Posted by S Peer Mohamed
(peer) on 3/16/2019 5:56:21 PM
|
|||
உங்கள் வீட்டுக்குள் நுழைந்து யாரேனும் குப்பைகளை கொட்டிச் சென்றால் என்ன செய்வீர்கள்..?பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டுக் கழிவுகளை உங்கள் மடைக்கு மாற்றி விட்டால்..?அவ்வளவு தான் போரே வந்து விடும்.. இல்லையா..?சரி..உங்கள் வீட்டுக் கழிவுநீர் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா..?என்றைக்காவது நமது கழிவுநீர் வேறு யாருக்காவது பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா என்பதை யோசித்திருப்போமா..? சுயநல உலகில் இது குறித்தெல்லாம் யோசிக்க நம் யாருக்கும் நேரம் இருப்பதில்லை..! தமிழகத்திலேயே எந்த ஊருக்கும் இல்லாத ஓர் வரலாற்றுச் சிறப்பு நமதூர் நெல்லை ஏர்வாடிக்கு மட்டுமே உண்டு. ஆம் ஒவ்வொரு தெருவும் முற்றுப்பெருவது ஆற்றங்கரையாகத் தான் இருக்கும். இதை விட தமிழத்தின் வேறு எந்த ஊருக்கும் இச்சிறப்பு இருந்ததாகத் தெரியவில்லை. நம்பி மலையில் இருந்து குறுக்கும் நெடுக்குமாய் ஓடி பல ஊர் மக்களின் தாகத்தை தனித்த நம்பி ஆற்றை இன்றைய காலத்து பெரியவர்கள் நன்றிக்கடனோடு "அதெல்லாம் ஒரு காலமப்பா ன்னு" வாழ்வின் பொக்கிசத்தை பகிரச் செய்வார்கள்.. ஊருக்கு நடுவே ஆறு ஓடுவது ஓர் வரம். நிலத்தடி நீரை அதிக்கப்படுத்துவதற்கும் அதனை சுத்தமாக தேக்கி வைப்பதற்கும் ஆறு முக்கிய பங்காற்றுகிறது. நேரம் கிடைத்தால் நம்பி ஆற்றை கொஞ்சம் எட்டிப்பாருங்கள்..! அண்மையில் நிதி அயோக் எனப்படும் மத்திய அரசின் நீர் மேலாண்மை குழு நடத்திய ஆய்வில் இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு விடும் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை வெளியிட்டுள்ளது. தூய்மையான குடிநீர் இல்லாமல் ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்..! கடந்த பருவமழையில் தமிழகத்திற்கு 600 மில்லி மீட்டர் கிடைக்க வேண்டிய மழை இப்போது வெறும் 340 மி.மீ மட்டுமே கிடைத்துள்ளது. இது வரக்கூடிய காலங்களில் இன்னும் குறையும் என்பது அதிர்சித் தகவல். கிடைக்கும் மழைநீரை பாதுகாப்பது இன்றியமையாத ஒன்று.இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு வீடுகளில் மிக ஆழமாக போர் போடுவது வாடிக்கையாகி விட்டது. ஒரு காலத்தில் கை போர் மூலம் வெறும் 40 அடியில் கிடைத்த தண்ணீர் இப்போது 800 அடியைத் தொட்டும் கிடைப்பதில்லை என்பது மலைக்க வைக்கிறது.. வீடுதோறும் அடி பண்புகள் இருந்த காலம் மாறி இப்போது கேன் வாட்டர்கள் பெருகிவிட்டது...! குடிநீரில் உள்ள அத்தனை சத்துக்களை உறிஞ்சி எடுத்து விட்டு வெறும் சக்கைத் தண்ணீரை கேனில் அடைத்து அதை காசு கொடுத்து வாங்குவதை விட மிகப்பெறிய கொடூரம் வேறு எதுவுமில்லை. கொட்டும் மழையை ரசிக்கிறோம், புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவு செய்கிறோம். ஆனால் அதனை சேகரிக்க தான் நமக்கு நேரமும் இல்லை, அக்கறையும் இருப்பது இல்லை. மழைநீரை பாதுகாக்க தவறிவிட்டு அதனை வீணாக சாக்கடையில் கலக்கச் செய்து ஆற்றில் விட்டு விடுகிறோம். இதனை தடுக்க வீடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் மழைநீர் தொட்டிகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து முடிந்தளவு நீரை தேக்கி பாதுகாத்தால் மட்டுமே ஏர்வாடியின் நிலத்தடி நீர் உயரும். வீடு,வாசல் என எண்ணற்ற சொத்துக்களை வருங்கால தலைமுறைக்கு சேகரித்து விட்டு உயிர் வாழ அடிப்படைத் தேவையான தண்ணீருக்கு அவர்களை யாரிடம் சென்று நிறுத்த போகிறோம்..?
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |