Posted by S Peer Mohamed
(peer) on 4/28/2021 11:11:45 PM
|
|||
மதுரை: வந்த பின் பார்த்துக்கொள்ளலாம் என்பதை விட வருமுன் காப்போம் என்பதுதான் புத்திசாலித்தனம். கொரோனா இரண்டாம் அலை தாக்கும் என்று கடந்த நவம்பரிலேயே கணித்து கூறிய நிலையிலும் பல மாநிலங்களில் வந்த பின் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்தனர். அதே நேரத்தில் தமிழகம் கொரோனா இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள தயாராகவே இருந்தது. குறிப்பாக மதுரை மாவட்ட அதிகாரிகள் கடந்த செப்டம்பரிலேயே கொரோனா இரண்டாவது அலையுடன் எதிர்த்து போராட ஏற்பாடுகளை செய்து விட்டனர். இதற்குக் காரணம் மதுரை எம்.பி சு. வெங்கடேசன். அவரோடு கை கோர்த்த அதிகாரிகளின் கூட்டு முயற்சி முன்யோசனையால்தான் இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் நிம்மதியாக சுவாசித்துக்கொண்டிருக்கின்றனர். நாட்டின் தலைநகரில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. காரணம் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருவதுதான். கொரோனா இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தேவை இந்த அளவிற்கு ஏற்படும் என்று எவராலும் கணிக்க முடியாததாக இருந்தது. இது போல ஒரு சூழ்நிலை வந்தால் என்ன செய்வது என்று யோசித்துதான் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 1,542 படுக்கைகளில் 848 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றப்பட்டுள்ளன. மதுரையில் சிகிச்சை மதுரை மாவட்டத்தில் இதுவரை 29,005 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 502 பேர் உயிரிழந்துள்ளனர். 4,073 பேர் கொரோனாவுக்காக சிகிச்சைபெற்று வருகின்றனர். சு. வெங்கடேசன் எம்.பி கொரோனாவின் முதல் அலை பரவ ஆரம்பித்தபோது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக மதுரை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார் டாக்டர் சந்திரமோகன். அவரை சந்தித்த மதுரை எம்.பி சு. வெங்கடேசன், மதுரைக்குச் செய்யவேண்டியதென்ன என்ற நீண்ட பட்டியலை அவரிடம் கொடுக்க பணிகள் விறுவிறுவென தொடங்கின. கை கோர்த்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் வினய், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோருடன் கலந்தாலோசித்த டாக்டர் சந்திரமோகன்உடனடியாக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் அளவை அதிகரிப்பது என முடிவுசெய்து அதற்கான பணிகளை மளமளவென தொடங்கினர். மூவர் கூட்டணியால் ஒட்டுமொத்தப் பணிகளும் மூன்றரை மாதத்திற்குள் முடிந்தன. ஆக்சிஜன் வசதி கொண்டவை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டு படுக்கைகளுக்கும் இணைப்புக் கொடுக்கப்பட்டது. இப்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 1,542 படுக்கைகளில் 848 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையவை. சு. வெங்கடேசன் நன்றி நாடே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் போது எங்களால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதற்குக் காரணம், முதல் அலையின் போது எடுத்துக்கொண்ட சிறப்பு நடவடிக்கையும் அதற்காக உழைத்த மனிதர்களுந்தான். இப்பணிகளுக்கு பக்கபலமாக இருந்த மதுரை மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்குமணி, தோப்பூர் மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் காந்திமதிநாதன் ஆகியோருக்கும் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி என்று கூறியுள்ளார் சு. வெங்கடேசன் எம்.பி. கூட்டு முயற்சி கொரோனா நோயாளிகளைக் காப்பதில் ஆக்சிஜன் மிக முக்கியமானது; அதன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதை அந்தத் தருணத்திலேயே உணர்ந்து செயல்பட்டோம் என்கிறார் டாக்டர் சந்திரமோகன். ஆக்சிஜன் கொள்கலன் மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை தவிர, தோப்பூரில் இருந்த அரசு நெஞ்சக மற்றும் தொற்றுநோய் மருத்துவமனை முழுமையான கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அங்கும் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கலன் பொருத்தப்பட்ட பிறகு இங்கு மொத்தமுள்ள 260 படுக்கைகளில் 140 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் அளிக்கப்படுவதாக கூறியுள்ளார் தோப்பூர் அரசு நெஞ்சக மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலரான காந்திமதிநாதன். மதுரை கொரோனா நோயளிகள் நிம்மதி மதுரை எம்.பி சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர், சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளின் கூட்டு முயற்சி முன்யோசனையால் இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் நிம்மதியாக சுவாசித்துக்கொண்டிருக்கின்றனர். இதே போல முன்கூட்டியே யோசித்திருந்தால் இன்று நாட்டில் பல நோயாளிகளின் உயிர் பறிபோயிருக்காது. Source: https://tamil.oneindia.com/news/madurai/corona-patients-breathing-peacefully-in-madurai-the-success-of-mp-s-venkatesh-s-initiative/articlecontent-pf542944-419048.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |