Posted by S Peer Mohamed
(peer) on 2/28/2018 12:00:53 PM
|
|||
சிரியா விவகாரம் பூதாகரமாகிக்கொண்டே போகிறது. கூட்டா மாகாணத்தில் பிஞ்சுக் குழந்தைகளை எல்லாம் பொட்டலம் போல் கட்டிக்கொண்டு போகிறார்கள் பெரியவர்கள். நெருப்பின் வீரியம் கூட தெரியாத குழந்தைகள் இருக்கும் வாழிடத்தில் ரசாயன வெடிகுண்டுகளை அந்நாட்டு அரசு போடுவதாக சொல்லப்படுகிறது. உலகில் பலருக்குச் இவ்விவகாரம் பற்றிய புரிதல் இல்லை அதைத் தெரிந்துகொள்ளவும் முயற்சிசெய்வதில்லை. ஆனால், தமிழகம் அப்படியா?
கூட்டா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 7 நாள்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை சிரியா. உண்மையில் சிரியாவில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கூகுளை அதிகம் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் என்கிறது கூகுள் ரிப்போர்ட். Syria, syria news in tamil, syria attack reason என்கிற வார்த்தைகள்தான் உலகளவில் தமிழர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ள வார்த்தைகள். உலகளவில் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். உலகளவில் சிரியாவைப் பற்றி அதிகம் தேடிய நகரங்களில் முதலில் இருப்பது சென்னைக்கு அருகே உள்ள ஆவடி, இரண்டாவது சிக்கிமின் காங்தோக், மூன்றாவது சென்னை சிறுசேரி. சிரியாவைப் பற்றியும் அதன் பின்புலத்தை பற்றியும் அதிகம் தேடியவர்கள் பட்டியலில் ஆவடி, சிறுசேரி, காட்டாங்குளத்தூர், நாகர்கோவில், மதுரை, திருச்சி, வேலூர், சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம், என்று முதல் 20 இடங்களில் 14 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளவை. முதல் 50 இடத்தில் தமிழ்நாட்டுப் பகுதிகள்தான் 90 சதவிகிதம். சிரியா குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூகுளில் தேடியிருக்கிறார்கள். சிரியா பற்றிய தமிழ்ச் செய்தி, சிரியா தாக்குதலுக்கான காரணம், சிரியாவை யார் தாக்குகிறார்கள், சிரியா தாக்குதலில் மரணத்தின் எண்ணிக்கை போன்ற வார்த்தைகள் தமிழகத்தில் இருந்து ஆங்கிலத்தில் அதிகமாகத் தேடப்பட்டவை.
இந்த விழிப்புஉணர்வுக்கு நம் நெட்டிசன்களுக்கும் நன்றிசொல்லியாக வேண்டும். கொஞ்சமும் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இல்லாத இந்நாட்டைப் பற்றியும், அங்கு நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைப் பற்றியும், எங்கும் இல்லாத அளவு செய்திகள், வலைப்பதிவுகள், யூ-டியூப் வீடியோக்கள் தமிழில் அதிகமாகவே வலம்வருகின்றன. ஆனால், போரை முன்னின்று நடத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஈராக் போன்ற நாடுகள் இவ்விவகாரம் பற்றிய செய்தியைக் கடந்த ஏழு நாள்களில் மிகச் சொற்பமாகவே தேடியுள்ளனர். குறிப்பாகக் கூகுள் ரிப்போர்ட்டில் US, 37-வது இடத்திலும், ரஷ்யா 63-வது இடத்திலும் உள்ளன. ஈழத்தில் நடந்தவை சிரியாவில் ஏன் நடக்கிறது என்ற கேள்வி தமிழர்களின் இந்தக் கூகுள் தேடல்களையும், வலைப்பதிவுகளையும் உருவாக்கியிருக்கலாம்.
இதே சீரியஸான வேளையில்தான் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாத சில நெட்டிசன்களும் தங்களுக்குத் தேவையானவற்றை தேடியுள்ளனர். கடந்த ஏழு நாள்களில் அதிகம் தேடப்பட்ட சில வார்த்தைகளில் pray for syria quotes மற்றும் pray for syria images என்ற வார்த்தைகளும் இருந்தன.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |