கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்து, உணவுக்கு வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். ஹரியானா கூர்கானில் வசித்து வரும் மோகன் பஸ்வானுக்கு மொத்தம் 5 குழந்தைகள். பீகாரை பூர்வீகமாக கொண்ட அவர் கூர்கானில் இ-ரிக்ஷா ட்ரைவராக பணியாற்றி வருகிறார். அவருடைய 4 குழந்தைகளும் பிகாரில், அவர்களின் அம்மாவுடன் வசித்து வர, அவருடைய மூத்த மகள் ஜோதி குமாரியுடன் கூர்கானில் வசித்து வந்தார் மோகன்.
சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் அடிபட்ட மோகனால் பிறகு சரிவர வேலைக்கு செல்ல இயலவில்லை. வீட்டு வாடகை தராத சூழ்நிலை ஏற்பட்டது. லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர், வீட்டின் உரிமையாளர், அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். வீட்டிற்கு செல்வதற்கு வழியாமல் தவித்த மோகனிடம், ஜோதி நாம் சைக்கிளில் செல்வோம் என்று கூறியுள்ளார்.
தன்னைவிட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட ஒருவரை வைத்து சைக்கிளில் செல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று அவருடைய அப்பா கூறியிருந்தார். ஆனாலும் ஜோதி பிடிவாதமாக, அப்பாவை அழைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாளைக்கு 40 முதல் 50 கி.மீ வரை சைக்கிளில் இருவரும் பயணித்துள்ளனர். வழியில், இவர்களை பார்த்த லாரி ட்ரைவர்கள் இவர்கள் செல்லும் வழியில் கொஞ்சம் உதவி செய்துள்ளனர். ஒருவழியாக 8 நாட்கள் கழித்து வீடு வந்து சேர்ந்துள்ளனர் அப்பாவும் பொண்ணும். 1200 கி.மீ பயணம், அதுவும் சைக்கிளில். தன்னை விட அதிக எடை கொண்ட ஒருவரை டபுள்ஸ் வைத்து, பயணிப்பது என்பது முறையாக சைக்கிள் பயிற்சி எடுத்தவர்களாலே முடியாத காரியம். ஆனால் ஜோதியின் பாசம் அனைத்தையும் வென்றுவிட்டது.
பாசத்திற்கு இணையாக ஏதும் இல்லை என்பதற்கு இது தான் உதாரணம். இக்கட்டான சூழலில் நல்ல நண்பனை அறிவாய் என்பது போல், இக்கட்டான சூழலில் உதவும் பிள்ளை யார் என்பதையும் அறிய முடியும். மோகன், தன் மகளின் இந்த வீர செயலை நினைத்து மிகவும் பெருமை அடைந்துள்ளார்.
நன்றி: https://tamil.indianexpress.com/india/15-years-old-jyothi-kumari-cycled-1200-km-with-her-disabled-father-from-gurugram-to-bihar-192791/
இதனை அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கோ டீவீட்டரில் பாராட்டியுள்ளார்.
|