Posted by S Peer Mohamed
(peer) on 1/2/2020 6:39:24 AM
|
|||
அறிமுகம் இல்லாத பெண்ணின் கற்பையும் மானத்தையும் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன்.. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நடந்த ஒரு நிகழ்வு காட்சி ஊடக வெளிச்சத்தையும் பெறவில்லை. அந்த இளைஞரின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் அவரின் மறைவு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதுபோல, சரித்திரமாகப் போற்றப்படும். அந்த வழியாக ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் ஏறினார். அவருடன் சில பயணிகளும் ஏறிக்கொண்டனர். ஏனைய பயணிகள் வழியில் இறங்கிவிட்ட நிலையில், அந்தப் பெண் மட்டும் வாகனத்தில் இருந்தார். கொண்டஞ்சேரியில் 22 வயது யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோவிலிருந்து உதவி கேட்டு அந்தப் பெண் எழுப்பிய அலறலால் திடுக்கிட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ தங்களது இரு சக்கர வாகனங்களில் அந்த ஷேர் ஆட்டோவை துரத்தத் தொடங்கினர். தனது ஏனைய நண்பர்களை அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்துவிட்டு, யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். அந்த ஷேர் ஆட்டோவைக் கடந்து சென்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு விரைந்துவிட்டார். அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட யாகேஷ், சனிக்கிழமை இரவு உயிர் நீத்தார். பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்கிற ஷேர் ஆட்டோ ஓட்டுநரை மப்பேடு போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட பெண், பெரிய அளவில் காயமில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் நடந்த சம்பவம். இதே நிகழ்வு தேசியத் தலைநகர் தில்லியிலோ, மாநிலத் தலைநகர் சென்னையிலோ நடந்திருந்தால் நேற்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாகி இருக்கும். காட்சி ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் யாகேஷின் மீதும், சம்பவத்தின் மீதும் குவிந்திருக்கும். அந்தப் பெண், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியராகவோ அல்லது நகர்ப்புறவாசியாகவோ இருந்திருந்தால், பெண்ணிய அமைப்புகள் எல்லாம் அவருக்காகக் குரல் எழுப்பியிருக்கும். யாகேஷின் தியாகம் சமூக ஊடகங்களில் "டிரெண்டிங்'காக மாறியிருக்கும். ஆனால் என்ன செய்வது? இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள குக்கிராமத்தில் நடந்த நிகழ்வாக இருப்பதால், இது குறித்து ஊடகங்களும் கவலைப்படவில்லை, அரசியல்வாதிகளும் வரிசை கட்டி நின்று யாகேஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து இழப்பீடுகள் வழங்கி விளம்பர வெளிச்சம் பெறவில்லை. தமிழகத்தில் பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டுதோறும் 20,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2% அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 15 நிமிஷத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகச் சுட்டிக் காட்டுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வால் மட்டும்தான் பாலியல் குற்றங்களுக்குத் தீர்வு காண முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி இருந்தும்கூட, யாகேஷ் போன்று துணிந்து தவறைத் தட்டிக் கேட்கவும், போராடவும் நமது இந்தியச் சமூகம் தயாராகாமல் இருப்பதுதான், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம். யாகேஷ் போன்ற 100 இளைஞர்களைத்தான் இந்தியாவை மாற்றியமைக்க சுவாமி விவேகானந்தர் கேட்டார். இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார் மறைந்த கொண்டஞ்சேரி யாகேஷ். பெண்மையின் கற்பையும் மானத்தையும் பாதுகாக்க தனது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கும் யாகேஷின் துணிவுக்கு "தினமணி' தலைவணங்குகிறது என்று தினமணி நாளிதழ் பதிவு செய்துள்ளது. குறிப்பு;யாகேஷ் அவர்களின் ஆன்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இந்த குடும்பத்தினருக்கு உதவி செய்ய,ஆறுதல் கூற எந்த அரசியல்வாதியும் செல்லமாட்டான்..நல்லவர்களை ஊக்குவிக்க மாட்டார்கள்.முகநூல் நண்பர்களாவது பிரார்த்தனை செய்வோம்.அவர்களின் குடும்ப சூழல் தெரிந்தால் உதவி செய்வோம்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |