Posted by S Peer Mohamed
(peer) on 6/2/2021 3:55:57 PM
|
|||
கலீஃபாக்களின் காலம் நமக்கு படிப்பினை தருகின்றது... கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்தில் கடும் பஞ்சமும் பசியும் ஏற்பட்டது. மக்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டபோது கலீபாவை போய் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி அவர்களின் கலீஃபா அவர்களே. வானம் பொழியவில்லை பூமியில் எதுவும் விளையவில்லை. மக்கள் அழிவை சந்தித்து வருகிறார்கள். நாம் என்ன தான் செய்வது என்றனர். பொறுமையோடு திரும்பிச் செல்லுங்கள். மாலை நேரத்திற்குள் அல்லாஹ் உங்களுக்கு விடியலைத்தருவான் என நான் நம்புகிறேன். கலீஃபா அவர்கள் ஆறுதல் வார்த்தை தந்தார்கள். உஸ்மான் ரலி அவர்களின் வியாபார ஒட்டகக்குழு ஷாம் நாட்டிலிருந்து மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி மாலையில் வந்தது. அவர்களை வரவேற்க மக்களெல்லாம் காத்துக் கிடந்தனர். நெய் -வெண்ணை - மாவு போன்ற உணவுப் பொருட்களை சுமந்த ஆயிரம் ஒட்டகைகள் உஸ்மான் ரலி அவர்கள் இல்லத்தை வந்தடைந்தன. அவர்கள் இல்லத்தில் பொருட்கள் இறக்கப்பட்ட போது வியாபாரிகள் வந்து குழுமினர். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் இது. உஸ்மான் ரலி: உங்களுக்கு என்ன வேண்டும் ? வியாபாரிகள்: நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் சரக்குகளை எங்களிடம் விற்று விடுங்கள். ஏனெனில் ஜனங்களின் தேவையை நீங்கள் அறிவீர்கள் ! உஸ்மான் ரலி: நான் வாங்கிய விலையில் எவ்வளவு லாபம் அடைவேன்? வியாபாரிகள்: ஒரிரு திர்ஹம், உஸ்மான் ரலி : உங்கள் அல்லாதவர் இதைவிடவும் அதிகமாக எனக்குத் தருவர். வியாபாரிகள்: அப்படியானல் நான்கு திர்ஹ லாபத்தில் எடுத்துக் கொள்கிறோம். உஸ்மான் ரலி: பிறர் அதை விடவும் அதிகமாக தருகின்றனரே., வியாபாரிகள் : ஐந்து திர்ஹ லாபத்தில் தாருங்கள். உஸ்மான் ரலி : இதைவிடவும் அதிகமாக மற்றவர்கள் தர தயாராக உள்ளனர். வியாபாரிகள் : மதீனாவில் எங்களைத் தவிர வேறு வியாபாரிகள் இல்லை. எங்களை விடவும் அதிகமாக தருபவர் எவருமில்லை. எங்களை விட அதிக லாபம் உங்களுக்கு தருபவர் யார்? உஸ்மான் ரலி : அல்லாஹ் ஒன்றுக்கு பத்தாக எனக்கு தருகின்றான் . ஒரு நன்மைக்கு பத்து மடங்கு கூலி உண்டு. அதை விடவும் அதிகமாக உங்களால் கொடுக்க முடியுமா ? வியாபாரிகள்: எங்களால் முடியாது. உஸ்மான் ரலி: அல்லாஹ் சாட்சியாக இந்த ஒட்டகங்களில் வந்த அனைத்தையும் வறியோருக்கும், முஸ்லிம்களில் எளியோருக்கும் தர்மமாக வழங்குகிறேன் . உஸ்மான் ரலி அவர்கள் பொருட்களை இலவசமாக விநியோகித்தார்கள். மதினமா நகரின் ஒவ்வொரு ஏழை-எளிய மனிதரும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையானதை வாங்கிச் சென்றார். பொருளாதாரத்தை நிறைவாகப் பெற்றிருப்பவர்கள் சோதனை காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை இந்நிகழ்வு தெளிவுபடுத்துகிறது. வியாபாரிகள் தானமாக தராவிட்டாலும் எப்போதும் போல மக்களின் நிலைமைகளை அனுசரித்து நியாயமான லாபத்திற்கு விற்பதே வியாபாரிகள் செய்யும் பெரும் உபகாரமாகும். ஏனெனில் வியாபாரி பெரும் உபகாரி என தமிழ் கூறும் நல்லுலகு அவர்களை அழைக்கிறது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |