Posted by S Peer Mohamed
(peer) on 5/11/2018 12:16:46 AM
|
|||
மலப்புரம் Updated : 10 May 2018 தந்தை இழந்த பின், உயர் கல்விக்கு பணமின்றி தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவு அனைத்தையும் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் அருகே, புழக்கத்திரி அருகே கொட்டுவாட், வடக்கத்தோடி காலணியைச் சேர்ந்தவர் வி.டி. ரமேஷ். இவரின் மனைவி சாந்தா. இவர்களின் மகள் சத்யவாணி . பிளஸ் 2 முடித்த சத்யவாணி மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரமேஷ் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், லட்சக்கணக்கில் செலவு செய்தும் ரமேஷ் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இதனால், சாந்தா கணவரை இழந்து துயரத்திலும், வறுமையிலும் வீழ்ந்தார். குடும்பத்தைத் தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார், அதில் மகளின் படிப்புச் செலவுக்கென பணம் தேவைப்பட்டது. உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மகளின் கல்விச்செலவுக்கு பணம் கேட்டார் சாந்தா. ஆனால், உறவினர்களும், நண்பர்களும் சத்யாவாணியின் கல்விச் செலவுக்கு உதவ முன்வரவில்லை. இதையடுத்து, புழக்கத்திரி நகரில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஜமாத்துக்குச் சென்று சாந்தா தனது நிலையையும் எடுத்துக்கூறி கண்ணீர் விட்டார். இதையடுத்து, சந்தாவுக்கும், அவரின் மகள் சத்யவாணிக்கும் உதவ முஸ்லிம் சமூகத்தினர் உதவ முடிவு செய்தனர். தங்கள் சமூகத்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், உதவ நல்உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து நன்கொடையாகப் பணம் பெற்றனர். அந்தப் பணத்தில் முதல்கட்டமாக ரூ. ஒருலட்சத்தை சத்யவாணியின் கல்விக்கட்டணத்துக்கு அளித்து கல்விச்செலவு அனைத்தையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். அதுமட்டுமல்லாமல், சாந்தாவின் வாழ்வாதாரத்துக்கும் வழி செய்யும் வகையில் ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் புழக்கத்திரியில் உள்ள முஸ்லிம் மஹல் குழுவின் தலைவர் என் முகமது முசலிர், காதிப் அஸ்ரப் பைசி, செயலாளர் கே.கே.மொய்தீந், பொருளாளர் கே.ஹம்சா ஆகியோர் வாணியின் இல்லத்துக்குச் சென்றனர். அங்கு வாணியிடமும், அவரின் தாய் சாந்தாவிடமும் முதல்கட்டமாக கல்விக் கட்டணத்துக்கான ரூ.ஒரு லட்சத்தை அளித்தனர். அதுமட்டுமின்றி சாந்தாவின் கணவர் பெற்ற கடனையும் அடைத்து, அடமானம் வைத்திருந்த நிலப் பத்திரங்களையும் மீட்டு சாந்தாவிடம் முஸ்லிம் சமூகத்தினர் அளித்தனர். இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்றதோடு, அவர்களின் குடும்பத்தாரின் கடனையும் அடைத்த முஸ்லிம் சமூகத்தினரின் செயலை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
http://tamil.thehindu.com/india/article23837467.ece |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |