Posted by S Peer Mohamed
(peer) on 10/16/2022 9:03:39 AM
|
|||
கவிஞர் ஏர்வாடி சிந்தா அவர்களின் இது கண்களின் பார்வையல்ல என்ற கவிதை தொகுப்பிற்கு மதிப்புக்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய அணிந்துரை..
‘இது கண்களின் பார்வையல்ல!’ என்பது இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பு. கண்ணால் காண்பது ஒன்றாகவும் உட்கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவும் இருத்தலும் கூடும் என்ற உண்மையை உணர்த்துகிறது தலைப்பு. கண்களின் பார்வை அல்ல என்றால் சிந்தனைத் தெளிவின் பார்வை. புறப்பார்வைக்கும் அகநோக்குக்கும் உண்டான வேறுபாடுகளை உணர்த்தும் தலைப்பு. கவிஞர் சிந்தா எனக்கு அறிமுகமானவர் இல்லை. இதற்கு முன் அவர் கவிதை எதையும் வாசித்ததும் இல்லை. எனது சகோதரர் ஏர்வாடி சுல்தான் இந்தத் தொகுப்பை எனக்கு அறிமுகப்படுத்தினார். கவிஞர் சிந்தாவின் முழுப்பெயர் M.S. சிந்தா மதார் என்றும், சகோதரர் S.I. சுல்தான் அவர்களின் அடுத்த வீட்டுக்காரர் என்றும் பின்னர் அறிந்தேன். வயதென்ன, தொழிலென்ன, வருமானம் என்ன போன்ற தகவல்கள் எனக்கு அநாவசியம். கவிஞர் என்ற அறிமுகமே நமக்கு போதுமானது. ‘’பெருவெளி” என்ற கவிதையில் கவிஞர் சொல்கிறார், 'உடைந்தது மழைத்துளி என்று. கவிதை எனும் அனுபவம் மழைத்துளி, அதுவே நைல் நதி. நதிகள் என்பன இங்கு சிந்தனைப் போக்குகள். புனிதம் என்பது உலகின் எந்த நதிக்குமான சொந்த உரிமையும் அல்ல. அனைத்துக் கவிதைகளையும் வாசித்துச் செல்லும்போது, கவிஞரின் பரந்து பட்ட பார்வையின் தெளிவும் கூர்மையும் தெரிகிறது. மனித உணர்வுகள் என்பன மதம் இனம் மொழி நிலப்பகுதி என்பனவற்றையும் கடந்து நிற்பன என்பதையும் கவிதைகள் நிறுவிச் செல்கின்றன. *குழந்தை மூசாவை என்றொரு கவிதை, விழிகளின் மூலம் மட்டுமே அல்லாத மிகச்சரியான அகப்பார்வையைத் தருகிறது. ஈன்ற தாய் என்பதோர் சக்தி வாய்ந்த சொல்லாட்சி. அதனால்தான் வள்ளுவன் ‘ஈன்ற தாய் பசி காண்பான் ஆயினும்’ என்று அழுத்தம் தந்து பேசினான். காதல், போர்கள், மதக்கலவரங்கள், துவக்குச் சூடுகள் குறித்த சில கவிதைகள் உண்டு நூல் நெடுக்க. வலி என்பது யாவர்க்குமாம். ‘விரியும் சிறகுகள்’ எனும் நீண்ட கவிதை சொல்வதைப் போல – ‘பருந்தின் கால்களில் என்பதுதானே யதார்த்தம். ‘புனிதப் பயணம்’ எனும் கவிதையில் கவிஞர் சிந்தாவின் பாடல் வரிகள் – "அகந்தை மனது என்பதும் இன்னொரு வகை யதார்த்தமே! பெண்ணின் அவலங்களை மிகத்தீர்க்கமாக பேசுகிறார் கவிஞர். “எவனோ ஒருவனின்
வேறொரு உண்மையை ‘நீரெழுதிய கவிதை உணர்த்தியது. ‘எந்த நதி என்று
‘பேயாட்டம் என்ற கவிதை நல்லதோர் சிறுகதைப் பண்பு கொண்டது. செய்னம்புவுக்கு பேய் பிடித்த கதையைப் பேசுகிறது கவிதை. ‘காராட்டு உதிரம் தூஉய் அன்னை களன் இழைத்து’ என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப் பாடலை நினைவுபடுத்தும். ஆதரவு இல்லம்’ ‘யாசிப்புகள்’, ‘கடவுளை விற்பவன்’, ‘பாவச் சுமைகள்’ எனப் பல, தொகுப்பின் குறிப்பிடத்தகுந்த கவிதைகள். மனிதநேயம் மிக்க கவிதை ஒன்று ‘மழை இரவு’ எனும் தலைப்பில் ‘‘தேநீர்க் கடைகளில
ஊர்க்கோயில் கொடை என்பது கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களால் தோய்ந்து அனுபவிக்கப்படுவதொன்று. ஐம்பதாண்டு காலமாகப் புலம் பெயர்ந்து வாழ்பவன் நான். எம்மூர் முத்தாரம்மனுக்கு இந்த ஐம்பதாண்டு காலத்தில் இருபது கொடைகள் நடந்திருக்கும். அவற்றுள் குறைந்தது பதினெட்டு கொடைகளுக்கு நான் பம்பாயில் இருந்தும் கோவையில் இருந்தும் போயிருக்கிறேன். ஒரு கொடைக்கு போக வாய்க்காதபோது உணரும் ஏக்கமும் அறிவேன். புலம் பெயர்ந்து போன மகன் இந்த ஊர்க்கொடைக்காவது வருவான் என்று ஏக்கத்துடன் காத்திருந்த தகப்பனின் ஆவலாதியைப் புலப்படுத்துகிறது ‘ஊர்க்கொடை’ எனும் கவிதை. ‘’புலம் பெயர்ந்த மகன் என்பதன் வலி நமக்கு அர்த்தமாகிறது. அதுவும் படப்புச் சோறு என நாங்கள் கொண்டாடி உண்ணும் படையல் சோறும்கூட காத்திருந்து காகங்களுக்குப் போகும் சோகம். தூரா தொலைவுக்கு பிள்ளைகள் சம்பாதிக்கப் போய், அவர்கள் வரவு பார்த்திருக்கும் ஏக்கம் அது. அதுபோலவே, ‘ஈரம்’ என்றொரு கவிதை ‘உணவுப் பொட்டலத்தைப் பிரித்து என்று தொடங்குவது. தொடர்ந்து – ‘இரண்டு சலாம்களுக்கு பதில் பெறாது என்று முடியும்போது நமக்குள்ளும் ஈரம் கசிகிறது. மனிதநேயம் இருந்தாலொழிய இவ்விதம் எழுத வராது. ஊர்ப்பக்கம் வளர்ந்தவர்களுக்கு ஆறு, ஏரி, பொத்தை என்பன என்றுமே மறக்க இயலாத அனுபவங்களை தந்து நிற்கும். கவிஞர் சிந்தாவுக்கு அது நம்பியாறு. திருக்குறுங்குடி மலையில் புறப்பட்டு திருமலை நம்பியின் கால் நனைத்து, சித்தூர் தென்கரை மகராஜா சாஸ்தாவுக்கும் வடக்குவாழ் செல்விக்கும் தாகம் தீர்த்து தொடரும் ஆறு அது. நம்பியாறு.பற்றி நிறையப் பேசுகிறார் கவிஞர். ‘அத்தனை நினைவுகளையும் என் பிள்ளைகள் கேட்கும் முன் என்று கவலும் வரிகள் நம் நிர்க்கதியை உணர்த்துகின்றன. மேலும், ‘அத்தனைக் கள்ளக் குளியலுக்குப் என்கிறார். ஆமாம் !மணல் துகள்களே இன்றெமக்கு அன்று பாய்ந்த யாறுகளை நினைவுபடுத்துகின்றன. தொடர்ந்து நம் இயலாமைகளையும் உரைக்கிறார். ‘அன்று கட்டிய மணல் வீடுகளை ஆறு கரைத்தது இன்று கட்டிய வீடு ஆற்றை கரைத்தது என்று எவ்வளவு சீரழிந்த நிலைமையை கவிதை பேசுகிறது! மேலும் கடந்து தாண்டிப் போய் முறையிடுகிறார் – ‘அடுதத தேர்தல்வரை என்று. இங்கு நம்புவது மீன்கள் மட்டுமல்ல. பறவவகள், விலங்குகள், தாவரங்கள் அனைத்துமேதான். அஃதேபோல் ‘ஆற்று வழி’ என்ற கவிதையில் சொல்கிறார் – ‘எங்கோ பெற்றுக்கொண்ட தெங்கு ஒன்றை என்று. தெங்கு என்றால் தென்னை மரத்திலிருந்து முற்றிக் கழன்று விழுந்த தேங்காய். மேலும் சொல்கிறார் – ‘யாருடைய ஈமக் கடனையோ என்று. எந்த நோக்கமும் திட்டமிடலும் இல்லாமல் கால்வாய் / ஓடை/ சிற்றாறு / ஆறு / நதி / பெருநதி என எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் நீரொழுக்கு தன் பணியை ஆற்றிக்கொண்டே நடக்கிறது. ஆறு போல் தானே அமைய வேண்டும் அரசியலும், மதமும், சமூகமும், ஆன்மீகமும், அவற்றின் கடமைகளும்! ஏன் அவ்வாறு இல்லை என அல்லாடுகிறது நம் மனம் அவ்வாறு இல்லை என்பதுகூட விடயமல்ல, ஏன் எதிற்மறையாக இருக்கிறது? கவிஞரே ‘மழைத்தொழுகை’ எனும் கவிதையில் குறிப்பிஇருக்கிறது வெட்டப்பட்டு பொட்டலாகி் போனத் திடலில்தான் என்ற உண்மை. ஏன் கோரை? இங்கு சுருட்டப்படுவது கோரம்பாய் என்பதனால். கோரம்பாய், கோரைத் தட்டி, கோரைப் படுதா, பன்றிகள் சேற்றில் தொடர்ந்து பறித்துத் தின்னும் கோரைக் கிழங்கு யாவுமே நம் நினைவுக்கு வருகின்றன. கூடவே கண்மணி குணசேகரன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘கோரை’ எனும் சிறந்த நாவலும். கவிஞர் சிந்தா, தாம் கைக்கொள்ளும் கருப்பொருளுக்கும் உரிப்பொருளுக்கும் உண்மையாக இருக்கிறார். பாசாங்குகள் அற்ற மொழிப் பயன்பாடு, கவிச் செழுமையை மேம்படுத்த உதவுகின்றது. கவிதை என்பது மொழியின் உன்னதம். தமிழ்மொழியில் கவிதைக்கு ஏழாயிரம் ஆண்டுப் பாரம்பரியமும், தொன்மையும், அழகும், வளமும், நயமும் உண்டு. தமிழில் கவிதை எழுதிச் சாதிப்பது என்பது எளிவந்த காரியம் அல்ல. மிகுந்த நம்பிக்கை தரும் இந்தக் கவிதைத் தொகுப்பை வழங்கியுள்ள கவிஞர் சிந்தா, மேலும் பயணிக்க, தடம்பல சமைக்க நமது வாழ்த்துகள். நம்பியாறும் வாழ்த்தும் என்பது நமது நம்பிக்கை.
நாஞ்சில் நாடன் கோயம்புத்தூர் – 641 042. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |