உள்ளூர் ஹீரோக்களும் உலக அரசியலும் ============================
விவசாயிகள் போராட்டத்தை விட தற்போது இந்த செலிபிரட்டிகளின் டிவிட்டர் சண்டை தான் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது போலும். தில்லியில் என்ன நடந்தால் என்ன என்று அவரவர் பிழைப்பை பார்த்துக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் திடீரென்று விழித்துக்கொண்டிருக்கிறார்கள் .
'என் தேசத்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதே' , 'பரப்புரை செய்து நாட்டை பிரிக்க விடமாட்டோம்' என்றெல்லாம் உக்கிரம் கொள்கிறார்கள் . எழுபது நாட்களுக்கும் மேலாக விவசாய போராட்டம் குறித்து மூச்சே விடாதவர்கள் எல்லாம் திடீரென்று political conscience கிளர்ந்துகொள்ள உத்வேகம் கொண்டு டிவீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் .
காரணம் ?
இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்த ஒரு சர்வதேச நட்சத்திரத்தின் டிவீட். மியான்மரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு ,சூடான் , நைஜீரியா , அமெரிக்க உள்நாட்டு அரசியல் என்று தொடர்ந்து தன் கருத்துக்களை சொல்லி வருபவர் ரியானா . அவர் இந்திய விவசாய போராட்டம் குறித்து சொல்லாமல் விட்டிருந்தால் தான் ஆச்சரியம் .
அவர் ஒன்றும் தன்னை சர்வதேச அரசியல் வல்லுனர் என்று முன்வைத்துக்கொள்ளவில்லை . கண் முன் நிகழும் சில நிதர்சனங்களை கவனித்து அடையாளப்படுத்த அது அவசியமும் இல்லை. அவர் தன் எல்லைக்குள் நின்றே ஜனநாயக எதிர்ப்பு போக்குகளை சுட்டிக் காட்டுகிறார். அவருக்கு உள்ள சரவ்தேச வெளிச்சத்தினால் அதற்கு பரவலான கவனம் கிடைக்கிறது அவ்வளவுதான்.
பொதுவாக உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிட கூடாது என்பதுதான் மரபு , அதுதான் சரியும் கூட . ஆனால் குறிப்பிட்ட சில தருணங்களில் இது மீறப்படு ,அது வேறு . நாஜி செயல்பாட்டை மற்ற நாடுகள் விமர்சித்திருந்து தக்க சமயத்தில் தலையிட்டிருந்தால் உலக வரலாறே இன்று வேறு மாதிரி ஆகியிருக்கும் .ஆனால் பொதுவான நிலைப்பாடு தலையிடக்கூடாது என்பதே .
ஆனால் தனி மனிதர்களை நாம் இதே வரைமுறைக்குள் கொண்டு அடைக்க முடியாது . அப்படிப் பார்த்தால் ஒரு நாட்டை குறித்து இன்னொரு நாட்டில் செய்தியே போட முடியாது . ரியானா செய்து அதேதான் , அவர் ஒரு நிலைப்பாட்டை சொல்வதோ , ஆட்சேபகரமான மீம்ஸ் போடுவதோ கூட செய்யவில்லை .அவர் ஒரு CNN செய்திச்சுட்டியை பகிர்ந்தார் அவ்வளவுதான் .
இப்படி ஒரு தனிநபர் எழுதிய டிவீட்டுக்கு விழுந்து அடித்துக்கொண்டு ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக டிவீட் எழுதியிருப்பதே below the dignity of the office . அதற்கு நம் உள்நாட்டு ஹீரோக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டு பதறியடித்து ஒத்து ஊதியிருப்பது இன்னுமே embarassing .
உலகமயமாக்கலை ஏற்றுக்கொள்ளும்போது உலகளாவிய அரசியலையும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் . இது தவிர்க்கவே முடியாது . அதானி நிறுவனத்துக்கு SBI கடன் கொடுப்பதை ஆஸி குடிமகன் எதிர்த்துதான் ஆவான் . அது அவன் உடனடி வாழ்வாதாரத்தை பாதிக்கிறது . ரொஹிங்கிய அகதிகள் குறித்து மனசாட்சி உள்ள யாருமே கேள்வி கேட்கலாம்.
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் வன்முறை நடந்தபோது , இங்கு இந்தியாவில் இருந்து ஆளாளுக்கு 'I can't Breath' என்று டிவீட் போட்டார்கள் தானே . அமெரிக்க பாராளுமன்றத்தில் விஷமிகள் நுழைந்து கலவரம் செய்த போது அமெரிக்காவை கழுவி ஊற்றினோமே , அதற்குள் மறந்துவிட்டோமா ?
Black lives matter என்பதை உலகம் முழுதுமே ஆதரித்தது டீவீட்டியது . ஏனென்றால் அங்கு BLM ல் என்ன நடக்கிறதோ அது தான் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் நடக்கிறது.சமகாலத்தில் வணிகம் , கலாச்சாரம் , குடியேற்றம் , விளையாட்டு , வியாபாரம் , சுற்றுலா , ஊடகம், கேளிக்கை என்று எல்லா விஷயங்களுமே உலக அளவில் பரவி இருக்கும்போது , அரசியல் விழிப்புணர்வும் உலகளாவியதாகத்தான் இருக்கும் .
ஒரு வகையில் உள்ளூர் ஹீரோக்கள் இவ்வாறு டிவீட் போடுவதை வரவேற்கிறேன் , கள்ள மெளனத்தை விட இது எவ்வளவோ மேல் , யார் யார் என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரடியாகவே மக்கள் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு.
அப்படியாவது கொஞ்சம் உலக நடப்புகளை புரிந்து கொள்ள முயலட்டும் . அவைகள் குறித்து டீவீட் செய்யட்டும் . அமெரிக்காவோ , ஆஸ்திரேலியாவோ இப்படி பதறி அடித்துகொண்டு அவர்களை மறுத்து அறிக்கை விடாது . ஏன் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருக்கும் சீனாவை குறித்து கூட டிவீட்டலாமே ?
அப்போதுதான் நாம் இந்திய நட்சத்திரங்களை எப்படி அவர்கள் தகுதிக்கு மீறிய இடத்தில் வைத்திருக்கிறோம் என்று புரியும் . விதிவிலக்காக சித்தார்த் , டாப்ஸி போன்றோர் சுயமாக தமது கருத்துக்களை முன்வைத்து வருவது வரவேற்கத்தக்கது .
பாரதி காலத்தில் இருந்தே கூட உலக நடப்புகளை கவனித்து அது குறித்து எழுதும் விவாதிக்கும் போக்கு நம்மிடையே இருந்திருக்கிறது . ஒப்பு நோக்க சமகாலத்தில் தான் உலக நடப்புளை குறித்த நமது ஆர்வம் குறைந்திருக்கிறது எனலாம் . நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வது நாம் ஏன் இப்படி நடந்துகொள்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள உதவும் .
காந்தியே தென்னாப்பிரிக்க அரசியலில் நேரடியாக தலையிட்டவர்தானே ?இன்று காந்தி இருந்திருந்தால் அவர் ஒரு obsessive டிவீட்டராகத்தான் இருந்திருப்பார் .சபர்மதியில் ராட்டை சுற்றிக்கொண்டிருந்தாலும் உலகெங்கிலும் நிகழும் மக்கள் விரோத செயல்பாடுகளை குறித்து டிவீட்டிக்கொண்டேதான் இருந்திருப்பார் .
|