Posted by S Peer Mohamed
(peer) on 12/18/2022 10:22:37 AM
|
|||
*ஆபீஸ் அப்பா - இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் * ஆபீஸ் அப்பா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் Retd EB அப்துல் காதர் அப்பா அவர்கள் இறையச்சமும் உயர்ந்த பண்பு நலன்களும் கொண்ட அரிய மனிதர் . அந்த காலத்திலேயே அரசு பணிகளில் இருந்து கொண்டே மார்க்க விஷயங்களிலும் ஈடுபாட்டோடு இருந்தவர். பணி ஓய்வுக்கு பிறகு முழுக்க முழுக்க மார்க்க வணக்க வழிபாடுகளில் கழித்த இபாதத்தாளி. எப்போதும் சுன்னத்தான கோலத்தில் காணப்படும் ஆபிஸ் அப்பா அவர்கள் , இஃதிகாஃப் இருப்பது அரிதான காலத்திலேயே ஒவ்வொரு ரமழானிலும் தனி ஒருவராக 6 வது தெரு பள்ளியில் இஃதிகாஃப் இருப்பார் . பெருநாள் தினங்களில் மீலாது மைதானத்தில் இருந்து தக்பீர் சொல்லி ஒரு குழு ஊர்வலமாக செல்லும் பாரம்பரிய வழக்கத்தை தலைமையேற்று நடத்தி செல்வார். சமீபகாலமாக இதில் கலந்து கொள்பவர்கள் குறைந்த போதும் , பாரம்பரியத்தை விடாமல் தக்பீரை உரக்க முழங்கி வழிநடத்தி செல்வார் . வட்டாரத்தில் எந்த வீட்டில் கல்யாணம் , மவ்த் மற்றும் ஹஜ்ஜுக்கு போதல் எனறு எந்த வைபவமாக இருந்தாலும் அங்கு தக்பீர் முழங்கி துஆ செய்யும் மாண்பாளர் . எல்லாவற்றிற்கும் மேலாக , மீலாது மேடையில் எந்த மார்க்க நிகழ்ச்சி நடந்தாலும் , இயக்க , கொள்கை வேறுபாடுகளை கடந்து , பாரபட்சம் இல்லாமல் முன்வரிசையில் அமர்ந்து பங்குபெறும் பண்பாளர் . முதல் வருட ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சியை கண்டு பூரித்தவராக , “இந்த மக்தப்களின் எதிர்காலம் என்னவாகுமோ , வளரும் தலைமுறைக்கு இப்படி ஏதேனும் நிகழ்ச்சி யாரேனும் நடத்துவார்களா என ஏங்கி கொண்டிருந்த நேரத்தில் அல்லாஹு த ஆலா ஈமான் அறக்கட்டளையை கொண்டு அதை பூர்த்தி செய்துள்ளான்” என பூரிப்புடன் சொல்லி துஆ செய்தார்கள் . அதை தொடர்ந்த வருடத்தில் அவரது சொந்த பேத்தியே நமது ஈமானிய மலர்கள் மதரஸாவில் ஓதி , ஈமானிய மொட்டுகளில் சூரா பகரா மனன போட்டியில் கலந்து பாக்கியம் பெற்றது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . இந்த காலகட்டத்திலும் , உங்களுக்கு தெரிந்த ஒரு அப்பழுக்கற்ற மனிதரை காட்டுங்கள் என்றால் , துணிந்து கைகாட்ட தகுதியான ஒரு நபரை இழந்திருப்பது நமது ஊருக்கே ஒரு பேரிழப்பாகும் . “இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் “ என்ற சொல்லுக்கு மிக பொருத்தமானவரை ஊர் இழந்துள்ளது . தன்னுடைய நேரத்தை பெரும்பகுதியை பள்ளிவாசலிலும் இறைவணக்கத்திலும் கழித்த இந்த பாக்கியவானை அல்லாஹ் அவனது தேர்ந்தெடுத்த அடியாராக பொருந்தி கொள்வானாக .அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து , உயர்ந்த சுவனபதியை அருள்வானாக . அவர்களின் குடும்பத்தாருக்கு ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |