Posted by S Peer Mohamed
(peer) on 2/17/2019 11:45:40 AM
|
|||
புல்வாமா தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படையினரின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழனன்று மாலை மூன்று மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர், சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர். உயிரிழந்த தமிழக வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், சிவசந்திரனின் உடல், அவரின் சொந்த ஊரான அரியலூரின் கார்குடிக்கும், சுப்பிரமணியனின் உடல் தூத்துக்குடியின் சவலப்பேரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. சிவசந்திரன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சிவசந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், தூத்துக்குடியின் சவலப்பேரியில் சுப்பிரமணியனின் உடல் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியின் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கிய 1989க்கு பிறகு, இந்தியப் படைகள் மீது நடத்தப்படும் மோசமான தாக்குதல் இதுவாகும். Thanks: https://www.bbc.com/tamil/india-47264578
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |