Posted by Haja Mohideen
(Hajas) on 12/3/2019 7:22:44 AM
|
|||
ஏர்வாடி பஸ் நிறுத்தத்திற்கு மேற்கேயுள்ள அனைத்து தெருக்களும் நீளவாக்கில் அமைந்து, நம்பி ஆற்றின் கரையில முடியும். இந்த பத்து தெருக்களையும் இணைக்கும் தெரு, வடக்கே அமைந்தாலும், அவ்வளவு தூரம் நடக்காம, சுருக்கமா செல்ல அமைந்த பாதைதான் 'முடுக்கு'. ஒவ்வொரு பிரதான தெருக்களையும் இணைக்கும் இந்த முடுக்குகளில் பல வருடங்களுக்கு பிறகு தனியே நடந்து வந்தபோது ஏனோ இந்த முடுக்கு என் மனதோடு இணைந்தது. முடுக்குகள் சில தெருவோடு முடிந்து விட்டாலும், முடுக்கிலிருந்து தெருவுக்கு திரும்பி,தெருவை கொஞ்சம் கடந்ததும் மற்றொரு முடுக்கு தொடங்கும். இப்படியே பல தெருக்களையும் இணைக்கும் சின்ன சின்ன முடுக்குகளை கிராமங்களில் பார்க்க முடியும் என்றாலும், ஏர்வாடியில் நீளமான முடுக்குகள் (பஸ் நிறுத்தத்திற்கு மேற்கே) அமைந்தது ஆச்சர்யம். முடுக்கு என்பது சென்னையில் சந்து (?). இந்த முடுக்குகளுக்கு தனி பெயர் இல்லை. உதாரணமாக, ஏழாம், எட்டாம் தெருவை இணைக்கும் 'முடுக்கினை', ஏழாம் தெருவில் இருப்பவர்கள், எட்டாம் தெரு முடுக்கு என்பதும், எட்டாம் தெருவில் இருப்பவர்கள், அதே முடுக்கினை ஏழாம் தெரு முடுக்கு என்பதும் பேச்சு வழக்காக உள்ளது. மக்கள் நடந்து செல்லும் அளவே முடுக்குகள் இருந்தாலும், தற்போது இரு சக்கர பைக்குகள், சில ஆட்டோக்கள் கொஞ்சம் பயமுறுத்தியே செல்கிறது இந்த முடுக்குகளில். சிறு வயதில் சைக்கிள் பழகும்போது, இந்த முடிக்கின் அருகே அமைந்த வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள், சைக்கிளில் இருந்து கீழே விழாமல் தாங்கி பிடித்து இருக்கிறது. இந்த சுவர்களை தாங்கி தாங்கி சைக்கிள் ஒட்டி பழகியவர்கள் பலருண்டு. கொஞ்சம் சைக்கிள் ஒட்டி பழகியதும், இந்த முடுக்கில் சைக்கிளில் எதிர் எதிரே வரும்போது, கொஞ்சம் பயம் இருந்தாலும், லாவகமாக ஹாண்டில் பார் திருப்பி மோதி கொள்ளாமல் லாவகமாக திருப்பி கொள்ளும்போது கிடைத்த சந்தோசங்கள்.... திருமண வீடுகளில், பிற வீடுகளுக்கு எடுப்பு சாப்பாடு கொடுக்குற வழக்கம் உண்டு. சிறு பிள்ளையாக, இருந்தபோது, எடுப்பு சாப்பாடு எடுத்து போவும் போது, நண்பர்களோடு எடுப்பு சாப்பாட்டில் கறியை மட்டும் களவாடி, முடுக்குகளில் உட்கார்ந்து தின்னது நினைவுக்கு வந்து போனது. திருடன் போலீஸ் விளையாட்டை, விளையாடும்போது பல வீட்டு திண்ணைகள், திண்ணையில் அமைந்த தூண்கள் மட்டுமல்ல, இந்த முடுக்குகளும் பெரிதும் உதவி செய்து இருக்கிறது விளையாடுவதற்கு. கோல் ஊன்றி நடக்கும் பல முதியவர்களுக்கு, சில கடும் உழைப்பாளிகளுக்கு, முடுக்கில் பக்கவாட்டில் அமைந்துள்ள வீட்டு சுவர்கள், சிறிது இளைப்பாற, சிறிது கையால் தாங்கி நிற்க இன்றும் துணை புரிந்து வருகிறது. என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த முடுக்குகள் மிக சுத்தமாக இருந்தது. முடுக்கின் ஓரத்தில், பல வீடுகளின் கழிவுகள் சாக்கடையாக சென்றாலும் முடுக்கை கடந்து சென்றவர்கள் யாரும் மூக்கை பொத்த வில்லை. சாக்கடை நீரின் ஓட்டத்தினை கொஞ்சம் ரசித்தேன். அந்த நீரில் குளியல் சோப்பு, துணி சோப்பு வாடையும்தான் அதிகம் அடிக்கி. https://www.facebook.com/groups/nellaieruvadi/permalink/3794806260531357/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |