Posted by S Peer Mohamed
(peer) on 3/14/2022 9:27:36 AM
|
|||
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே தெருவை சேர்ந்த பிரேமா (24)என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரேமா அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி பிரேமாவை மாரியப்பன் தனது சொந்த ஊரான திருக்குறுங்குடிக்கு சமாதானம் செய்து அழைத்து வந்தார். அன்று இரவு அங்குள்ள பெரிய குளத்தில் பிரேமாவை கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்தார். இந்நிலையில் பிரேமா மாயமானது தொடர்பாக திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாரியப்பன் அவரது மனைவி பிரேமாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் வாக்குமூலமாக கூறியதாவது:- நாங்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேரின் வீட்டாரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் சென்னைக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். எங்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2020-ம் ஆண்டு நாங்கள் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். இதனைதொடர்ந்து நான், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்த 2021-ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அதன் பின்னர் எனது முதல் மனைவியான பிரேமாவுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். இதையறிந்த எனது இரண்டாவது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே குடும்பம் நடத்துவதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி பிரேமா என்னை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதனால் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். இதற்காக கடந்த 9-ந் தேதி சென்னையில் இருந்த பிரேமாவை நைசாக பேசி சொந்த ஊரான திருக்குறுங்குடிக்கு அழைத்து வந்தேன். பின்னர் அன்று இரவு எனது மோட்டார் சைக்கிளில் பிரேமாவை ஏற்றிக்கொண்டு திருக்குறுங்குடியில் உள்ள பெரியகுளத்திற்கு சென்றேன். அங்கு வைத்து பிரேமாவை துண்டால் கழுத்தை நெரித்துக்கொலை செய்தேன். பின்னர் குளத்தில் குழிதோண்டி அவரது சடலத்தை புதைத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். இதற்கிடையே நான், பிரேமாவை ஊருக்கு அழைத்து வந்ததை அறிந்த அவரது உறவினர்கள் திருக்குறுங்குடி வந்தனர். இங்கு அவள் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் என்னிடம் கேட்டனர். நான் மலுப்பலாக பதில் கூறியதால், அவர்கள் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். நான் எப்படியாவது தப்பித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி முன்னிலையில் மாரியப்பன், பிரேமா சடலத்தை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். தொடர்ந்து பிரேமா சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |