Posted by S Peer Mohamed
(peer) on 10/25/2022 9:30:28 AM
|
|||
சென்னை: இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46), சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 21ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 மணிக்கு ஜெகதாம்பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது. பின்னர் மீனவர்களின் படகிற்குள் சென்று சோதனையிட்ட பிறகு, நீங்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளீர்களா? போதைப் பொருட்கள் ஏதும் கடத்துகிறீர்களா? என கேட்டுள்ளனர். என்ன நடக்கிறது என புரியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர். இலங்கை கடற்படைதான் நம்மை தாக்குகிறது என்று நினைத்துள்ளனர். ஆனால், இந்தியில் பேசச் சொல்லி தாக்கியதன் மூலம், தாக்கியவர்கள் இந்திய கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது. மீனவர்கள் சென்ற படகில் இந்திய தேசியக் கொடி கட்டப்பட்டு இருந்ததைப் பார்த்த பின்பும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். படகில் சென்ற மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மீனவர் அனைவரையும் மண்டியிடச் செய்துள்ளனர். கடற்படையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்தி மொழியில் பேசியதற்கு, மீனவர்கள் தமிழில் பதில் கூறியுள்ளனர். இதில் கோபமுற்ற இந்திய கடற்படை காவலர்கள் இந்தி மொழியில் பதில் சொல்லுமாறு மீனவர்களை தாக்கி உள்ளனர். மீனவர்களை தரையில் அமரச் சொல்லி காலணி காலால் அவர்கள் மீது ஏறி நின்றும், கைகளை பின்னால் கட்டி மண்டியிடச் செய்தும் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுக்குள்ளே இந்தியில் பேசிக்கொண்டு, இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதும், ஷூ காலால் எட்டி உதைப்பதுமாக நடந்துள்ளனர். பின்னர் அனைவரின் ஆதார் கார்டுகளையும் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘உங்களுக்கு இந்தி தெரியாதா?’ என்று கூறி இழிவான வார்த்தைகளால் மீனவர்களை திட்டியுள்ளனர். சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி எப்படி நடந்து கொண்டதோ அதை விட கொடூரமாக இந்திய கடற்படையினர் நடந்து கொண்ட தகவல் கேட்டு ரத்தம் கொதிக்கிறது. இந்திய கடற்படையினர் இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை எட்டி உதைத்து, காலால் மிதித்து ஏளனமாக நகைத்திருப்பது தமிழக மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது, கொலை வெறித் தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இந்த செயல் நியாயப்படுத்தவே முடியாத கடும் கண்டனத்துக்குரியது ஆகும். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திதான் இந்தியா என்று பேசுவதால் இராணுவத்தினர் கூட இந்தி மொழி பேசாதவர்களை அந்நியர்களாக நினைக்கும் அக்கிரமம் தலை தூக்கி உள்ளது. இதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்." என்று வைகோ கூறியுள்ளார். Thanks: இந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல்: வைகோ கண்டனம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |