Posted by S Peer Mohamed
(peer) on 4/26/2020 2:04:58 PM
|
|||
கொரானா தொற்று பரவலைத் தடுக்கும் ஊரடங்கால், உணவின்றித் தவிக்கும் ஆதரவற்றவர்களை டூவீலரில் தேடிச்சென்று, தினமும் உணவு வழங்குகிறார் ஒரு கல்லூரிப் பேராசிரியை. வீட்டில் சமைத்து, அதை பேக்கிங் செய்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு இடமாகச் சென்று ஏழைகளின் பசி போக்கும் இவரின் சேவை, பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. நாகப்பட்டினத்தை அடுத்த மஞ்சக்கொல்லை ஆண்டவர் கல்வியியல் கல்லூரியில் பேராசிரியையாக இருப்பவர், ரம்யா. சமூக சேவையில் ஆர்வம் கொண்ட ரம்யா, கஜா புயல் பாதிப்பின்போதும் நண்பர்கள் உதவியோடு நிறைய நிவாரணப் பணிகள் செய்திருக்கிறார். அதேபோல், உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் ஊரடங்கின் நேரத்திலும் தன் சேவையைத் தொடர்கிறார். இதுபற்றி ரம்யாவிடம் பேசினோம். ``நான், தினமும் வெளியில் செல்லும்போது உணவுக்குக் கையேந்தும் பலரைப் பார்த்திருக்கிறேன். தற்போது, ஊரடங்கால் ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்.... என்று மனம் பதைத்தது. எனவே, ஊரடங்கு ஆரம்பித்த மறுதினமே 4 படி புளிசாதம் செய்து 30 பேருக்கு உணவு வழங்கினேன். மறுநாள், எனது அத்தை 5 படி அரிசி கொடுத்தார். அதில், தக்காளி சாதம் செய்து கொடுத்தேன். அதன்பின், பசித்துயர் துடைக்கும் பணிகுறித்தும், அதற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியும், என் நண்பர்களுக்கு தகவல் சொன்னேன். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், துறைமுகம் போன்ற பகுதிகளில் பசியால் வாடுவோர் குறித்து ஃபேஸ்புக்கில் கவலை தெரிவித்தேன். அதைப் பார்த்த நண்பர்கள், ரூ.1,000, ரூ.500 என பணம் அனுப்பி உதவினார்கள். இதுபற்றி டெல்லியில் வசிக்கும் ஷாஜகான் என்ற தாராள உள்ளம் படைத்த மனிதர், ரூ. 52,500 அனுப்பியிருந்தார் (கஜா புயல் சமயத்திலும் பெரியளவில் உதவியவர்). அதனால் இனி, நண்பர்களைப் பணம் அனுப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டேன். தினமும் காலையில், குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் சமையலில் உதவுவார்கள். புளி சாதம், வெஜிடபுள் ரைஸ், தக்காளி சாதம், சாம்பார் சாதம் என ஒவ்வொரு நாளும் வெரைட்டியாகச் செய்து, நானே கொண்டுபோய்த் தருவேன். 300 பேர் அளவுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.``ரொம்ப ருசியா இருந்ததுமா... நீ நல்லா இருக்கணும் தாயே" என்று அவர்கள் ஆத்மார்த்தமாகச் சொல்லும்போது, நான்படும் கஷ்டம் அத்தனையும் ஒரு நொடியில் பறந்துபோகும். இதில் ஒரு மறக்க முடியாத சம்பவம். ஒரு அம்மா, தினமும் `என் வீட்டுக்காரருக்கு ஒண்ணு கொடு'ன்னு கேட்டு வங்கிப் போவாங்க. நான் எதேச்சையாக, `உங்க வீட்டுக்காரர் நடமாட முடியாம இருக்காங்களா... உடம்புக்கு முடியலையா’ன்னு கேட்டேன். திடீர்னு அந்த அம்மா கோபப்பட்டு, `நீ சந்தேகப்பட்டு கேட்கிறே. இனி உன் சோறு வேண்டாம்’னு தூக்கி எறிஞ்சிட்டுப் போய்ட்டாங்க. 'நாம அப்படிக் கேட்டுருக்க வேண்டாமே ' என்று வருந்தினேன். ஏற்கெனவே, கஜா புயல் நேரத்தில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல நிவாரணப் பணிகள் செய்து அனுபவம் இருக்கிறது. இன்னும் எத்தனை நாள்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், அத்தனை நாள்களும் உணவு வழங்கிட முடிவுசெய்துள்ளேன்" என்றார். நன்றி: விகடன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |