Posted by S Peer Mohamed
(peer) on 3/4/2022 4:42:56 PM
|
|||
விற்றோம், விற்கிறோம், விற்போம் என்பதைத்தவிர ஏதாவது சாதனை இந்த அரசிடமிருந்து இருக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
நவாஸ்கனி எம்பி ஆற்றிய உரை., 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல வார்த்தை ஜாலங்களாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்தே காணப்பட்டதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். கார்ப்பரேட்டுகளின் மீதான அக்கறை உயர்ந்து கொண்டே செல்வதையும், அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தின் மீதான அக்கரை அகல பாதாளத்தில் சரிந்ததையும் இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது. விற்றோம், விற்கிறோம், விற்போம் என்பதைத்தவிர ஏதாவது சாதனை இந்த அரசிடமிருந்து இருக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அவற்றுக்கெல்லாம் ஏமாற்றமளிக்கும் அளவிற்கு அரை நூற்றாண்டு கால தேசத்தின் சொத்துக்களை, பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைத்தவிர ஏதாவது ஒரு பொதுத்துறை நிறுவனத்தையாவது உருவாக்குவோம் என்ற எண்ணமே வராதது தான் இந்த அரசின் சாதனை. விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர், நடுத்தர மக்கள் என அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை தரக்கூடியதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி விகித மாற்றம் வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலை எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றம். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிப்போம், விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்றெல்லாம் மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியது வழக்கம்போல வெறும் வாய் வார்த்தை ஜாலம் தானா? கடந்த நிதி ஆண்டில் பயிர் காப்பீட்டுத் தொகை 16 ஆயிரம் கோடி அறிவித்திருந்தது இந்த நிதியாண்டில் 15 ஆயிரத்து 500 கோடி. பயிர்காப்பீடு 500 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் நம்முடைய பிரதமர் கூரிய முக்கியத்துவம், முன்னுரிமை, வருவாயை இரண்டு மடங்காக உயர்த்துவது எல்லாமா? வளர்ச்சியை வார்த்தையில் மட்டுமல்லாமல் செயலிலும் இந்த அரசு காட்ட வேண்டும். எங்களுடைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து செயல்படுத்தி உங்களுக்கெல்லாம் வழிகாட்டி உள்ளார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாண்புமிகு பிரதமர் அவர்கள் உரையாற்றும்போது அரசின் திட்டத்தின் ஏழைகள் லட்சாதிபதி ஆக முடிகிறது என கூறியிருக்கிறார். பேரிடர் நெருக்கடியால் தினம் தினம் செத்துப் பிழைக்கும் ஏழை எளிய மக்கள் லட்சாதிபதி ஆகி விட்டார்கள் என பெருமிதம் கொள்ளும் இந்த அரசின் நடவடிக்கையை எப்படி எடுத்துக் கொள்வது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை குறை கூறுவதிலேயே பிரதமர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனங்களை தான் தற்போது விற்பனை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை பிரதமர் மறந்து விட்டார் என நினைக்கிறேன். மாண்புமிகு பிரதமர் அவர்கள் கடந்த 7 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார் என்பதை விளக்குவாரா? மாண்புமிகு பிரதமர் அவர்களின் உரையில் "தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள், எவ்வளவு முயன்றாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை யாரும் குலைக்க முடியாது" என குறிப்பிட்டு இருக்கிறார். பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறார் உரிமையின் படி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவியின் மீது வன்மத்தோடு ஒரு கும்பல் கோஷமிட்டு துரத்துகிறது. இவர்களை யார் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும். கர்நாடகத்தில் நாட்டினுடைய மூவர்ணக் கொடியை அவமதித்து காவி கொடியை கட்டியவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. நாட்டின் ஒற்றுமையை யார் குலைக்க முயன்று கொண்டிருக்கிறார், அறிவார்ந்த பாதையில் செல்ல வேண்டிய மாணவர்களை, யார் வழிதவறி வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவிகள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள், அதனை தடுக்கும் வண்ணம், தனி ஒரு பெண்ணை ஒரு கும்பல் வன்மத்தோடு, காட்டுமிராண்டித்தனமாக துரத்தி வருகிறது. அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒரு கல்லூரியில் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை மறுக்கப்படுகிறது. இப்படி மக்களை போராடுவதற்கு அரசே தள்ளி நாட்டினுடைய அமைதியை கெடுத்து விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்படுகின்றன போது மக்கள் உரிமைக்கான குரலை ஜனநாயக வழி போராட்டங்களின் மூலம்தான் முன்னெடுப்பார்கள். ஆளும் ஒரு அரசே ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு மக்களை போராட வைத்து நாட்டினுடைய அமைதியை, ஒற்றுமையை குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது. பாரதிய ஜனதா கட்சி தங்களுடைய கருத்துகளை, ஆர்எஸ்எஸ் உடைய கருத்துக்களை இந்த நாட்டினுடைய கருத்துக்களாக மாற்ற நினைப்பது ஆபத்தானது. மாண்புமிகு பிரதமர் அவர்கள் அடுக்கடுக்கான வசனங்களையெல்லாம் பேசினார். பாரதியார் பாடலை எல்லாம் மேற்கோள் காட்டி பேசிய உங்களது பேச்சு சிறப்பு தான். ஆனால் இதே பாரதியார் உருவம் அங்கம் வகித்த குடியரசுதின ஊர்தியை தான் நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்பதையும் மாண்புமிகு பிரதமர் நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரசின் பாரபட்சத்தை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். புதிய ரயில்வே வழித்தடங்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்கக்கூடிய சட்டங்களை திட்டங்களை எல்லாம் எங்கள் மீது திணித்து விட்டு, வார்த்தையில் மட்டும் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டால் உங்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்களா? ஒருபோதும் நடக்காது ஏனென்றால் அது தமிழ்நாடு. தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா கண்ணியமிகு காயிதே மில்லத் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என சமூகநீதி தலைவர்களால் சமூக நல்லிணக்க தலைவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண். ஒருபோதும் நீங்கள் அங்கு காலூன்ற முடியாது. உங்களுடைய அக்கறையை வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் காட்டுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். மவுலானா அபுல் கலாம் ஆசாத் எஜுகேசன் பவுண்டேஷன் உதவித்தொகை ஆனால் இந்த நிதியாண்டு அறிவிக்கப்பட்ட நிதி வெறும் ஒரு லட்சம். கிட்டத்தட்ட மவுலானா ஆசாத் எடுக்கேஷன் பவுண்டேஷன் உதவித் தொகையை முற்றிலுமாக முடக்கும் செயலை இந்த அரசு செய்திருக்கிறது. அப்படி என்றால் ஒன்றிய அரசு எத்தகைய மனநிலையில் செயல்படுவது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |