சில தினங்களுக்கு முன் நான் மும்முரமாக ஒரு அலுவலக பணியில் இருந்த போது செவிலியர் ஒருவர் தொடர்பு கொண்டார். "மேடம் முஸ்லீம் ஒருத்தவங்க பிரசவ வார்டு பக்கத்தில் நிற்கிறாங்க, அவங்க நிற்பதை பார்த்ததும் நம்ம வார்டு கேஸ் உடைய அட்டெண்டர் ஒருத்தர் வந்து எங்ககிட்ட சண்டை போடுறார், முஸ்லீம் எல்லாம் GHகுள்ள ஏன் விடுறீங்க"என கேட்கிறார் என்றார் செவிலியர். எனக்கு சுளீரென கோபம் வந்தது, ஆனால் நான் பதில் ஏதும் சொல்லாமல் என் பணியை தொடர்ந்தேன். நான் எதுவும் பேசல.பேச விரும்பல என்பதே உண்மை. பொறுத்து இருந்தேன்.
அடுத்த சில மணி நேரங்களில் இன்னொரு செவிலியர் தொடர்பு கொண்டு இதே விசயத்தை சொல்ல எனக்கு கடுமையான கோபம் வந்து கத்தினேன். அந்த attender இந்த செவிலியரிடமும் சண்டை போட்டு இருக்கார். "எந்த அட்டெண்டர் சொன்னான், அவனை முதலில் வெளியேற்று, அது எந்த case ஆக இருந்தாலும் சரி, medical college refer பண்ணு, முஸ்லீம்கள் மருத்துவமனைக்குள் வரக் கூடாது என்று சொல்றவன் இந்த அரசு மருத்துவமனைக்குள் வர கூடாது எனக்கு" என்று கத்தினேன். நான் நேர்ல வந்தா பிரச்சனை வேறு மாறி போகும்,அப்படி பேசியவரை மரியாதையா இருக்க சொல்லு என சொன்னேன் செவிலியரிடம்.
ஜமாத்ல இருந்து அப்துல் ஹமீத் பேசினார்,""சகோதரி நாங்கள் உங்களுக்கு மதிய உணவு அளிப்பதில் ஏதேனும் பிரச்சனை இருக்கா, நாங்க தொடர்ந்து அளிக்கலாமா,அரசு ஏதும் தடை விதித்து இருக்கா "என்றார். ஒரு மாசமா நீங்க தானே(பொன்னேரி ஜமாத் ) எங்களுக்கு மதிய சோறு போடுறீங்க, அதை நிறுத்தாதீங்க, தயவுசெய்து எங்களுக்கு உணவு தாருங்கள், எங்களிடம் பணம் இருக்கு, அரசே எங்களுக்கு சோறு போடும், ஆனால் எங்களுக்கு முஸ்லிம்கள் போடும் சோறு தான் வேணும் என்றேன். நம்ம மருத்துவமனை பிரசவ வார்டில் நடந்ததை சொன்னேன். ஆகையால் எங்களை விட்டு நீங்கள் விலக வேண்டாம், ஜமாத் மக்கள் வாருங்கள் மருத்துவமனைக்கு என்றேன். நீங்க போடும் சோறு தான் வேணும் என்றேன். நன்றி சகோதரி என்றார் அந்த சகோதரர்.
இந்த உணவை நான் மறுத்தால் அது மாபெரும் பிழை ஆகும். முஸ்லீம் மக்கள் ஒதுக்கப்பட வேண்டிய மக்கள் அல்ல. என் உடலில் கல்லீரல் முக்கியமா மண்ணீரல் முக்கியமா என்றால் எனக்கு இரண்டுமே முக்கியம் தான். உடலின் ஒவ்வொரு உறுப்பை போல தான் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இனமும் மதமும்.அது தான் இந்தியா. பல இனங்களின் தொகுப்பு தான் இந்தியா. பல குழுக்களின் தொகுப்பு தான் தமிழகம்.நாம் யாரையும் வேற்றுமை படுத்த கூடாது. விரோதம் கொள்ள கூடாது. இன்று கொரோனா வரும், நாளை போகும். அது போனபின்னும் நாம் இங்கே இணைந்து வாழ தான் போகிறோம், வாழ்ந்து தான் ஆகனும்.
கொரோனாவின் உடலை சுற்றி முள் காம்புகள் (spikes )இருக்கும்.அவ்வளவே. கொரோனாவிற்கு தலையில் குல்லா இருக்காது.கொரோனாவிற்கு சாதி மதம் மொழி எல்லாம் கிடையாது. அதுக்கு குல்லா போடும் செயலை யாரும் செய்ய வேண்டாம்.
மருத்துவர். அனுரத்னா 18/4/2020
|