அவர் கடவுள் அல்ல கடவுளின் அவதாரமும் அல்ல கடவுளின் பெயரால் மனிதனைத் துன்புறுத்துபவரல்ல
அவர் ஓர் எளிய மனிதர் வாடகைக்கார் ஓட்டி காலத்தை ஓட்டுபவர்
ஒவ்வொரு நிறுத்தத்திலும் தொப்பி தாடியின் பொருட்டு சோதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர் அடையாளங்களால் துரத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்
தீவிரவாதியாய் பயங்கரவாதியாய் ஊடகங்களால் வரையப்பட்டது அவரது சித்திரம்
அவருக்கு பாகிஸ்தானில் யாரும் இல்லை. பாகிஸ்தான் குறித்த துளிப்பிரியமும் இல்லாத இந்திய மண்ணின் மைந்தன் மட்டுமல்ல தன் இந்தியக் குடியுரிமைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்
வாடகை வீட்டிற்காய் இப்போதும் அலைந்து கொண்டிருக்கும் வாழ்விடம் மறுக்கப்பட்டவர் அவர்
முன்பின் அறிமுகமற்ற சகோதரிக்காக மருத்துவமனை தோறும் ஓடி ஓடி அலைவது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல
அவர் சென்னைப் பெருவெள்ளத்தின்போது பால் பாக்கெட்டையும் பிரட்டையும் தலைக்குமேல் தூக்கிச் சுமந்து அவருக்கு பழக்கமிருக்கிறது
அநாதையாய் விடப்பட்ட கொரோனா கால உடல்களை அடக்கம் செய்து பழக்கப்பட்டவர்
கடவுளின் பெயரைச் சொல்லி குண்டு வைக்கும் கொடியமிருகங்களைக் கண்டிக்கும் போராட்டங்களில்கூட அவர் பதாகை ஏந்தியிருக்கிறார்
இப்போது அவர் கடவுளின் பெயரைச் சொல்லித்தான் பிரதிபலன் பாராமல் ஓடி உதவியிருக்கின்றார்
‘எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வளித்தவன் போலாவான்’ என்ற குர்ஆனின் போதனையின் மீது நம்பிக்கை வைத்தவர் அவர்
உங்களைப் போலவே எனக்கும் அவரைத் தெரியாது ஆனால் உங்களைப் போல எனக்கும் ஒன்று தெரியும்