Posted by S Peer Mohamed
(peer) on 5/21/2021 6:27:17 PM
|
|||
நிர்வாகரீதியாகவும் பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் வேலையை மாநிலக் கட்சிகள் தொடங்கிவிட்டன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசிய அளவில் சத்தமில்லாமல் ஓர் அரசியல் மாற்றம் அரங்கேறிவருகிறது. மாநிலக் கட்சிகளின் கைகள் ஓங்கி, மத்திய பா.ஜ.க அரசின் ஆக்டோபஸ் கரங்கள் துவண்டிருக்கின்றன. அகண்ட பாரதக் கனவுடன் ஜெட் வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்த பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாய்மூடி இருக்கிறார்கள். ‘மோடி என்கிற பிம்பத்தை வைத்து, ஒவ்வொரு மாநிலத்தையும் பிடித்துவிடலாம்’ என்ற கனவில் இருந்தவர்களுக்கு, இன்று அந்த பிம்பமே பிரச்னையாகியிருக்கிறது!
இந்திய அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வின் வேகத்தை வெகுவாகவே குறைத்துவிட்டன. 2014-ல் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஏழு மாநிலங்களில் பா.ஜ.க-வின் ஆட்சி இருந்தது. மோடியின் பாப்புலாரிட்டி, பா.ஜ.க-வின் அரசியல் காய்நகர்த்தல்கள் உள்ளிட்டவற்றால், 2018-ல் 21 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அந்தக் கட்சி முன்னேறியது. தேர்தல் வெற்றிகளைத் தாண்டி, பல மாநிலக் கட்சிகளை உடைத்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வளைத்தும் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இந்த யதேச்சதிகாரப் போக்கு நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியது. எதிர்க்கட்சிகளை வெற்றிகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் பரவாயில்லை, ‘எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது. ஒரே நாடு ஒரே கட்சி’ என்கிற அதிகார வேட்கையோடு மோடியும் அமித் ஷாவும் உலா வந்ததை யாரும் ரசிக்கவில்லை. குறிப்பாக, மாநிலக் கட்சிகள் உஷாராகின. ஐந்து மாநிலங்களின் தேர்தலுக்கு முன்பாக மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களைக் குறிவைத்து ‘டபுள் இன்ஜின் வளர்ச்சி’ என்கிற உத்தியை பா.ஜ.க கையிலெடுத்தது. அதாவது, ‘மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு செயல்பட்டால் அது மாநில அரசின் வளர்ச்சிக்கு உகந்தது’ என்கிற கோஷத்தை முன்வைத்தனர். ஆனால், அந்த இன்ஜின் ஸ்டார்ட் ஆவதற்கு முன்னதாகவே, மாநிலக் கட்சிகள் திருப்பியடிக்க ஆரம்பித்தன. ‘மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மத்திய அரசின் நிதிக் கொள்கை இருக்கிறது. ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மேற்கு வங்கத்துக்கு இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை’ என்று மம்தா முன்வைத்த பிரசாரங்களை பா.ஜ.க-வால் எதிர்கொள்ள முடியவில்லை. இதே கருத்தை தமிழகத்தில் தி.மு.க-வும், கேரளாவில் இடதுசாரிகளும் முன்வைத்து பிரசாரம் செய்தனர். ‘டபுள் இன்ஜின் வளர்ச்சி’ என்ற கோஷமே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியது அப்போது பரபரப்பை எகிறவைத்தது. தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு, முதல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் மம்தா. ‘மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரே நுழைய வேண்டுமென்றாலும், கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் அவசியம்’ என்று அதிரடி காட்டியிருக்கிறார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ‘பிரதமருடனான உரையாடலில், அவர் பேசுவதைக் கேட்க மட்டுமே நாங்கள் அழைக்கப்பட்டிருப்பதுபோலத் தோன்றுகிறது’ என்று நக்கல் அடித்திருக்கிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருபடி மேலே போய், பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில், தான் பேசிய கருத்துகளை ஃபேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பியது மோடியை மிரளச் செய்துவிட்டது. ‘இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அரசு மரபுகளை மீறிவிட்டார் ஒரு முதல்வர்’ என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிடாமல் கண்டித்தார் மோடி. ‘அதெல்லாம் இருக்கட்டும், முதலில் ஆக்ஸிஜனைக் கொடுங்கள்’ என்று கெஜ்ரிவால் கேட்ட கேள்விக்கு மோடியால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க-வுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் உறுமல் சத்தம் அதிகரித்திருக்கிறது” என்றனர். நிர்வாகரீதியாகவும் பா.ஜ.க-வுக்கு செக் வைக்கும் வேலையை மாநிலக் கட்சிகள் தொடங்கிவிட்டன. ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசி விவகாரத்தில், மத்திய அரசை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் உலகளவிலான டெண்டருக்குத் தயாராகிவிட்டன. (உ.பி., கர்நாடகா போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் இதே ரூட்டில் பயணிப்பது தனிக்கதை!) நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன் ரவீந்திரன், “தமிழக அரசு நான்கு முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கப்போகிறது. புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, சுகாதாரம், வேளாண்மை ஆகிய இந்த நான்கிலும் மாநில அரசே முடிவுகளை எடுக்கும். புதிய கல்விக் கொள்கை தொடர்பான செயலாளர் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்துக்கு பதிலாக, கல்விக்குப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களை அழைக்க வேண்டுமென மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினோம். ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்பதால், ஆலோசனைக் கூட்டத்தையே புறக்கணித்தோம். ‘புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் குலக்கல்வி முறையைக் கொண்டுவருவதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சீறியிருக்கிறார். அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகளின் வாக்கெடுப்பை தி.மு.க முன்வைக்கும். அதேபோல, புதிய வேளாண் சட்டங்களையும் தமிழகத்தில் அனுமதிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதாரத்தை, மத்திய அரசு கபளீகரம் செய்துவருகிறது. இதற்கு தி.மு.க வைத்த முதல் செக் தான், தடுப்பூசிக்கான உலக அளவிலான கொள்முதல். இதன் மூலம் தற்போது மத்திய அரசு 300 ரூபாய்க்கு வழங்கும் தடுப்பூசியை நாங்கள் 150 ரூபாய்க்குக்கூட வாங்கலாம். பிற மாநிலங்களும் இதே பாணியைக் கையில் எடுத்தால், அது மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறும்” என்றார். பினராயி விஜயன் - மம்தா பானர்ஜி - சந்திரசேகர ராவ் - உத்தவ் தாக்கரே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் அந்தக் கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் தமிழகத்தில் வீசிய அலையே இதற்குக் காரணம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திலும் இந்த அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டது தி.மு.க. ‘மத்திய அரசுக்குப் பணிந்து போகும் அடிமை அ.தி.மு.க அரசு’ என்கிற கோஷத்தை முன்வைத்தார் ஸ்டாலின். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மாநில உரிமையை மீட்டெடுப்போம்’ என்கிற கோஷத்தையும் எழுப்பினர். இதே மாநில உரிமை கோஷத்தை, தேர்தலைச் சந்தித்த கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் எழுப்பினர். அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். நம்மிடம் பேசிய மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர், “எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து பிரதமருக்கு கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக ஆலோசனை தெரிவித்தும், சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எழுதிய கடிதத்தில், சோனியா உட்பட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் முதல்வர்கள். இப்போது தி.மு.க அரசு மாநில உரிமை விவகாரத்தில் உறுதியான முடிவை எடுப்பதைப் பார்த்து, பா.ஜ.க ஆட்சியில்லாத ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட பத்து மாநிலங்களின் முதல்வர்களும் அதே பாணியைக் கையிலெடுக்கத் தயாராகிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில நலன் சார்ந்த விவகாரங்களைக் கையிலெடுப்பது பா.ஜ.க-வை பதற்றமடையவைத்திருக்கிறது. எந்த மோடியை முன்னிறுத்தி, அவர்கள் 21 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தார்களோ, அதே மோடி இன்று அவர்களுக்குச் சுமையாக மாறியிருக்கிறார். அவர் முகத்தை மீண்டும் முன்னிறுத்தினால், வாக்குகள் திரளாது என்பதை மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன” என்றார். அரவிந்த் கெஜ்ரிவால் - நவீன் பட்நாயக் - தேஜஸ்வி யாதவ் - அகிலேஷ் யாதவ் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை மோடி காலத்தில் ஆர்.எஸ்.எஸ் விமர்சனம் செய்ததில்லை. அவர்களின் கனவான ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகிய இரண்டையும் நிறைவேற்றிக் கொடுத்த அரசு இது. ஆனால், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ‘கொரோனா முதல் அலை முடிந்ததும் மக்கள் மட்டுமன்றி, அரசும் அலட்சியமாக இருந்துவிட்டது’ என்றார். ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ், ‘அரசியல் தலைமை கொஞ்சம் வெளிப்படையாக இருந்திருக்கலாம். மக்கள் கருத்தைக் கேட்டிருக்கலாம். விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். நிபுணர்கள் சொன்னதைக் கேட்டிருக்கலாம்’ என்று ஒரு கட்டுரையில் எழுதினார். மூத்த அமைச்சர்கள் பலரும் எதிர்பார்க்காத கருத்துகள் இவை. மொத்தத்தில், மோடியின் ராஜா வேஷம் கலைய ஆரம்பித்திருக்கிறது என்பதே உண்மை! --விகடன்.. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |