ஒரு சில மணி நேரத்துக்குள் பஞ்சாப் சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் ஜலந்தருக்கு வந்து விசாரணை நடத்தினர். மத்திய உளவுத்துறையான ஐ.பி அதிகாரிகள் வந்து, ‘பயோ மெட்ரிக் (கைவிரல் ரேகை மற்றும் விழித்திரை) தகவல்களும் இப்படிக் களவாடப்பட்டனவா’ என விசாரணை நடத்துகிறார்கள். சில மாதங்க ளுக்கு முன், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் ஜலந்தரில் ஆதார் அட்டை பெற்ற தகவலையும் தோண்டி எடுத்து விசாரணை நடைபெறுகிறது. வெறும் 500 ரூபாய்க்கு இப்படி இந்தியாவில் யாருடைய ஆதார் தகவலையும் பார்க்க முடியும் என்றால், ‘எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது’ என அரசு சொல்வதை எப்படி நம்புவது? இந்தத் தகவல்களை வைத்து, சைபர் க்ரைம் குற்றவாளிகள் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எளிதில் கொள்ளையடிக்க முடியும். சமூக விரோதிகளிடமும் தீவிரவாதிகளிடமும் மக்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் கிடைத்தால், எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படும் தெரியுமா?’’ என ஆதங்கத்துடன் பேசினார் ரச்னா கைரா. ‘‘ஆதார் அட்டைகளில் நேர்ந்துள்ள தவறுகளைத் திருத்துவதற்காக சில ஏஜென்சிகளுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதைத்தான் யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். மற்றபடி, பயோமெட்ரிக் தகவல்களை யாரும் அணுக முடியாது’’ என்று தெரிவித்துள்ள ஆதார் ஆணையம், ரச்னா கைராமீது போலீஸில் புகார் கொடுத்துள்ளதுதான் எல்லோரையும் அதிர வைத்துள்ளது. மோசடி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல், ஐ.டி சட்டம் எனப் பல பிரிவுகளில் கொடுக்கப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை இந்தியா முழுவதும் பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டித்துள்ளன. இதனால், ரச்னா கைரா அசந்துவிடவில்லை. ‘‘என்மீது வழக்குப் போடுவதில் காட்டிய வேகத்தை, ஆதார் தகவல்கள் கசிவதைத் தடுப்பதிலும் காட்ட வேண்டும். அபாயகரமான இந்த விஷயம் பற்றி நான் இதுவரை எழுதியது கொஞ்சம்தான். எழுத வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது. என் புலனாய்வின் முழு விவரமும் இன்னும் சில நாள்களில் வெளிவரும். அப்போது தேசமே அதிரப்போகிறது’’ என்கிறார் அவர். இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது மத்திய அரசு? - ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர் https://www.facebook.com/ukhmz/posts/10214764022991147
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |