Posted by S Peer Mohamed
(peer) on 6/5/2021 12:40:33 PM
|
|||
தேடலில் முன்னிலை சென்னை, ஜூன் 5 : தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து வடஇந்தியர்கள் பலர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்து இணையத்தில் தேடி உள்ளனர். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது. முக்கியமாக ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதியை வாங்கிக்கொண்டு, சரக்கு சேவை வரி நிலுவை தொகையை தர மறுப்பது குறித்து இவர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகள் சரக்கு சேவை வரி நிலுவை தொகை குறித்தும், ஒன்றிய அரசின் போக்கு குறித்தும் பேச தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். சரக்கு சேவை வரி குழுக் கூட்டத்திற்கு கூட முதல்வர் ஸ்டாலின் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைத்தான் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்து இருந்தார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பொருளாதார புலமை காரணமாக வடஇந்திய ஊடகங்கள் பலவற்றில் இவர் விவாதத்திற்கு அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு அரசின் குரலாக வடஇந்திய ஊடகங்களில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசப்பட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் திட்டங்களை வடஇந்திய ஊடகங்களுக்கு கொண்டு செல்வது, ஒன்றிய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முக்கியமான குரலாக மாறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்தியா டுடே சேனலில் ராஜ்தீப் சர்தேசி நடத்திய விவாதத்தில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இதில் தடுப்பூசிக்கு யார் காசு கொடுக்க வேண்டும், மாநில அரசு கொடுக்க வேண்டுமா? அல்லது ஒன்றிய அரசு கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி வைக்கப்பட்டது. இதற்கு நம் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சொன்ன பதில்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி உள்ளது. ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. வானத்தில் இருந்து வந்துவிடவில்லை. ஒன்றிய அரசுக்கு வரும் பணம் எல்லாம் மாநில அரசின் வரிதான். இது மக்களின் பணம். குஜராத் முதல்வராக இருந்த போது மோடி சொன்னதைத்தான் நான் இப்போதும் சொல்கிறேன். இது ஒன்றிய அரசின் பணம் கிடையாது. இது மாநில அரசு வழங்கும் மக்களின் பணம். மக்களின் பணத்தை வசூலித்து மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. இதை யார் எப்படி செலவழித்தாலும் மக்களின் பணம் என்பதை முதலில் ஒன்றிய அரசு உணர வேண்டும். ஒன்றிய அரசு ஒன்றும் தங்கள் பரம்பரை சொத்துக்களை மக்களுக்கு செலவு செய்யவில்லை. மக்களிடம் வாங்கிய பணத்தை, மாநிலங்களிடம் வாங்கிய பணத்தை சரியாக, முறையாக செலவு செய்யுங்கள். தடுப்பூசி போடுவதற்கு ஒழுங்காக செலவு செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம். ஒன்றிய அரசுதான் உலகம் முழுக்க ஒப்பந்தபுள்ளிகளை கோரி, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும். சர்வதேச ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிக சக்தி இருக்கிறது. மாநில அரசு வெளிநாட்டு கடன்களை பல நாடுகளில் இருந்து வழங்க முடியாது. சாதாரண பட்ஜெட் பணிகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி இன்றி நாங்கள் கடன் வாங்க முடியாது. அப்படி இருக்கும் போது ஒன்றிய அரசுதான் இதில் தலையிட வேண்டும். இது மக்களின் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்களிடம் வசூலித்த பணத்தில் மக்களுக்கு இலவசமாக வேக்சின் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம், என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது விவாதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்த விவாதம் தேசிய அளவில் ஹிட் அடித்த நிலையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், யாரென்று டிவிட்டரில், கூகுளில் பலர் கேட்கவும், தேடவும் தொடங்கினர். ஆணித்தரமாக, பொருளாதார அறிவோடு பிடிஆர் பேசுவதைக் கேட்டு பல மாநில மக்கள் கூகுளில் நேற்றுமுன்தினம் முதல் தேடத் தொடங்கினர். அதிலும் நேற்று முன்தினம் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட நம் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறித்து தேடச் செய்துள்ளனர். அதோடு அமெரிக்காவில் பிஎச்டி, எம்.பி.ஏ படித்தவர் நம் நிதியமைச்சர் என்பதையும் பார்த்துவிட்டு பலர் வியப்பாக டிவிட்டரில் டிவிட் செய்யத் தொடங்கி உள்ளனர். தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு, ஒன்றிய அரசு இலவசமாக வழங்க வேண்டுமென்ற விவாதம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு சரக்கு சேவை வரி நிலுவைத் தொகையைத் தர வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் குரல், வடஇந்தியாவில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர் குலைத்து, பொருளாதார வளர்ச்சி குறியீட்டை அதலபாதளத்துக்கு வீழ்ச்சியடைய செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நம் நிதியமைச்சரிடம், இனியாவது பாடம் கற்க வேண்டுமென்றும் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. வளர்க தமிழ்நாடு ![]() |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |