Posted by Haja Mohideen
(Hajas) on 12/17/2019 12:20:12 PM
|
|||
Anbe Selva · 'CAB என்பது வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உள்ளே நுழையும் வந்தேறிகளுக்குத்தானே பொருந்தும், நீ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சட்டவிரோத குடியேற்றத்தை நீ ஆதரிக்கிறாய் என்று அர்த்தமா?’ ‘CABயால் வெளிநாட்டு முஸ்லிம்கள்தானே பாதிக்கப்படுவார்கள், உள்நாட்டு முஸ்லிம்களுக்கு இதில் என்ன காண்டு? அப்படியானால் இவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றுதானே அர்த்தம்?’’ என்றெல்லாம் என்னை இன்பாக்சில் கேட்கின்றனர். கேட்காமல் ஆனால் அப்படி நம்பிக்கொண்டு நிறைய பேர் இருக்கலாம். CAB என்பதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப்பற்றி நான் பேசி இருக்கிறேன். * ஒன்று, இந்த சட்டம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்கு மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது; * இரண்டு, இது இஸ்லாமிய நாட்டு ஒடுக்குமுறைகளை மட்டும் பேசுகிறது; இதர நாட்டு ஒடுக்குமுறைகள் பற்றி கவலை கொள்வதில்லை; * மூன்று, அரசே மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது இந்தியாவின் செக்யூலர் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; * நான்காவது, இது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது, அவர்களுக்கு பெரும் பாதிப்புகளை கொண்டு வரக்கூடியது; நான்காவது எப்படி என்று பார்க்கலாம். CAB சட்ட வடிவத்துக்கு அப்புறம் அமித் ஷா கொண்டு வரவிருக்கும் திட்டம் NRC, National Register of Citizens, அதாவது தேசிய குடிமக்கள் ஆவணம். இது பற்றி நான் முன்னரே எழுதி இருக்கிறேன். அஸ்ஸாமில் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு பெரும் இன்னல்கள் விளைவித்த இந்த திட்டம் அமித் ஷாவின் ஆசைப்படியே தேசமெங்கும் வரவிருக்கிறது. அஸ்ஸாமிலேயே இதற்கு 1500 கோடி செலவானது. இந்தியா முழுக்க இந்தக் கணக்கெடுப்பை கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி செலவாகலாம் என்று கணிக்கிறார்கள். இன்று இந்தியப்பொருளாதாரம் இருக்கும் நிலையில் இந்த தண்ட செலவு தேவையா என்பது தனி கேள்வி. ஏற்கனவே, பட்ஜெட் பற்றாக்குறையில் ஆரம்பக்கல்விக்கு ஒதுங்கியிருந்த நிதியில் 3,000 கோடியை மத்திய அரசு குறைத்து விட்டது. கல்விக்கு காசு இல்லை; ஆனால் இந்த மாதிரி அடக்குமுறை திட்டங்களுக்கு காசு செலவழிக்க தடையில்லை. அது தனி பிரச்சினை. அதை விடுங்கள். இந்த NRC திட்டப்படி இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், மகளும் தாங்கள் இந்தியர்தான் என்று அரசிடம் நிரூபிக்க வேண்டும். அதற்கு பாஸ்போர்ட் அல்லது ஆதார் கொடுத்தால் மட்டும் போதாது. ஆதார் என்பது அடையாள அட்டைதான், குடிமக்கள் என்பதற்கான நிரூபணமாக அதை பயன்படுத்த முடியாது. அதே போல பாஸ்போர்ட்டும் கூட காசு கொடுத்து வாங்கி இருந்திருக்கலாம். எனவே அதையும் தாண்டி ‘நீங்கள் இந்த ஊரில்தான் பிறந்தீர்கள், இன்னருக்குத்தான் பிறந்தீர்கள், அந்த இன்னாரும் இங்கேதான் பிறந்தார்,’ என்று நிரூபிக்க வேண்டும். அந்த நிரூபணத்துக்கு பிறப்பு சான்றிதழ், வட்டாட்சியர் சான்றிதழ், நிலப்பட்டா போன்ற விஷயங்கள் தேவைப்படும். யோசித்துப்பாருங்கள்: பிறந்த தேதி கூட சரிவர தெரியாத ஆட்கள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள். குறிப்பாக ஊரகப்பகுதிகளில் பெரும் சிக்கல்களை மக்கள் சந்திக்க நேரிடும். அலுவலகம் மாற்றி அலுவலகங்கள் அலைய வேண்டி இருக்கும். போகிற வருகிற ஆபீஸருக்கு எல்லாம் லஞ்சம் கொடுத்துத் தொலைய வேண்டி இருக்கும். ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்வோர் லீவு போட்டுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பிப்போய் இந்த நிரூபணங்களை முயற்சி செய்ய வேண்டி இருக்கும். அப்படியும் திருப்திகரமாக ஆவணங்களை காட்ட இயலாவிடின் அவர்கள் இந்தியரல்லர் என்று அறிவிக்கப்படுவார்கள். சரி, அப்படி காட்ட இயலாமல் போவதில் இந்துக்களும் இருப்பார்கள் அல்லவா, என்று கேள்வி எழுப்பலாம். இதில் ராவுத்தர் மட்டும் எப்படி பாதிக்கப்படுவார், ரமேஷும் பாதிக்கப்படலாமே? ஆம், ஒரே கிராமத்தில் ரமேஷ், ராவுத்தர் இருவரும் இந்தியரல்லாதவர் என்று அறிவிக்கப்படுகிறார்கள். இரண்டு பேருக்குமே நாடு கடத்தப்படும் நிலை வருகிறது. இங்கேதான் CABயின் தேவை வருகிறது. ரமேஷ் இந்தியரல்லாதவர் என்று ஆனாலும் அகதி என்ற அடிப்படையில் CAB சட்டத்தின்படி குடியுரிமை பெறுவார். அவர் தன் வாழ்நாளை அப்படியே தொடரலாம். ஆனால் ராவுத்தர் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்தாலும் CABயின் பாதுகாப்பு இல்லாததால். வந்தேறி என்ற முத்திரை பெறுவார். இந்த இரண்டு சட்டங்களையும் வைத்து இந்தியாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை சுலபமாக வந்தேறிகள் என்று அறிவித்து விடலாம். அவர்களின் குடியுரிமையை பறித்து விடலாம். அப்படி செய்ததற்குப் பின் அரசின் கொள்கை முடிவைப் பொருத்து இந்த ‘வந்தேறிகளின்’ ரேஷன் கார்டு, வாக்குரிமை போன்றவை பிடுங்கப்படலாம். அல்லது detention கேம்ப் எதற்காவது அனுப்பப்படலாம். அல்லது அமித் ஷா விரும்பியபடி மொத்தமாக கப்பலில் ஏற்றப்பட்டு வங்காள விரிகுடாவில் வீசி எறியப்படலாம். இதுதான் பிரச்சினை. தனியாக பார்க்கும் பொழுது இந்த CAB வெறும் ‘சட்டவிரோத வந்தேறிகளுக்காக’ என்ற பிம்பம் கொடுக்கிறது. தனியாக பார்க்கும் பொழுது NRC ஒரு தேசம் தனது குடிமக்களை கணக்கிடுகிறது, அவ்வளவுதானே என்ற அளவில் பிம்பம் கொடுக்கிறது. ஆனால் CAB என்பது ஜெலட்டின் குச்சி. NRC என்பது பற்ற வைக்கும் detonator. இரண்டையும் இணைத்ததும் சக்திவாய்ந்த குண்டு தயாராகி விடுகிறது. இந்த வெடிகுண்டை எதிர்த்துதான் என் போன்றோர் கதறுகிறோம். மாணவர்கள் போராடுகிறார்கள். அறிவுஜீவிகள் அழுகிறார்கள். மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் ரத்தவெறி கொண்டவர்கள் நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். Sridhar Subramaniam https://www.facebook.com/sisulthan/posts/2587411254641713 | |||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |