அவரைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் டெபாசிட் பறி கொடுத்துள்ளனர்! நிற்க முடிந்த தொகுதிகளே 141 தான்! அதிலும் பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்கள் கிடைக்காமல் வெளியூர் ஆட்களே நின்றனர். அந்தளவுக்கு தான் கட்சியின் கட்டுமான பலம் இருந்தது. மீதியுள்ள தொகுதிகளை கல்வி சுரண்டலுக்கு பேர் போன எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் பச்சைமுத்து மகனுக்கும், சாதி சந்தர்ப்பவாத அரசியல்வாதியான சரத்குமாருக்கும், போக்கிடம் தெரியாமல் புலம்பிக் கிடந்த கே.எம்.செரிப்பிற்கும் தந்தார். ஏழு தொகுதிகளுக்கு நிற்க ஆளே கிடைக்கவில்லை!
இப்படிப்பட்ட கமலஹாசனைத் தான் தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக, மாற்று அரசியலுக்கான ‘ஐகானாக’ காட்டின தி இந்து, விகடன்,தினமணி..உள்ளிட்ட பல பத்திரிகைகள்! கமலஹாசன் டிவிட்டரில் எதையாவது கிறுக்கினால் கூட, அதை எடுத்து செய்தியாக்கும் அளவுக்கு அவரை பிரமோட் செய்தனர். இவ்வளவு தூரம் தன்னை தூக்கி சுமப்பவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவாவது தன்னை தகவமைத்துக் கொண்டாரா கமல் என்றால், அதுவும் இல்லை! அரசியலுக்கு வந்ததே, வயது முதிர்ந்த, சினிமா வாய்ப்புகள் குறைந்த காலகட்டத்தில் தான்! மிக காலதாமதமாக அரசியலுக்கு வந்தாலும் கூட, அதற்காக முழு நேரம் தன்னை அர்ப்பணித்திருந்தால் கூட வரவேற்கப்பட்டிருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளுக்காக ஆளாய் பறந்தார். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அலசும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டார்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் உள்ளூர் ஆளுமைகள் காலூன்றுவதைக் கூட விரும்பாமல் அதை புறக்கணித்தார். ’’தான் முதலமைச்சர் ஆகாமல் தன் கட்சியை சேர்ந்தவன் கவுன்சிலர் ஆவதா..’’ என்ற நினைப்புள்ளவன் ஒரு போதும் தலைவனாக முடியாது. ஒரு ஒற்றை சர்வாதிகாரியாக ஒரு தனி நபர் நலன் சார்ந்த கட்சியாக மட்டுமே இயங்கிய மக்கள் நீதி மையம் மண்ணைக் கவ்வியதன் மூலம் தமிழகத்திற்கு நேரவிருந்த ஒரு ஆபத்து அகன்றது.
நாம் தமிழர் சீமான் தன்னுடைய கட்சிக்காரன் நிற்கும் அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். ஆனால், கமல்ஹாசனோ தான் போட்டியிட்ட தொகுதியிலேயே பெரிதும் முடங்கி போனார். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர் எப்போதுமே சுய நலத்தின் உச்சம் தானே! கோவையில் தனது பக்கத்து தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர்கள் என்ன ஓட்டு வாங்கினார்கள் என்று பார்த்தாலே தெரிகிறது அது மக்கள் நீதி மய்யமாக இல்லை கமலஹாசனை மட்டுமே மய்யப்படுத்திய கட்சி என்பது! நல்ல வேளையாக கமலஹாசன் தோற்றதின் மூலம் தமிழகம் தப்பிப் பிழைத்தது. கமலஹாசன் மட்டுமே ஒற்றையாளாக ஜெயித்திருந்தால் கூட, அதை ஆகப் பெரிய வெற்றியாக கொண்டாடி தீர்த்திருப்பார்கள் ஆதிக்க வர்க்கத்தினர்.
அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உச்சிமோர்ந்து முதல் பக்க தலைப்பு செய்தியாக்கி இருப்பார்கள்..! அவர் சட்டசபையில் உளறுவதையெல்லாம் வேதவாக்காக அடையாளப்படுத்தி இருப்பார்கள்! அதிமுகவைக் கூட மூன்றாம் இடத்திற்கு தள்ளி, அடுத்த தேர்தலில் அவர் முதல்வாராகிவிடுவார் என்ற பிம்பத்தை கட்டமைத்திருப்பார்கள்.
ஆனால்,கமலஹாசன் ஒரு நுட்பமான அரசியலை கையில் எடுத்து, அதிமுகவை பலவீனப்படுத்தி, தன்னை எம்.ஜி.ஆரின் வாரிசாக அடையாளப்படுத்த முனைந்தார். எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என்றெல்லாம் பேசி அதிமுக ஆதரவு வாக்குகளை அறுவடை செய்ய முயன்றார். அதனால் தான் அவர் அதிமுகவை விமர்சிக்காமல் திமுகவை விமர்சித்து, திமுக எதிர்ப்பு ஓட்டுகளை மையப்படுத்தி செயல்பட்டார்.
தனது பக்கத்து தொகுதி வேட்பாளரான அதி மோசமான சமூக விரோத, மக்கள் விரோத அரசியலை செய்துவந்த அமைச்சர் வேலுமணி குறித்து கடைசி வரை வாய் திறக்கவேயில்லை. அவருக்கு வேலுமணியுடன் ஏதோ ஒரு ரகசிய உடன்பாடு உள்ளது என்று கூட சில ஊடகங்கள் எழுதின. அதற்கு தொண்டாமுத்தூர் தொகுதியில் முதலில் நிறுத்தப்பட்ட இந்து வேட்பாளரை அவர் வாபஸ் வாங்கிக் கொண்டு வேலுமணியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தி திமுகவிற்கு செல்லக் கூடிய இஸ்லாமிய ஓட்டுகளை மடைமாற்றம் செய்தார் என்றனர். இப்படி தகிடுதத்தம் செய்து தன் வெற்றிக்கு வேலுமணி எதிராக களம் காணாமல் ஆனவரை தற்காத்துக் கொண்டார்.
என்ன செய்து என்ன..? கமலஹாசன் தன் தீவிர உழைப்பால் அந்த தொகுதியை பாஜகவிற்கு தாரைவார்த்து திரும்பிவிட்டார். இந்த லட்சணத்தில் அவர் அரசியலுக்கு வந்ததால் அவருக்கு ஆண்டுக்கு முன்னூறு கோடி ரூபாய் நஷ்டம் என்ற புலம்பல் வேறு! தமிழர்கள் பார்த்தார்கள்; தங்கள் பேரால் கமலஹாசன் நஷ்டமடைவதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாக உணர்த்திவிட்டார்கள்! ஐயா, கமலஹாசனே.., முன்னூறு கோடி நஷ்டப்பட வேண்டாம். சினிமாவில் வாய்ப்பிருந்தால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
Source: கமலஹாசனின் சூது அரசியல் தோற்றது! - Aram Online
கமலஹாசனின் சூது அரசியல் தோற்றது! சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
|