Posted by S Peer Mohamed
(peer) on 7/5/2021 11:37:21 AM
|
|||
தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள்; இலவசமாக அளித்த குன்னூர் பெண்..!!
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் ராதிகா. அமெரிக்கா, துபாய், மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் தனியார் நிறுவனங்களில் பணி செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய ராதிகா, தற்போது குன்னூரில் கஃபே ஒன்றை நடத்தி வருகிறார். கஃபேவோடு நின்றுவிடாமல் மக்கள் சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
போதிய உயர் மருத்துவ சிகிச்சை வசதிகள் இல்லாத குன்னூர் அரசு மருத்துவமனைக்குத் தனது நண்பர்கள் உதவியுடன் ரூ.70 லட்சம் செலவில் மிகப்பெரிய ஆக்ஸிஜன் யூனிட்டை நிறுவி நோயாளிகள் பயன்பாட்டுக்குக் கொடுத்துள்ளார் ராதிகா. கொரோனா தொற்றின் இத்தகைய இக்கட்டான காலக்கட்டத்தில் இந்த ஆக்ஸிஜன் யூனிட் மூலம் மக்களின் உயிரைக் காப்பாற்ற வழிவகை செய்திருக்கிறார் இவர்.
இந்நிலையில், தனது அடுத்த மக்கள் சேவையாக மலை கிராமங்களில் தவிக்கும் நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல `ஆம்புரிக்ஷ்' எனப்படும் ஆட்டோ ஆம்புலன்ஸை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரியில் அறிமுகம் செய்து வைத்துள்ளார் ராதிகா.
*இதற்கான நிதியை, தன் பங்களிப்பு, மற்றும் தனது கஃபேவுக்கு வரும் நல்லுள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களின் உதவியோடு சாத்தியப்படுத்தியுள்ளார்.*
மகத்தான இந்த ஆம்புலன்ஸ் சேவை குறித்து பகிர்ந்த ராதிகா, ``நீலகிரியில் பல கிராமங்களுக்கு மிக குறுகலான சாலைகளே உள்ளன. அந்தப் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் செல்வது சவாலாக உள்ளது. நோயாளிகளை நீண்ட தூரம் தூக்கி வந்தே ஆம்புலன்ஸை அடைய வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முயன்றபோது, ஜபல்பூரில் இயங்கி வரும் `ஆம்புரிக்ஷ்' எனப்படும் ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் நல்ல தீர்வு எனத் தெரிந்துகொண்டேன். எனது கஃபேவுக்கு வரும் நண்பர்களிடமும் இந்த யோசனையைச் சொன்னேன்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட 6 ஆட்டோக்களை, ஆட்டோ ஆம்புலன்ஸாக மாற்றினோம். இதில் நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்க ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற வசதிகளை ஏற்படுத்தினோம். தற்போது 6 ஆட்டோக்களை ஆம்புலன்ஸாக களமிறக்கியுள்ளோம். இவை மக்களுக்கு இலவசமாக இயக்கப்பட உள்ளன" என்றார்.
© : விகடன் வலை நாளிதழ்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |